செய்திகள்
திருப்பத்தூரில் ராமதாஸ் பிரசாரம் செய்த காட்சி.

திமுக ஆட்சிக்கு வந்தால் ஏலகிரி, ஜவ்வாதுமலையை சூறையாடிவிடுவார்கள்- ராமதாஸ்

Published On 2021-03-30 07:35 GMT   |   Update On 2021-03-30 07:35 GMT
அதிமுக தேர்தல் அறிக்கை என்பது அட்சயபாத்திரம். ஆட்சிக்கு வந்ததும் அனைத்தும் நிறைவேற்றப்படும். திமுக ஆட்சிக்கு வந்தால் எதுவுமே மிஞ்சாது.

திருப்பத்தூர்:

திருப்பத்தூர் சட்டசபை தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிடும் பா.ம.க. வேட்பாளர் டி.கே.ராஜாவை ஆதரித்து பா.ம.க. நிறுவனர் டாக்டர். ராமதாஸ் திருப்பத்தூரில் பிரசாரம் செய்தார்.

வேலூர் மாவட்டம் 13 சட்டசபை தொகுதிகளை கொண்டிருந்தது. இதனால், நிர்வாக வசதிகள் சரிவர மேற்கொள்ள முடியவில்லை. எனவே, வேலூர் மாவட்டத்தை 3ஆக பிரிக்க வேண்டும் என பா.ம.க. சார்பில் பல கட்டப் போராட்டங்களை நடத்தினோம். திருப்பத்தூரில் மட்டும் 10-க்கும் மேற்பட்ட போராட்டங்களை பா.ம.க. நடத்தியுள்ளது.

அதன் விளைவு, கடந்த 2019-ம் ஆண்டு திருப்பத்தூர் மாவட்டம் உதயமானது. புதிய மாவட்டத்தால் இப்பகுதி மக்களின் பல்வேறு தேவைகள் உடனுக்குடன் நிறைவேற்றப்பட்டு வருகிறது.

இதற்கெல்லாம் மக்கள் நன்றிக் கடன் செலுத்த வேண்டாமா? அதை எப்படி செய்வது என்றால் அ.தி.மு.க.வுக்கு இரட்டை இலை சின்னத்திலும், பா.ம.க.வுக்கு மாம்பழ சின்னத்திலும் பொது மக்கள் வாக்களிக்க வேண்டும்.

அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை என்பது அட்சயபாத்திரம். ஆட்சிக்கு வந்ததும் அனைத்தும் நிறைவேற்றப்படும். தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் எதுவுமே மிஞ்சாது. இங்குள்ள ஏலகிரி மலையும், ஜவ்வாது மலையையும் தி.மு.க.வினர் சூறையாடி விடுவார்கள்.

இதுமட்டுமா? தி.மு.க. ஆட்சிக்குவந்தால் சட்டம் ஒழுங்கு கெடும், நில அபகரிப்பு அதிகரிக்கும்,வியாபாரிகள் பாதிக்கப்படுவார்கள், பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாமல் போகும், இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். இது போன்ற அவல நிலை வராமல் தடுக்க அ.தி.மு.க. கூட்டணியை ஆதரிக்க வேண்டும்’’. என்றார்.

Tags:    

Similar News