செய்திகள்
கமல்ஹாசன்

எங்கள் வேட்பாளர்கள் கொள்ளையடிக்க மாட்டார்கள்- சென்னை பிரசாரத்தில் கமல்ஹாசன் பேச்சு

Published On 2021-03-26 08:05 GMT   |   Update On 2021-03-26 08:05 GMT
எங்கள் ஆட்சியில் வரவு, செலவு கணக்குகளை முறையாக, வெளிப்படையாக காட்டி விடுவோம் என சென்னையில் பிரசாரத்தில் ஈடுபட்ட கமல்ஹாசன் பேசினார்.
சென்னை:

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் சென்னை அண்ணாநகர் தொகுதிக்கு உட்பட்ட அரும்பாக்கம் மார்க்கெட் பகுதியில் திறந்த வேனில் நின்றபடி தனது கட்சி வேட்பாளரை ஆதரித்து இன்று காலை பிரசாரம் செய்தார்.

உங்கள் தொகுதியின் வேட்பாளர் பொன்ராஜ் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் இருக்கிறார். அதில் இருந்து மீண்டும் வரும் அவர் விரைவில் உங்களை சந்திப்பார்.

மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் சம்பாதிக்கும் எண்ணத்தில் அரசியலுக்கு வரவில்லை.

வெற்றி பெற்றதும் தொகுதிக்கு என்ன செய்யப் போகிறோம் என்பதை ‘பாண்டு’ பத்திரத்தில் மக்கள் நீதி மய்ய வேட்பாளர்கள் எழுதிக் கொடுத்து வருகிறார்கள். நேர்மையானவர்களுக்கே இந்த தைரியம் வரும். உங்களுக்கு கிடைத்துள்ள இந்த வாய்ப்பை நீங்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

50 ஆண்டுகால ஆட்சியில் நைந்து கிடக்கும் தமிழகத்தை சீரமைக்க வேண்டியது உங்கள் கடமையாகும். அதற்கான கருவியாக நீங்கள் இருந்து நாங்கள் கடமையாற்ற அனுமதி அளிக்க வேண்டும்.

ஏப்ரல் 6-ந் தேதி அதற்கான விதையை தூவுங்கள். நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் 5 ஆண்டுகளில் இளைஞர்கள், பெண்களுக்கான திட்டங்களை நிறைவேற்றி காட்டுவோம்.

இலவசங்கள் ஏழ்மையை போக்காது. உழைப்புக்கு ஏற்ற ஊதியத்துக்கு ஏற்பாடு செய்து கொடுத்தால் நீங்கள் மட்டுமின்றி உங்கள் குடும்பமும் வாழ முடியும். அதனை மக்கள் நீதி மய்யம் செய்து கொடுக்கும். இல்லத்தரசிகளுக்கு ஊதியம் என்ற திட்டத்தை 2 ஆண்டுகளுக்கு முன்பே தெரிவித்துவிட்டோம். அதை இப்போது 2 கட்சிகளுமே காப்பி அடித்துள்ளன.

மக்களுக்கான நல்ல திட்டங்களை வகுக்கும் கட்சி மக்கள் நீதி மய்யம் என்பதை பெற்று இருக்கிறோம்.

எங்கள் ஆட்சியில் வரவு, செலவு கணக்குகளை முறையாக, வெளிப்படையாக காட்டி விடுவோம். எம்.எல்.ஏ. நிதியும் எவ்வளவு வந்துள்ளது? எவ்வளவு செலவு செய்துள்ளோம் என்பதை நீங்களே ஆன்லைனில் பார்த்துக் கொள்ளலாம். கணக்கு கேட்பதற்கு இன்னொரு எம்.ஜி.ஆர்.வரவேண்டியது இல்லை. நீங்கள் ஒவ்வொருவரும் புரட்சித் தலைவராக மாறி கணக்கு கேட்கலாம்.

எங்கள் வேட்பாளர்கள் வெற்றி பெற்றால் தேவையான அளவுக்கு ஊதியத்தை எடுத்துக்கொண்டு மீதியை மக்களுக்கே கொடுத்து விடுவார்கள். ஒரு ரூபாய் சம்பளம் வாங்கிக் கொண்டு கோடிக்கணக்கில் சுருட்டியது போன்று எங்கள் வேட்பாளர்கள் செய்ய மாட்டார்கள். இனி அது போன்று நடக்காது.

இப்போதே பல இடங்களில், ‘‘நீங்கள் ஜெயிச்சிட்டீங்க’’ என்று மக்கள் சொல்வதை எங்களால் கேட்க முடிகிறது. அந்த குரல் பெருக வேண்டும்.

இவ்வாறு கமல்ஹாசன் பேசினார்.
Tags:    

Similar News