செய்திகள்
குஷ்பு

பணம், புகழுக்காக அரசியலுக்கு வரவில்லை- குஷ்பு பேட்டி

Published On 2021-03-17 04:46 GMT   |   Update On 2021-03-17 04:46 GMT
நான் எப்போதுமே வெளிப்படையாகவும், நேர்மையாகவும் செயல்படுவேன். நான் நானாகவே எப்போதும் இருப்பேன் என்று குஷ்பு கூறினார்.
சென்னை:

சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் பாரதிய ஜனதா வேட்பாளராக போட்டியிடும் நடிகை குஷ்பு அளித்த பேட்டியில் கூறி இருப்பதாவது:-

எனது கடுமையான உழைப்பை அங்கீகரித்து அதற்கு பரிசாக பாரதிய ஜனதா மக்களுக்கு சேவை செய்ய இந்த வாய்ப்பை அளித்துள்ளது.

நான் பணம், புகழுக்காக அரசியலுக்கு வரவில்லை. நான் கடுமையாக உழைப்பதுடன், வித்தியாசமாக செயல்படுவேன் என்பதை அவர்கள் நம்புகிறார்கள். என்னைப்போல அதிகளவிலான பெண்களை பாரதிய ஜனதா வேட்பாளராக நிறுத்தி உள்ளது.

மத்திய அமைச்சரவையிலும் பெண்களுக்கு போதிய இடத்தை பாரதிய ஜனதா அளித்துள்ளது. ஆயிரம்விளக்கு தொகுதியை பொறுத்தவரை தி.மு.க.வின் கோட்டை என்று சொல்ல முடியாது. 10 ஆண்டுகளுக்கு முன்பு இங்கு வெற்றி பெற முடியாது என்பதால் ஸ்டாலினே இங்கிருந்து தொகுதி மாறி கொளத்தூருக்கு சென்று விட்டார்.

எப்போதும் அலை அடித்துக் கொண்டிருக்கும் என்று சொல்ல முடியாது. நான் இங்கு போட்டியிடுவதற்கு பயப்படவில்லை. கடுமையாக உழைத்து வெற்றி பெறவேண்டும் என்பதுதான் ஒரே குறிக்கோள்.

இந்த தொகுதியை பொறுத்தவரையில் வசதி படைத்தவர்கள், ஏழைகள் என பலதரப்பட்ட மக்களும் இருக்கிறார்கள். குடிசை பகுதிகளை பொறுத்தவரை தெருத்தெருவாக சென்று அவர்கள் நம்பிக்கையை பெறுவேன்.

வசதி படைத்தவர்கள் மத்தியில் சினிமா நட்சத்திரம் என்ற புகழ் வேலை செய்யாது. என்னை பொறுத்தவரையில் அனைத்து தரப்பு மக்களும் வந்து ஓட்டளிக்க வேண்டும். 60 முதல் 70 சதவீதம் பேர்தான் ஓட்டு போடுகிறார்கள். 90 சதவீதம் பேர் ஓட்டு போடுவதை பார்க்க வேண்டும். 20 முதல் 30 சதவீதம் பேர் ஓட்டு போடாமல் இருப்பது கவலை அளிக்கிறது.

தேர்தல் பணிக்காக சமூக வலைதளங்களை நான் உரிய முறையில் பயன்படுத்திக் கொள்வேன். நான் எப்போதுமே வெளிப்படையாகவும், நேர்மையாகவும் செயல்படுவேன். நான் நானாகவே எப்போதும் இருப்பேன். இதன் மூலம் மக்களின் நம்பிக்கையை பெற்று வெற்றி பெறுவேன்.

பெண்கள் அரசியலுக்கு வருவது குறைவாக இருக்கிறது. குறிப்பாக அடிமட்ட நிலையில் உள்ள மக்கள் அரசியலுக்கு வருவதில்லை. பெண்கள் அரசியலுக்கு வருவதை மக்கள் விரும்பவில்லை என்று சொல்ல முடியாது. ஜெயலலிதாவை பலமுறை மக்கள் தேர்வு செய்தார்கள். மக்களின் நம்பிக்கையை பெற்றால் அவர்கள் பெண்களை வரவேற்பார்கள்.

பாரதிய ஜனதாவை பொறுத்தவரை தகுதி உள்ளவர்களுக்கும், வெற்றி பெற வாய்ப்பு உள்ளவர்களுக்கும் மட்டும்தான் டிக்கெட் கொடுக்க வாய்ப்பு கொடுக்கப்படுகிறது. இவருடைய மகன் என்ற அடிப்படையில் காங்கிரசில் டிக்கெட் கொடுக்கிறார்கள்.

சினிமா நட்சத்திர அந்தஸ்து ஓட்டாக மாறி விடும் என்று சொல்ல முடியாது. ஆந்திராவில் சிரஞ்சீவி மிகப்பெரிய நட்சத்திரமாக இருந்தார். ஆனால் அவரால் அரசியலில் நீடிக்க முடியவில்லை. மக்களை பொறுத்தவரை சினிமாவையும், அரசியலையும் தெளிவாக வேறுபடுத்தி பார்க்கிறார்கள்.

நான் எப்போதுமே திறந்த மனதுடன் செயல்பட்டு வருகிறேன். அரசியலில் என்னை உயர்த்திக் கொள்ள வேண்டும் என்று செயல்படுவதில்லை.

இவ்வாறு குஷ்பு கூறினார்.
Tags:    

Similar News