செய்திகள்
திமுக கூட்டணி கட்சிகள்

தி.மு.க. கூட்டணி தொகுதிகள் பட்டியல் இன்று வெளியாகிறது

Published On 2021-03-09 06:51 GMT   |   Update On 2021-03-09 06:51 GMT
தி.மு.க., கூட்டணி கட்சிகளுக்கு இன்று தொகுதி உடன்பாடு முழுமையாக இறுதி செய்யப்படுவதால் நாளை தி.மு.க. வேட்பாளர் பட்டியல் வெளியாவது உறுதியாகி உள்ளது.
சென்னை:

தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த (ஏப்ரல்) மாதம் 6-ந்தேதி நடைபெறுகிறது. தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் வருகிற 12-ந்தேதி தொடங்குகிறது.

இந்த தேர்தலில் தி.மு.க. மெகா கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. இதற்காக கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு உடன்பாடு காணப்பட்டுள்ளது. தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகளும், கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

ம.தி.மு.க., இந்திய கம்யூனிஸ்டு கட்சி, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி, விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகளுக்கு தலா 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு ஒப்பந்தம் காணப்பட்டுள்ளன. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 3 தொகுதிகளும், மனித நேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகளும் வழங்கப்பட்டுள்ளன.

இது தவிர தமிழக வாழ்வுரிமை கட்சி, ஆதி தமிழர் பேரவை, மக்கள் விடுதலை கட்சி ஆகியவற்றுக்கு தலா ஒரு தொகுதிகள் நேற்று ஒதுக்கப்பட்டன. கொங்கு நாடு தேசிய மக்கள் கட்சியுடன் தொகுதி உடன்பாடு காண பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அநேகமாக இன்று இந்த கட்சிக்கும் தொகுதி ஒதுக்கப்படும் என தெரிகிறது.

தற்போது தி.மு.க. வசம் 177 தொகுதிகள் உள்ளன. கொங்குநாடு தேசிய மக்கள் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டால் 176 இடங்களில் தி.மு.க. போட்டியிடும் என தெரிகிறது.

தி.மு.க.வை ஆதரிக்கும் மற்ற சில அமைப்புகளுக்கு உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் கிறிஸ்துவ நல்லிணக்க இயக்க தலைவர் இனிகோ இருதயராஜுக்கு திருச்சி கிழக்கு தொகுதி ஒதுக்கப்படும் என கட்சி வட்டாரத்தில் பேசப்படுகிறது.

கடந்த எந்த தேர்தல்களிலும் இல்லாத அளவுக்கு இந்த தேர்தலில் தி.மு.க. அதிக இடங்களில் போட்டியிட உள்ளது. குறைந்தது 180 இடங்களில் போட்டியிட தி.மு.க. முடிவு செய்திருந்தது.

ஆனால் இந்த தேர்தலில் கூட்டணி கட்சிகள் அதிகமாக சேர்ந்துள்ளதால் அந்த கட்சிகளுக்கு இதுவரை 57 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு விட்டன. இருந்தாலும் சிறிய கட்சிகள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட உள்ளதால் தி.மு.க. திட்டமிட்டபடி 180 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளின் எண்ணிக்கை ஒதுக்கப்பட்ட நிலையில் அடுத்த கட்டமாக எந்தெந்த சட்டசபை தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்குவது என்று இன்று தி.மு.க. முடிவு செய்ய உள்ளது.

இதற்காக தொகுதி உடன்பாடு கண்டுள்ள காங்கிரஸ் கட்சிக்கு முதலில் எந்தெந்த தொகுதிகளை ஒதுக்குவது என்று தி.மு.க. இன்று முடிவு செய்கிறது. இதற்காக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரிக்கு தி.மு.க. அழைப்பு விடுத்துள்ளது. அதை ஏற்று அண்ணா அறிவாலயத்துக்கு இன்று மாலை காங்கிரஸ் நிர்வாகிகளுடன் கே.எஸ்.அழகிரி செல்கிறார்.

காங்கிரஸ் போட்டியிட விரும்பும் 50 தொகுதிகளை பட்டியலை தி.மு.க. பேச்சுவார்த்தை குழுவிடம் கே.எஸ்.அழகிரி  சமர்ப்பிக்கிறார். அதில் இன்று 25 தொகுதிகளை தேர்ந்தெடுத்து ஒதுக்குமாறு கோரிக்கை வைக்கின்றனர்.

கடந்த பாராளுமன்ற தேர்தலின்போது காங்கிரஸ் வெற்றி பெற்ற 9 தொகுதிகளில் இல்லாத சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிட இந்த முறை முன்னுரிமை கொடுத்து ஒதுக்குமாறு தி.மு.க.விடம் காங்கிரஸ் வலியுறுத்த உள்ளதாக மூத்த நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

தி.மு.க. வேட்பாளர் பட்டியலை நாளை வெளியிட உள்ளதாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்துள்ளார். அதனால் காங்கிரசுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் எவை எவை என்பதை இன்றே தி.மு.க. முடிவு செய்ய உள்ளது.

இதே போல் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன் ஆகியோர்  ஏற்கனவே தொகுதி பட்டியலை தி.மு.க. பேச்சுவார்த்தை குழுவிடம் வழங்கி இருக்கிறார்கள். அதன் அடிப்படையில் அந்த கட்சிகளுக்கும் தொகுதிகள் இறுதி செய்யப்பட உள்ளன.

ம.தி.மு.க. கொடுத்துள்ள பட்டியலில் வாசுதேவநல்லூர், கோவில்பட்டி, சாத்தூர், மதுரை மேற்கு, திருப்பூர், மதுராந்தகம், ஈரோடு, சிவகங்கை உள்ளிட்ட 15 தொகுதிகளை குறிப்பிட்டு கொடுத்துள்ளனர். அதில் 6 தொகுதிகளை முடிவு செய்வார்கள்.

தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் நெய்வேலி அல்லது பண்ருட்டி தொகுதியை ஒதுக்கி தருமாறு கோரிக்கை வைத்துள்ளார்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி தலைவர் காதர் மொய்தீன் கடையநல்லூர், வாணியம்பாடி, ஆம்பூர் உள்பட 20 தொகுதிக்கான பட்டியலை ஏற்கனவே வழங்கி இருக்கிறார். அதில் 3 தொகுதிகளை தேர்ந்தெடுத்து ஒதுக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

இதே போல் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு கட்சிகளும் தொகுதி பட்டியலை ஏற்கனவே வழங்கி இருப்பதால் அவர்களுக்கும் இன்று மாலை எந்தெந்த தொகுதிகள் என்று முடிவு செய்து அறிவிக்கப்படும்.

தி.மு.க., கூட்டணி கட்சிகளுக்கு இன்று தொகுதி உடன்பாடு முழுமையாக இறுதி செய்யப்படுவதால் நாளை தி.மு.க. வேட்பாளர் பட்டியல் வெளியாவது உறுதியாகி உள்ளது.
Tags:    

Similar News