செய்திகள்
சீமான்

அதிமுக -திமுகவுக்கு மாற்றாக நாம் தமிழர் கட்சியை ஆதரியுங்கள்- சீமான் பேச்சு

Published On 2021-03-30 10:08 GMT   |   Update On 2021-03-30 10:08 GMT
கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் தமிழகத்தில் தீய ஆட்சியை வழங்கியுள்ளன என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியுள்ளார்.

சென்னை:

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மதுரவாயல் தொகுதிக்குட்பட்ட போரூரில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் தமிழகத்தில் தீய ஆட்சியை வழங்கியுள்ளன. அதிலிருந்து மாற்றத்தை ஏற்படுத்தி தூய அரசியலை முன்னெடுக்கவே நாம் தமிழர் கட்சி உருவானது.

இலவசங்களை கொடுத்து மக்களை அடிமையாக்கி வைத்துள்ளனர். இதிலிருந்து மக்கள் விடுபட வேண்டும். அதற்காக மாற்று அரசியலையே நாங்கள் முன்னெடுத்து செல்கிறோம்.

அரசு பள்ளிகள், அரசு ஆஸ்பத்திரிகள் தர மற்றவையாக உள்ளன. 50 ஆண்டுகளில் தரமற்ற தலைவர்கள் ஆட்சி புரிந்ததால்தான் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால், அரசு பதவிகளில் இருப்பவர்களின் பிள்ளைகள், அரசு பள்ளியிலேயே படிக்க வேண்டும் என்கிற நிலையை ஏற்படுத்துவோம். அரசு ஆஸ்பத்திரியிலேயே சிகிச்சை பெற வேண்டும் என்கிற சட்டத்தையும் போடுவோம்.

அ.தி.மு.க.வுக்கு பதில் தி.மு.க., தி.மு.க.வுக்கு பதில் அ.தி.மு.க. என்பது மாற்றமல்ல. இத்தனை நாள் ஏமாந்து 2 கட்சிகளுக்கும் ஓட்டு போட்டதுபோதும். இன்னும் இலவசங்களை கவர்ச்சிகரமான அறிவிப்புகளையும் நம்பாதீர்கள்.

இந்த 2 கட்சிகளுக்கும் மாற்றாக நாம் தமிழர் கட்சியை ஆதரியுங்கள்.

இன்று நாட்டில் லஞ்ச ஊழலை சகித்து கொள்ளும் நிலை ஏற்பட்டுவிட்டது. யார் கொள்ளையடிக்கவில்லை. யார் லஞ்சம் வாங்க வில்லை என்று நம்மைநாமே கேட்டுக் கொண்டு அடிமை வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

இதுபோன்ற தவறுகளை நாங்கள் தட்டிக்கேட்டு வருகிறோம். ஆட்சிக்கு வந்த பிறகு லஞ்ச ஊழலே இல்லாமல் ஆக்கி காட்டுவோம்.

எதிர்கால சந்ததியினர் நலனுக்காகவே கடந்த 10 ஆண்டுகளாக அரும்பாடு பட்டு வருகிறோம். கடந்த 50 ஆண்டுகளில் செய்யாததையா அடுத்த 5 ஆண்டுகளில் திராவிட கட்சிகள் செய்துவிட போகின்றன.

எனவே இந்த முறை விவசாயி சின்னத்துக்கு ஓட்டு போட்டு எங்களை ஆதரியுங்கள். நிச்சயம் மாற்றத்தை ஏற்படுத்துவோம்.

இவ்வாறு சீமான் பேசினார்.

Tags:    

Similar News