செய்திகள்
குஷ்பு - கவுதமி

6 மாதமாக பணியாற்றிய பிறகு தொகுதிகள் கை நழுவியதால் பா.ஜனதா பிரபலங்கள் அதிருப்தி

Published On 2021-03-11 10:14 GMT   |   Update On 2021-03-11 12:08 GMT
தமிழக சட்டசபை தேர்தலில் தாங்கள் எதிர்பார்த்த தொகுதி கை நழுவி போனதால் பா.ஜனதா பிரபலங்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

சென்னை:

அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜனதாவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. தொகுதிகள் கிடைக்காத பலர் அதிருப்தியில் உள்ளனர்.

பா.ஜனதாவில் இணைந்ததும் குஷ்புவுக்கு சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதி பொறுப்பாளர் பதவி வழங்கப்பட்டது.

இந்த தொகுதியின் பா.ஜனதா வேட்பாளரும் அவர்தான் என்ற முடிவு செய்து கடந்த சில மாதங்களாகவே இந்த தொகுதியில் தேர்தல் பணியை குஷ்பு தொடங்கி விட்டார்.

அண்ணாசாலையில் பிரமாண்டமான தேர்தல் பணிமனையையும் அவர் அமைத்துள்ளார். இங்கு தினமும் வந்து தேர்தல் பணிகளை செய்து வந்தார்.

இப்போது சேப்பாக்கம் தொகுதி பா.ம.க.வுக்கு ஒதுக்கப்பட்டிருப்பதால் குஷ்பு கடும் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

அதேபோல் மைலாப்பூர் தொகுயை குறி வைத்து பா.ஜனதா பொது செயலாளர் கரு.நாகராஜன் கடந்த 6 மாதமாக தொகுதியில் தேர்தல் பணி செய்து வந்தார். அதற்காக அங்குள்ள ஒரு திருமண மண்டபமும் ஏற்பாடு செய்யப்பட்டு தேர்தலை மையமாக வைத்து 15-க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. அந்த தொகுதியும் பா.ஜனதாவுக்கு ஒதுக்கப்படவில்லை.

இதேபோல் நடிகை கவுதமி, ராஜபாளையம் தொகுயில் கடந்த சில மாதங்களாக முகாமிட்டு தேர்தல் வேலைகளில் ஈடுபட்டு வந்தார். அந்த தொகுதியும் பா.ஜனதாவுக்கு வழங்கப்படவில்லை.

போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும் என்று கருதப்பட்ட சக்கரவர்த்தி, கே.டி.ராகவன் மற்றும் திருச்சி பகுதியை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் சிலர் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

நடிகை கவுதமி தனக்கு தொகுதி கிடைக்காத நிலையில் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது:-

ராஜபாளையம் சட்டமன்ற தொகுதியில் உங்கள் வீட்டு மகளாக, சகோதரியாக உங்களில் ஒருவராக என்னை பாவித்து கடந்த 5 மாதங்களாக தங்களுக்கு சேவை செய்ய வாய்ப்பளித்தீர்கள். என்றும் எனக்கு நீங்கள் காட்டிய உண்மையான அன்புக்கு தலைவணங்கி உங்களுக்கு கட்டுப்பட்டிருக்கிறேன்.

உங்கள் அன்பின் வாயிலாக கிடைத்த இந்த உறவானது என்றும் நிலைத்திருக்கும் என உறுதியளிக்கிறேன். நீங்கள் எவ்வாறு உயர்வான வாழ்க்கையை வாழ வேண்டுமோ அதற்காக உங்களுடன் என்றும் பாடுபடுவேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

அவரது இந்த பதிவுக்கு பாராட்டு தெரிவித்து பலர் கருத்து வெளியிட்டுள்ளனர். அதில், “தலைமையை சாடாமல் பணிவோடு தங்களின் பதிவு, தங்களின் தங்கமான மனம் இங்கே வெளிப்படுகிறது. சீட்டுக்காக இல்லை மக்களுக்காக என்ற தங்களின் மன எண்ணத்திற்கு கண்டிப்பாக நல்ல அங்கீகாரம் கிடைக்கும் சகோதரி... மறக்க வேண்டாம் நம் டாக்டர் அக்காவை” என்று குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News