செய்திகள்
நாகர்கோவில் செட்டிகுளத்தில் இன்று எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்த போது எடுத்த படம்.

பொய்யான வாக்குறுதிகள் அளித்து திமுக-காங்கிரஸ் மக்களை ஏமாற்றுகிறது: எடப்பாடி பழனிசாமி

Published On 2021-03-27 06:57 GMT   |   Update On 2021-03-27 06:57 GMT
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நாகர்கோவில் செட்டிக்குளத்தில் அ.தி.மு.க மற்றும் பா.ஜ.க. வேட்பாளர்களை ஆதரித்து இன்று பிரசாரம் செய்தார்.
நாகர்கோவில்:

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நாகர்கோவில் செட்டிக்குளத்தில் அ.தி.மு.க மற்றும் பா.ஜ.க. வேட்பாளர்களை ஆதரித்து இன்று பிரசாரம் செய்தார்.

அப்போது முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

நடக்க இருக்கும் கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன், சட்டமன்ற வெற்றி வேட்பாளர்கள் நாகர்கோவில் எம்.ஆர்.காந்தி, குளச்சல் குமரி பா.ரமேஷ், கன்னியாகுமரி கழக வேட்பாளர் தளவாய் சுந்தரம், பத்மநாபபுரம் ஜாண்தங்கம், விளவங்கோடு பா.ஜ.க. வேட்பாளர் ஜெயசீலன், கிள்ளியூர் ஜூட் தேவ் ஆகியோர்களுக்கு வாக்களிக்க வேண்டுகிறேன்.

இன்று அ.தி.மு.க தலைமையிலான கூட்டணி வெற்றி வேட்பாளர்களுக்கு உங்கள் வாக்குகளை அளியுங்கள். பொன்.ராதாகிருஷ்ணன் ஏற்கனவே இந்த தொகுதியில் வெற்றிபெற்றவர். அமைச்சராக இருந்து பல்வேறு பணிகளை செய்திருக்கிறார். தளவாய்சுந்தரம் முன்னாள் அமைச்சராக இருந்தவர். அவருக்கும் மீண்டும் ஒரு வாய்ப்பு கொடுங்கள்.


பொன்.ராதாகிருஷ்ணன் திறமையானவர். இந்த மாவட்டம் எழுச்சிபெற, ஏற்றம் பெற மத்திய அரசிடம் பேசி பல திட்டங்கள் பெற்று தந்திருக்கிறார். மாவட்டம் வளர்ச்சிபெற அவருக்கு வாக்களியுங்கள்.

கடந்த தேர்தல்களில் சட்டமன்றம் மற்றும் பாராளுமன்றத்தில் பிரதிநிதிகள் இல்லாததால் பல திட்டங்கள் வராமல் போனது. இங்கு நம் கூட்டணி பிரதிநிதி இல்லாததால் இந்த பகுதி மக்கள் பிரச்சனைகள் எங்களிடம் கொண்டு வரப்படவில்லை. இங்குள்ள திட்டம் நிறைவேற மத்தியில் ஆட்சியில் இருக்கும் கட்சியின் பிரதிநிதியை வெற்றி பெறவையுங்கள். மத்தியிலும் மாநிலத்திலும் பிரதிநிதிகள் இல்லாமல் இருந்தால் எப்படி வளர்ச்சி நடக்கும். எப்படி நீங்கள் வைக்கும் கோரிக்கை நிறைவேறும்.

முழுமையான திட்டங்கள் இங்கு வந்துசேரவில்லை. சட்டமன்றம் மற்றும் பாராளுமன்றத்திலும் கோரிக்கை வருவதில்லை. அப்படி வந்தாலும் தொகுதியைத்தான் அவர்கள் பார்ப்பார்கள், மாவட்டத்தை கவனிக்கமாட்டார்கள். எனவே பொன்.ராதாகிருஷ்ணன் வெற்றிபெற்றால் மாவட்டம் வளர்ச்சிபெறும். ஏனென்றால் மத்தியில் பா.ஜ.க ஆட்சி நடப்பதால் திட்டங்களை கொண்டுசெல்ல முடியும்.

எதிர்கட்சியினர் தவறான, அவதூறான செய்திகளை பரப்புகிறார்கள். கன்னியாகுமரியில் சரக்குப் பெட்டக துறைமுகம் வருவதாக அவதூறு செய்தி தேர்தல் காரணமாக பரப்பப்படுகிறது. சரக்குப்பெட்டக துறைமுகம் அமைக்கப்பட மாட்டாது. மீண்டும் சொல்கிறேன். மக்கள் எதிர்கட்சிகள் சொல்வதை நம்ப வேண்டாம். தேர்தல் நேரத்தில் தி.மு.க-காங்கிரஸ் சேர்ந்து மீனவர்களின் ஓட்டுக்காக இதை பரப்புகிறார்கள்.

துறைமுகத் திட்டத்துக்காக நியமிக்கப்பட்ட சிறப்பு அதிகாரிகள் எடுக்கப்பட்டு விட்டார்கள். எதிர் கட்சிகள் மக்களிடம் சூழ்ச்சி செய்கிறார்கள். அவர்கள் ஏமாற்றுவதில் கைதேர்ந்தவர்கள். எனவே மீனவர்களும் பொதுமக்களும் பொய் செய்தியை நம்ப வேண்டாம். ஆணித்தரமாக சொல்கிறேன் கன்னியாகுமரியில் வர்த்தக துறைமுகம் அமைக்கப்பட மாட்டாது.

நான் கடினப்பட்டுதான் பேசுகிறேன். எதிர்கட்சிகள் பொய் பிரசாரத்தை முறியடிக்க வேண்டும் என்பதால் பேசி தொண்டை கட்டிவிட்டது. எங்கு பார்தாலும் பொய்தான். பொய்யை மூலதனமாகக் கொண்டு அரசியல் நடத்தும் கட்சி தி.மு.க.-காங்கிரஸ் கட்சிகள் தான்.

நாகர்கோவில் நகராட்சி மக்களின் கோரிக்கையை ஏற்று மாநகராட்சி ஆக்கினோம். தி.மு.க, காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கோரிக்கையை நிறைவேற்றினார்களா? எங்களுக்கு எம்.எல்.ஏ. முக்கியம் அல்ல. மக்கள்தான் முக்கியம். நாகர்கோவிலை மாநகராட்சியாக தரம் உயர்த்தியது ஜெயலலிதா அரசு. நல்ல சாலை, குடிநீர் வசதிகளை கொண்டுவருகிறோம். தேர்தல் சமயத்தில் கூறிய வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறோம். தேர்தல் சமயத்தில் சொன்ன மிக்‌சி, கிரைண்டர், மின்விசிறிகளை வழங்கினோம்.

தி.மு.கவிடம் சொல்லுங்கள், அ.தி.மு.க திட்டங்களை கொடுத்தார்கள் என்று. கடந்த பத்து ஆண்டுகளாக எதுவுமே செய்யவில்லை என தவறான தகவலை பரப்புகிறார்கள். தி.மு.க. ஆட்சி இருண்ட ஆட்சி. கடுமையான மின்வெட்டு இருந்தது. எப்போது மின்சாரம் வரும், எப்போது போகும் என தெரியாது. நாட்டின் வளர்ச்சிக்கு மின்சாரம் தேவை. இன்று தடையில்லா மின்சாரம் வழங்குகிறோம்.

இப்போது அதிகமான தொழிற்சாலைகள் தமிழகத்துக்கு வருகிறது. அதன் மூலம் பொருளாதார ஏற்றம் பெறுகிறது. படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்திருக்கிறது. மத்திய அரசு தேவையான உதவிகளை செய்கிறது.

இன்று தமிழகம் வெற்றி நடைப்போடும் தமிழகம் என்ற நிலையை அடைந்துள்ளது. விவசாயம், மீன்பிடி தொழிலுக்கு ஏராளமான திட்டங்கள் கொண்டுவந்துள்ளோம். மீனவர்களின் பழுதடைந்த வீடுகளுக்கு பதிலாக கான்கிரீட் வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும். மானியத்தோடு, வரி விலக்கோடு விசைப் படகுகளுக்கு வழங்கும் ரூ.18 ஆயிரம் லிட்டர் டீசல், இனி ரூ.20 ஆயிரம் லிட்டராக வழங்கப்படும்.

மண்ணெண்ணை மானியம் ரூ.3400ல் இருந்து ரூ. 4500 ஆக உயர்த்தப்படும். மீன்பிடி தடைக்கால நிவாரணம் ரூ.5 ஆயிரம் கொடுப்பதை, ரூ. 7500 ஆக வழங்கப்படும். மீனவர்கள் பல்வேறு பிரச்சனையால் கடன் பெறுகிறார்கள்.

மீனவர்களுக்கென்று மீன்வள வங்கி ஏற்படுத்தப்படும். மீனவர்களுக்கென்று தனி வங்கி ஏற்படுத்தப்படும். அதன் மூலம் அவர்கள் கடன் பெற்று மேம்பாடு அடையலாம். மீனவர்கள் விபத்தில் இறந்தால் அவர்களுக்கு நிவாரணமாக ரூ. 2 லட்சம் வழங்கப்பட்டதை, ரூ.5 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும்.

உள்நாட்டு மீனவர்களுக்காக விரிவான திட்டங்கள் கொண்டுவரப்படும். கன்னியாகுமரி சுற்றுலா மாவட்டம். கன்னியாகுமரியில் சுற்றுலாவை மேம்படுத்த அரசு நடவடிக்கை எடுக்கும். திருவள்ளுவர் சிலைக்கு, விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கும் இடையே ரூ. 20 கோடியில் பாலம் அமைத்து சுற்றுலா பயணிகள் வசதிக்கு திட்டம் நிறைவேற்றப்படும்.

கன்னியாகுமரியில் கூடுதல் படகு நிறுத்து தளம் அமைக்கப்படுகிறது. குமரி மாவட்டத்தில் மட்டும் நிறைய திட்டங்கள் அறிவித்திருக்கிறோம். ஏழை எளிய மக்கள் பயன்பெற தமிழகம் முழுவதும் 2 ஆயிரம் அம்மா மினி கிளினிக் கொண்டுவந்துள்ளோம்.

குமரி மாவட்டத்தில் 41 அம்மா மினி கிளினிக் கொண்டுவந்துள்ளோம். குடிமராமத்து திட்டம் வெற்றிகரமாக நடைபெற்றுள்ளது. ஏரி குளங்களை தூர்வாரி தண்ணீர் சேமித்து வைத்துள்ளோம்.

அனைத்து அரிசி அட்டைதாரர்களுக்கும் ஆண்டுக்கு ஆறு சிலிண்டர் இலவசமாக வழங்கப்படும். பெண்கள் துணி துவைப்பது கடினமான பணி. அவர்கள் பணிச்சுமையை போக்கும் வகையில் எல்லா அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் வாஷிங் மிஷின் வழங்கப்படும். ரே‌ஷன் பொருட்கள் வீடு தேடி வந்து சேரும்.

கேபிள் கனெக்‌‌ஷன் அனைத்து வீடுகளுக்கும் வழங்கப்பட்டுள்ளது. இனி கட்டணம் இல்லாமல் கேபிள் கனெக்‌‌ஷன் வழங்கப்படும். விவசாய சங்கத்தினர், விவசாயிகள் கோரிக்கைகளை ஏற்று பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

மகளிர் குழுக்களின் கடன் தள்ளுபடி செய்யப்படும். ரே‌ஷன் அரிசி அட்டைதாரர்களுக்கு மாதம் 1500 ரூபாய் வழங்கப்படும். 18 வயது நிரம்பியவர்களுக்கு ஓட்டுனர் பயிற்சி வழங்கி, ஓட்டுனர் உரிமம் வழங்கப்படும். வீடும், நிலமும் இல்லாத ஏழை எளிய மக்களுக்கு சொந்த நிலம் வாங்கி கான்கிரீட் வீடு கட்டி கொடுக்கப்படும். நகரத்தில் வீடு இல்லாதவர்களுக்கு அடுக்குமாடி வீடுகள் கட்டி கொடுக்கப்படும். இன்னும் பல திட்டங்களை அம்மா அரசு அறிவித்துள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

பின்னர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தோவாளையில் பிரசாரம் மேற்கொண்டார்.
Tags:    

Similar News