செய்திகள்
முத்தரசன்

அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை ஏட்டிக்கு, போட்டியாக உள்ளது- முத்தரசன் பேட்டி

Published On 2021-03-16 23:58 GMT   |   Update On 2021-03-16 23:58 GMT
பணத்தை கொடுத்து வெற்றி பெற்று விடலாம் என்ற அ.தி.மு.க.வின் கனவு பகல் கனவாக ஆகிவிடும் என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார்.
தஞ்சாவூர்:

தஞ்சை கீழராஜ வீதியில் உள்ள ஏ.ஐ.டி.யூ.சி. அலுவலகத்தில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம், அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் மாநிலக்குழு கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கலந்து கொண்டு தேர்தல் பணியில் ஈடுபடுவது குறித்து ஆலோசனை வழங்கினார்.

முன்னதாக முத்தரசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றி பெறும். தி.மு.க. பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கும். முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பு ஏற்பார். முதல்-அமைச்சரின் பேச்சு, அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை போன்றவை ஏட்டிக்கு போட்டியாக இருக்கிறது. அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையை கொடுத்திருந்தாலும், உண்மையில் மக்கள் சேவை நோக்கமாக இல்லை.

விவசாய கடனை தள்ளுபடி செய்யுமாறு ஐகோர்ட்டு உத்தரவிட்டபோது அதை எதிர்த்து அ.தி.மு.க. சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்தது. ஆட்சிக்கு வந்தவுடன், விவசாய கடனை தி.மு.க. தள்ளுபடி செய்யும் என வாக்குறுதி அளித்த பிறகு அ.தி.மு.க. அதை போட்டி போட்டுக்கொண்டு தள்ளுபடியை அறிவித்தது.

தேர்தல் அறிக்கை, தொண்டர்களின் பலத்தை நம்பி அ.தி.மு.க. தேர்தலில் நிற்கவில்லை. பணத்தை மட்டுமே முழுமையாக நம்பி தேர்தலை சந்திக்கிறது. பணத்தை கொடுத்து வெற்றி பெற்று விடலாம் என்ற அ.தி.மு.க.வின் கனவு பகல் கனவாக ஆகிவிடும். இதை தமிழக மக்கள் நிராகரிப்பார்கள்.

ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், அது தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் எனவும் ஓ.பன்னீர்செல்வம் தான் கோரிக்கை வைத்தார். அவரை சமாதானப்படுத்துவதற்காக விசாரணை குழு அமைக்கப்பட்டது. தற்போது ஜெயலலிதா மரணத்துக்கு கருணாநிதி, ஸ்டாலின்தான் காரணம் என முதல்-அமைச்சர் உண்மைக்கு புறம்பாக பேசி வருகிறார். முதல்-அமைச்சர் தனது பொறுப்புக்கு ஏற்ப விமர்சனங்களையும், கருத்துகளையும் தெரிவிக்க வேண்டும்.

பா.ஜ.க. ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இல்லாத கட்சி. மாறாக வகுப்புவாதம், சர்வாதிகாரம், பாசிசத்தின் மீது நம்பிக்கை வைத்திருக்கிற கட்சி. மாநிலத்தில் எந்த கட்சியும் இருக்கக்கூடாது என வெளிப்படையாகவே செயல்படுகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டசபை உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கி மாநிலத்தில் ஆட்சியைக் கவிழ்க்கும் வேலையை பா.ஜ.க. செய்கிறது. எனவே ஜனநாயகத்தை காக்க இந்த அரசியல் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்கிறோம். தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் மதுவிலக்கை படிப்படியாக அமல்படுத்த வலியுறுத்துவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது மாநில செயற்குழு உறுப்பினர் சந்தானம் உள்பட பலர் உடன் இருந்தனர்.
Tags:    

Similar News