செய்திகள்
ஆத்தூர் தொகுதி பா.ம.க. வேட்பாளரின் பிரசார வேனை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

பா.ம.க. வேட்பாளரின் பிரசார வேன் பறிமுதல் - பறக்கும்படையினர் நடவடிக்கை

Published On 2021-03-19 23:50 GMT   |   Update On 2021-03-19 23:50 GMT
உரிய அனுமதி சீட்டு இல்லாததால் ஆத்தூர் தொகுதி பா.ம.க. வேட்பாளரின் பிரசார வேனை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
திண்டுக்கல்:

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. வேட்பாளர் திலகபாமா போட்டியிடுகிறார். அவர் அந்த தொகுதியில் தீவிர வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.

நேற்று காலையில் சின்னாளபட்டி பகுதியில் திறந்த வேனில் திலகபாமா தனது கட்சியினருடன் சேர்ந்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது பூஞ்சோலை என்னுமிடத்தில் குறுகலான தெருவில் அவருடைய பிரசார வேன் செல்ல முடியவில்லை. இதைத்தொடர்ந்து அவர் வேனில் இருந்து இறங்கி நடந்து சென்று பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்.

அங்கு ஆத்தூர் தொகுதி தேர்தல் பறக்கும்படையினர் வந்தனர். அவர்கள் பா.ம.க. வேட்பாளரின் பிரசார வேனில் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்கு பரிசு பொருட்கள், பணம் இருக்கிறதா? என்று சோதனையிட்டனர். ஆனால் அந்த வேனில் பரிசு பொருட்கள், பணம் ஏதும் இல்லை.

இதையடுத்து அந்த பிரசார வேனுக்கு தேர்தல் அதிகாரியிடம் அனுமதி சீட்டு பெறப்பட்டுள்ளதா? என்று அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதுகுறித்து கட்சியினரிடம் விசாரணை நடத்தினர். பிரசார வேனுக்கு அனுமதி கடிதம் கேட்டு ஆத்தூர் தொகுதி தேர்தல் அதிகாரியிடம் மனு கொடுத்து இருப்பதாக பா.ம.க.வினர் தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து அந்த பிரசார வேனுக்கு உரிய அனுமதி கடிதம் இல்லாதது தெரியவந்தது. உடனே அந்த வேனை பறக்கும்படையினர் பறிமுதல் செய்து, சின்னாளபட்டி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இதனால் பா.ம.க. வேட்பாளர் திலகபாமா தனது பிரசாரத்தை அந்த பகுதியில் முடித்து கொண்டு தனது காரில் ஏறி புறப்பட்டு சென்றார்.
Tags:    

Similar News