செய்திகள்
சீமான்

பாஜகவின் உண்மையான ‘பி டீம்’ திமுக- சீமான் கடும் தாக்கு

Published On 2021-03-26 07:03 GMT   |   Update On 2021-03-26 07:03 GMT
பிரதமர் மோடி கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தரகராக உள்ளார் என்று சீமான் கூறினார்.
கோவை:

கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி கோவை சிவானந்தா காலனியில் நடந்த பொதுக்கூட்டத்தில் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார். அவர் கூறியதாவது:-

எதிர்க்கட்சிகள் கோடிகளை கொட்டி தேர்தலில் போட்டியிடுகின்றன. நாங்கள் பதவிக்காக போட்டியிடவில்லை. மக்களுக்கு உதவி செய்வதற்காக போட்டியிடுகிறோம். நாங்கள் தனித்து நின்றே போராடுவோம். 234 தொகுதிகளில் 117 தொகுதிகளை பெண்களுக்கும், 117 தொகுதிகளை ஆண்களுக்கும் ஒதுக்கி உள்ளோம்.

தமிழக அரசியல் களத்தில் தற்போது ஏ டீம், பி டீம் என வார்த்தைகள் கண்டுபிடித்து பேசுகிறார்கள். ஆனால் உண்மையில் பாரதிய ஜனதாவின் பி டீம் யாரென்றால் தி.மு.க. தான். அதற்கு பல உதாரணங்கள் உள்ளன. 1998-ல் முதன்முதலாக பாரதிய ஜனதாவை தமிழகத்துக்குகொண்டு வந்தது அ.தி.மு.க. பிறகு அந்த தவறை அ.தி.மு.க. உணர்ந்தபோது பா.ஜ.க.வை தூக்கி பிடித்தது கருணாநிதி. பா.ஜ.க. என்ற கட்சியால் 5 ஆண்டுகள் நிலையான ஆட்சியை கொடுக்க முடியும் என நிரூபிக்க காரணமானவர்கள் தி.மு.க.வினர்.

எனவே உண்மையில் பா.ஜ.க.வின் பி டீம் தி.மு.க. தான். தேர்தலுக்கு பின் பாரதிய ஜனதாவை ஆதரிக்க மாட்டோம் என தி.மு.க. உத்தரவாதம் அளிக்க தயாரா? விடியல் தரப் போவதாக கூறும் இவர்கள் தான் இருளை ஏற்படுத்தியவர்கள்.

மத்திய பாரதிய ஜனதா அரசு அதானி, அம்பானி ஆகியோருக்கு பொதுத்துறை நிறுவனங்களை தாரை வார்த்து விட்டனர். பிரதமர் மோடி கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தரகராக உள்ளார். சந்தை பொருளாதாரம் இருக்கும் வரை இந்தியா முன்னேறாது.

உற்பத்தி, பொருளாதாரம் தான் வளர்ச்சியை அளிக்கும். தமிழ்நாட்டில் தாமரை மலரவே மலராது. தமிழக மக்களின் உரிமைக்காக குரல் கொடுக்கும் எங்களை மக்கள் ஆதரித்து தேர்தலில் வெற்றி பெறச் செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News