செய்திகள்
ஜிகே மணி

அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக விலக நாங்கள் காரணம் இல்லை- ஜி.கே. மணி

Published On 2021-03-11 08:07 GMT   |   Update On 2021-03-11 08:07 GMT
அ.தி.மு.க.வின் வாக்குறுதிகள் சாதாரண மக்களையும் கவரும் வகையில் உள்ளதாக பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி கூறியுள்ளார்.

சென்னை:

பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி சென்னையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

வன்னிய சங்க துணை தலைவர் வைத்தி போட்டியிட தொகுதி கிடைக்காத மன வருத்தத்தில் இருக்கிறார். அவ்வளவுதான். விரைவில் அது சரியாகி விடும். அ.தி.முக.-பா.ம.க. கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும்.

தற்போதைய அரசியல் சூழ்நிலையில் கூட்டணி அமைத்துதான் தேர்தலை சந்திக்க வேண்டும் என்பது தவிர்க்க முடியாதது.

அ.தி.மு.க. அரசு சமூக நீதியை காத்து வருகிறது. 40 ஆண்டுகால எங்கள் போராட்டத்திற்கு இந்த அரசு தீர்வு கண்டுள்ளது.

அ.தி.மு.க.வின் வாக்குறுதிகள் சாதாரண மக்களையும் கவரும் வகையில் உள்ளது. எனவே அனைத்து தரப்பு மக்களின் ஆதரவும் அ.தி.மு.க. கூட்டணிக்கு கிடைக்கும்.

எடப்பாடி பழனிசாமிக்கு எதிர்ப்பு அலை என்பது இல்லை. இதுவும் இந்த கூட்டணி வெற்றிக்கு காரணமாக அமையும்.

அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து தே.மு.தி.க. விலகியதற்கு பா.ம.க. காரணம் இல்லை. நாங்கள் எந்த இடத்திலும் தே.மு.தி.க.வை பற்றி எந்த விதமான விமர்சனமும் செய்தது இல்லை.

மேலும் தேர்தல் காலங்களில் வழக்கமாக கடுமையான வறட்சி, தண்ணீர் பஞ்சம் இருக்கும். ஆனால் இந்த ஆண்டு அந்த மாதிரி எதுவும் இல்லை.

இலவசங்களை எதிர்க்கும் கட்சிதான் பா.ம.க. அதே நேரத்தில் மக்களுக்கு பயனுள்ள அத்தியாவசிய தேவைகளை ஆதரிக்கிறோம். அ.தி.மு.க. ஆட்சிக்கு பா.ம.க. பக்க பலமாக இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக ஒட்டபிடாரம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. ராஜ மன்னார் தி.மு.க.வில் இருந்து விலகி பா.ம.க. வில் இணைந்தார். இதில் ஏ.கே.மூர்த்தி, வக்கீல் பாலு ஆகியோரும் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News