செய்திகள்
கமல்ஹாசன்

வருகிற ஏப்ரல் 6-ந்தேதியை சரித்திர நாளாக மாற்றுங்கள்- கமல்ஹாசன் பேச்சு

Published On 2021-03-23 10:31 GMT   |   Update On 2021-03-23 10:31 GMT
தமிழகத்தை ஆளும் இரு கட்சியினருக்குமே ஊழலை தவிர வேறு எதுவும் தெரியாது என்று கமல்ஹாசன் பேசியுள்ளார்.

திருச்சி:


திருச்சி திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளரை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் திருவெறும்பூரில் நடந்த பொதுக் கூட்டத்தில் பேசியதாவது:-

திருச்சி திருவெறும்பூர் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் அறிவித்து வழங்கிய 25 உறுதிமொழி பத்திரம் துணிச்சலான பிரகடனம் ஆகும். இது நேர்மையானவர்களால் மட்டும்தான் உருவாக்க முடியும். இந்த உறுதிமொழிகளை எழுதி கொடுத்து விட்டால் மக்களிடம் இருந்து ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது. நாங்கள் அதை அனைத்தையும் செய்து காட்டுவோம் என்ற நம்பிக்கையில் தான் அடுத்த தேர்தல் பற்றியும் பேசுகிறோம்.

இதற்கு பெயர் திமிர் அல்ல, எங்களின் தன்னம்பிக்கை. சுத்தமான குடிநீர், மருத்துவம், கல்வியை கொடுக்க வேண்டியது அரசின் கடமை ஆனால் அதை அவர்கள் செய்ய தவறி விட்டார்கள்.

நான் 234 தொகுதிகளிலும் பிரசாரம் மேற்கொண்டு வருகிறேன். எந்த ஊருக்கு சென்றாலும் திறந்து இருக்கும் சாக்கடை, போக்குவரத்து நெரிசல் இருக்க தான் செய்கிறது. இங்கு அரியமங்கலம் குப்பை மேட்டால் உங்களுக்கு என்ன பெருமை இருக்கிறது.

குப்பையில் இருந்து கூட மின்சாரத்தை உருவாக்க முடியும். எங்கள் கட்சி வேட்பாளர்களுக்கு அரசியலில் பயிற்சி இல்லாமல் இருக்கலாம். ஆனால் மக்களுக்கு சேவை செய்வதில் அதிக அனுபவம் இருக்கிறது.

ஆனால் தமிழகத்தை ஆளும் இரு கட்சியினருக்குமே ஊழலை தவிர வேறு எதுவும் தெரியாது. மாறி, மாறி ஒருவருக்கொருவர் வேட்டு வைத்துக்கொள்கிறார்கள். இல்லத்தரசிகளுக்கு நான் ஊதியம் தருவேன் என்று கூறியபோது எல்லோரும் சிரித்தார்கள், பெத்த தாய்க்கே ஊதியம் கொடுப்பதா என்று. உயிரை கொடுத்தவர்களுக்கு ஊதியம் கொடுக்க கூடாதா? நம்முடைய தாய்மார்கள் முன்னேறினால் தான் நம்முடைய தலைமுறைகள் முன்னேற முடியும்.

ஒவ்வொரு தமிழனின் தலையிலும் அரசு ரூ.65 ஆயிரம் கடன் சுமையை ஏற்றியுள்ளது. ஒன்றை மட்டும் பொதுமக்கள் மனதில் வைத்து கொள்ளுங்கள், இலவசங்கள் எப்போதும் உங்கள் ஏழ்மையை போக்காது. அதை நம்பாதிருங்கள் உழைப்பு மட்டும் தான் உங்களின் ஏழ்மையை போக்கும்.

நம்முடைய கட்சி வேட்பாளர்கள் அனைவருமே பொதுமக்களுக்கு சேவை செய்வதற்காக காத்திருக்கிறார்கள். ஆகவே பொதுமக்கள் இந்த முறை எங்களுக்கு வாய்ப்பு தாருங்கள். தமிழகத்தையே மாற்றி காட்டுவோம்.

மேலும் நான் செல்லக் கூடிய ஒவ்வொரு கூட்டத்திலும் ஒரு தலைவர்களை தேடி கொண்டு இருக்கிறேன். அவ்வாறு தேடி பிடித்தவர்கள் தான் மேடையில் இருக்கும் வேட்பாளர்கள். அண்மையில் தேர்தல் பிரசாரத்தில் ஒருவர் கூறினார், நாங்கள் ஆட்சிக்கு வந்த உடன் ஆற்றுக்கு சென்று மணலை அல்லலாம் என்று துணிச்சலாக கூறினார். அவர் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளார்கள்.

மக்களின் நீதி மலர வேண்டும் என்றால் அது மக்கள் நீதி மய்யத்தால் தான் முடியும். எங்கள் ஆட்சியின் கல்வி திட்டங்களின் படி மாணவ-மாணவிகள் படிக்கும் போது தற்கொலைகள் நிகழாது. வருகிற ஏப்ரல் 6-ந் தேதியை சரித்தர நாளாக மக்கள் மாற்றுங்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.


Tags:    

Similar News