செய்திகள்
ராகுல் காந்தி

வருகிற 28-ந்தேதி சென்னை வருகிறார் ராகுல் காந்தி

Published On 2021-03-25 07:30 GMT   |   Update On 2021-03-25 07:30 GMT
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தேர்தல் தேதி அறிவிக்கும் முன்பு 2 முறை தமிழ்நாட்டில் சுற்றுப்பயணம் செய்தார்.
சென்னை:

சட்டசபை தேர்தல் நெருங்கி விட்டதால் தமிழகத்தில் அனல் பறக்கும் பிரசாரம் நடந்து வருகிறது.

அரசியல் கட்சி தலைவர்களும், வேட்பாளர்களும் ஊர் ஊராக, வீதி வீதியாக சென்று பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் தி.மு.க. கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்து வருகிறார்.

இதுபோல் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன் உள்ளிட்ட தி.மு.க. கூட்டணி கட்சி தலைவர்களும் உச்சகட்ட பிரசாரத்தில் இறங்கி உள்ளனர்.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தேர்தல் தேதி அறிவிக்கும் முன்பு 2 முறை தமிழ்நாட்டில் சுற்றுப்பயணம் செய்தார். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு மீண்டும் வருகிற 28-ந்தேதி ராகுல் காந்தி தமிழகம் வருகிறார்.

28-ந்தேதி காலை விமானம் மூலம் சென்னை வரும் ராகுல்காந்திக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது. பின்னர் வேளச்சேரி செல்கிறார்.

வேளச்சேரியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் இளைஞர் காங்கிரஸ் தலைவர் அசன் மவுலானாவை ஆதரித்து ராகுல் காந்தி பிரசாரம் செய்கிறார். திறந்த வேனில் தொகுதி முழுவதும் சென்று பிரசாரம் செய்கிறார்.

அவருடன் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி உள்ளிட்ட முக்கிய தலைவர்களும் செல்கிறார்கள். இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது. சுற்றுப்பயண விவரம், பாதுகாப்பு ஏற்பாடுகள் ஆகியவையும் தயார் செய்யப்பட்டுள்ளன.

அன்று மாலை தி.மு.க. கூட்டணி கட்சிகளின் சார்பில் நடைபெறும் மாபெரும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக ராகுல்காந்தி சேலம் செல்கிறார். அங்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கும் கூட்டத்தில் பேசுகிறார்.

பிரதமர் மோடி வருகிற 30-ந்தேதி அ.தி.மு.க.-பா.ஜனதா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தமிழகத்தில் பிரசாரம் செய்கிறார். இந்த நிலையில் ராகுல் மீண்டும் தமிழகத்தில் பிரசாரம் செய்ய வருவதால் காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
Tags:    

Similar News