செய்திகள்
தங்க தமிழ்ச்செல்வன்

போடி தொகுதியில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்- தங்க தமிழ்ச்செல்வன்

Published On 2021-03-13 05:53 GMT   |   Update On 2021-03-13 05:53 GMT
ஒரே கட்சியில் இருந்த 2 பேரும் தற்போது எதிரெதிர் அணியில் இருந்து களத்தில் மோதுவதால் போடி சட்டமன்ற தொகுதி பரபரப்படைந்துள்ளது.

திண்டுக்கல்:

தேனி மாவட்டம் பெரியகுளத்தை சேர்ந்த துணை முதல்-அமைச்சரும், அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் போடி தொகுதியில் 3-வது முறையாக அ.தி.மு.க. சார்பில் போட்டியிடுகிறார்.

இவரை எதிர்த்து தி.மு.க. சார்பில் தங்க தமிழ்ச்செல்வன் நிறுத்தப்பட்டுள்ளார்.

இவர் அ.தி.மு.க.வில் இருந்தபோது ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதியில் மட்டுமே 2001, 2011, 2016 ஆகிய ஆண்டுகளில் நடந்த தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். போடி தொகுதியில் இதுவரை போட்டியிடவில்லை. தற்போது துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை எதிர்த்து முதல் முறையாக நேருக்கு நேர் களத்தில் இறங்கியுள்ளார்.

தனது வெற்றி வாய்ப்பு குறித்து தங்க தமிழ்ச்செல்வன் கூறியதாவது:-

தி.மு.க. தலைவர் ஸ்டாலின் வேட்பாளர் பட்டியலை மிகுந்த கவனத்துடன் தேர்வு செய்துள்ளார். குறிப்பாக அமைச்சர்கள் போட்டியிடும் தொகுதிகளில் அவர்களுக்கு சம பலத்தில் உள்ளவர்களை நிறுத்தி கண்டிப்பாக வெற்றி பெற உழைக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். அதன் அடிப்படையிலேயே எனக்கும் இந்த முறை போடி தொகுதி வழங்கப்பட்டுள்ளது.

இதற்காக தலைவர் ஸ்டாலினுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். துணை முதல்-அமைச்சர் உள்பட அமைச்சர்கள் மீதான ஊழல் பட்டியலே போதும். இவர்களை கண்டிப்பாக தொகுதி மக்கள் தோற்கடிப்பார்கள். அதே போல் போடி தொகுதியிலும் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் நான் வெற்றி பெறுவேன். தேனி மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளிலும் தி.மு.க. வேட்பாளர்கள் வெற்றி பெறுவது உறுதி.

இவ்வாறு அவர் கூறினார்.

ஒரே கட்சியில் இருந்த 2 பேரும் தற்போது எதிரெதிர் அணியில் இருந்து களத்தில் மோதுவதால் போடி சட்டமன்ற தொகுதி பரபரப்படைந்துள்ளது.

Tags:    

Similar News