செய்திகள்
கனிமொழி

முதல்வர் மாற்றி மாற்றி பேசுகிறார்... உடன்குடியில் கனிமொழி எம்.பி. பேச்சு

Published On 2021-03-29 11:14 GMT   |   Update On 2021-03-29 11:14 GMT
தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் அராஜகம் நடக்கும் என்று எடப்பாடி பழனிசாமி சொல்கிறார். உங்களை விட அராஜகம் செய்யக் கூடியவர்கள் உலகத்தில் யாரும் இல்லை என்று கனிமொழி எம்பி பேசியுள்ளார்.

உடன்குடி:

தி.மு.க. மாநில மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி. தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்து வருகிறார். இன்று அவர் திருச்செந்தூர் தொகுதிக்கு உட்பட்ட உடன்குடியில் பிரசாரம் செய்தார். அவர் பேசியதாவது:-

தமிழகம் முழுவதும் யாருக்கு ஓட்டு அளிக்க வேண்டும் என்பதில் மக்கள் தெளிவாக உள்ளனர். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை வீட்டுக்கு அனுப்ப தேர்தலுக்காக காத்துக்கொண்டு இருக்கிறார்கள்.

தமிழகம் வெற்றி நடைபோடுவதாக கூறுகிறார்கள். ஆனால் அனைத்திலும் ஊழலில் ஈடுபட்டு முதல்-அமைச்சரும், அமைச்சர்களும் தான் வெற்றி நடைபோடுகிறார்கள். எனவே இந்த தேர்தலில் அவர்களை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். அதற்கான நாள் தான் ஏப்ரல் 6-ந் தேதி.

அ.தி.மு.க. ஆட்சியை அகற்ற தி.மு.க. வுக்கு வாக்களித்து ஸ்டாலினை முதல்வராக்க வேண்டும். தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் அராஜகம் நடக்கும் என்கிறார். உங்களை விட அராஜகம் செய்யக் கூடியவர்கள் உலகத்தில் யாரும் இல்லை.

இந்த தூத்துக்குடியிலேயே 13 பேரை சுட்டுக் கொன்ற ஆட்சிதான் அ.தி.மு.க. ஆட்சி. அதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இன்று வரை எந்தவித உதவியும் அவர் செய்ய வில்லை.

தூத்துக்குடியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது தாக்குதல், வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது தாக்குதல் நடத்திய இப்படிபட்டவர்கள் அராஜகத்தை பற்றி பேசுகிறார்கள். அராஜகத்தின் மொத்த உருவமே அ.தி.மு.க.தான்.

சாத்தான்குளத்தில் அப்பாவி தந்தை-மகனை அடித்துக்கொன்றனர். இது அரசாங்கமே நடத்திய வன்முறை. ஏனெனில் காவல்துறை முதல்-அமைச்சரின் கட்டுப்பாட்டில் தான் உள்ளது. பெண்கள், விவசாயிகள் என யாருக்குமே இந்த ஆட்சியில் பாதுகாப்பு இல்லை.

இதுவரை யாருக்கும் வேலைவாய்ப்பு வழங்க வில்லை. தமிழ்நாட்டில் புதிதாக எந்த ஒரு தொழிற்சாலையும் உருவாக்க வில்லை.


முதல்-அமைச்சர் அன்று ஒன்றும், இன்று ஒன்றும் என மாற்றி, மாற்றி பேசுகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு வேளாண் சட்டங்களை ஆதரித்து வாக்களித்து விட்டு அது நல்ல சட்டம் என கூறினார்.

அதேபோல் குடியுரிமை சட்டத்தை ஆதரித்து வாக்களித்தனர். அந்த சட்டத்திற்கு எதிராக இந்தியா முழுவதும் போராட்டம் நடந்தது. ஆனால் அந்த சட்டத்தால் பாதிப்பு இல்லை என கூறினார்.

இன்று மக்கள் கோபத்தில் உள்ளதை அறிந்து கொண்டு எந்த சட்டத்தை ஆதரித்து அவர்கள் வாக்களித்தனரோ அந்த சட்டத்தையை திரும்ப பெற அழுத்தம் கொடுப்போம் என்கிறார். இப்படி தன்னுடைய நிலையை மாற்றி, மாற்றி பேசி மக்களை முட்டாள் என்று நினைத்து கொண்டு இருக்கிறார். இதற்கு தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு மக்கள் தகுந்த பாடம் கற்பிப்பார்கள்.

அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கூறியதை எதுவும் அவர்கள் நிறைவேற்றவில்லை. 90 சதவீதம் மானியத்தில் இருசக்கர வாகனம் வழங்கப்பட்டு உள்ளதாக கூறினர். ஆனால் எங்கு போய் கேட்டாலும் மக்கள் எங்களுக்கு கிடைக்கவில்லை என கூறினர்.

இதேபோல் அவர்கள் கூறிய கல்வி கடன், இலவச செப்டாப்பாக்ஸ் என அவர்கள் எதையும் நிறைவேற்றவில்லை. ஆனால் தி.மு.க. ஆட்சியில் கலைஞர் சொன்னதை நிறைவேற்றிக்காட்டினார்.

தற்போது தி.மு.க. தேர்தல் அறிக்கையில் பெண்களுக்கு மாதந்தோறும் உரிமைத்தொகை ரூ.1,000, 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி, கல்விக்கடன், விவசாயக்கடன்கள் ரத்து, முதியோர் உதவித்தொகை உயர்த்தி வழங்குவது, கொரோனா நிவாரணத்தொகையாக அனைத்து குடும்பங்களுக்கும் ரூ.4,000 வழங்கப்படும் என கூறப்பட்டு உள்ளது.

இந்த திட்டங்கள் கிடைப்பதற்கு தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவு தாருங்கள். தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் சுயஉதவிகுழுக்கள் மீண்டும் சிறப்பாக செயல்படும்.

தமிழகத்தில் உள்ள 3 லட்சத்து 50 ஆயிரம் காலிப்பணியிடங்கள், தமிழகத்தை சேர்ந்த வாலிபர்கள், இளம்பெண்களை கொண்டு நிரப்பப்படும். எனவே தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவு தாருங்கள். 

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News