செய்திகள்
அமைச்சர் கடம்பூர் ராஜூ

எத்தனை முனைபோட்டி வந்தாலும் அதிமுக தான் வெற்றி பெறும்- கடம்பூர் ராஜூ பேட்டி

Published On 2021-03-13 21:07 GMT   |   Update On 2021-03-13 21:07 GMT
தமிழக சட்டமன்ற தேர்தலில் எத்தனை முனைபோட்டி வந்தாலும் அ.தி.மு.க. தான் வெற்றி பெறும்’ என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.
திருச்செந்தூர்:

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு நேற்று செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ வந்தார். அவர் கோவிலுக்குள் சென்று சாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் அ.தி.மு.க. கூட்டணி கட்சிகள் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் துணையோடு சட்டமன்ற தேர்தலை சந்திக்க உள்ளது. ஜெயலலிதாவின் வழியில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் நல்லாட்சியை வழங்கி உள்ளார். வேட்பாளர் பட்டியலை அ.தி.மு.க.தான் முதன்முதலாக வெளியிட்டது. அ.தி.மு.க. 200-க்கும் மேற்பட்ட இடங்களை பிடித்து சிறப்பான வெற்றியை பெறும்.

அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை மக்கள் எதிர்பார்க்கின்ற, விரும்புகின்ற தேர்தல் அறிக்கையாக இருக்கும். அதில் உள்ள அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றுகின்ற வாக்குறுதிகளாக இருக்கும். ஏமாற்றுகின்ற வாக்குறுதிகளாக இருக்காது. அ.தி.மு.க. அரசு செய்துள்ள சாதனைகளை சொல்லி நாங்கள் வாக்கு கேட்போம்.

எத்தனை முனை போட்டி வந்தாலும் தேர்தலில் அ.தி.மு.க. தான் வெற்றி பெறும். அ.தி.மு.க. தான் அதிகமான வாக்கு வங்கி உள்ள கட்சியாக இன்று திகழ்ந்து கொண்டிருக்கிறது. அ.தி.மு.க. நிர்வாகிகள் சிலர் தேர்தலில் போட்டியிட சீட் கொடுக்கவில்லை என்பதற்காக மாற்றுக்கட்சிக்கு செல்கின்றனர். அது அரசியலில் தற்கொலை செய்வதற்கு சமம்.

நான் கோவில்பட்டி சட்டமன்ற தொகுதியில் 50 ஆண்டுகாலம் நிறைவேற்ற முடியாத திட்டங்களை 5 ஆண்டுகளில் நிறைவேற்றினேன். அதனால் 2016-ல் நடந்த தேர்தலில் போட்டியிட ஜெயலலிதா மீண்டும் வாய்ப்பு தந்தார். மேலும் அமைச்சரவையிலும் வாய்ப்பு கொடுத்தார். அந்த வாய்ப்பை பயன்படுத்தி தொகுதி மக்களுக்கு எண்ணற்ற திட்டங்களை செய்துள்ளேன். மக்கள் எதிர்பார்ப்பையும் தாண்டி பல திட்டங்களை செய்து கொடுத்துள்ளேன்.

தொகுதி மக்கள் மனநிறைவோடு இருக்கிறார்கள். என்னை மனநிறைவோடு வரவேற்கிறார்கள். யார் எதிர்த்து நின்றாலும் எனக்கு கவலை இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News