செய்திகள்
அரியலூர் தொகுதி

அரியலூர் தொகுதி கண்ணோட்டம்

Published On 2021-03-05 11:42 GMT   |   Update On 2021-03-05 11:42 GMT
சிமெண்ட் சிட்டி என்று பெருமையுடன் அழைக்கப்படும் அரியலூர் தொகுதி குறித்து ஓர் அலசல்
தமிழ்நாட்டில் வரலாற்று சிறப்பு மிக்க தொகுதிகளில் அரியலூர் தொகுதி ஒன்றாகும். இந்தியாவிலேயே முதலில் 1956-ல் அரியலுர் மருதையாற்று பாலத்தில் ரெயில் கவிழ்ந்த விபத்தில் 200-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். அப்போதைய ரெயில்வே துறை அமைச்சர் லால்பகதூர் சாஸ்திரி தனது பதவியை ராஜினாமா செய்தார். அரியலூர் தொகுதியை சார்ந்த ரெயில்வே துறை இணைஅமைச்சர் அழகேசன் தனது பதவியை ராஜினாமா செய்ய மறுத்துவிட்டார்.

அப்போது நடந்த தேர்தலில் இந்த நிகழ்ச்சியை மேற்கோள் காட்டியே தி.மு.க. வெற்றி பெற்றது. 1953-ல் கருணாநிதி கல்லக்குடி ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு கைதாகி சிறைக்கு சென்றதும் இதே அரியலூரில்தான். 



வெளிநாட்டிலிருந்து வருகை தந்து தமிழ் வளர்த்து ஏலாக்குறிச்சியில் அடைக்கல மாதா ஆலயத்தை வீரமாமுனிவர் அமைத்தார். மூவரால் பாடல் பெற்ற திருத்தலம் வைத்திய நாத சுவாமி ஆலயம் அமைந்துள்ளது. கல்லங்குறிச்சி கலியுக வரதராஜபெருமாள் கோவில், அரியலூர் பெருமாள் கோவில், சிவன் கோவில் என மிகப்பழமையான வரலாற்றை கொண்டது அரியலூர் தொகு தியாகும்.

தமிழ் தாத்தா உ.வே. சாமிநாதய்யர் வாழ்ந்ததும், இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் தீக்குளித்து இறந்த தியாகி சின்னசாமி வாழ்ந்ததும், ரிசர்வ் வங்கி கவர்னர் ரெங்க ராஜன் பிறந்து வளர்ந்த தொகுதியும் அரியலூர்தான். இந்தியாவிலேயே அதிக சிமெண்ட் தொழிற்சாலை உள்ளது அரியலூர்தான். அதனால்தான் அரியலூர் சிமெண்ட் சிட்டி என்று பெருமையுடன் அழைக்கப்படுகிறது.



2007 தி.மு.க. ஆட்சி காலத்தில் அரியலூர் தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்டது. இது அரியலூர், ஜெயங்கொண்டம் என இரண்டு தொகுதிகளை கொண்டது,

அரியலூர் சட்டமன்ற தொகுதியில் அரியலூர், திருமானூர் ஒன்றியங்களும், ஜெயங்கொண்டம் ஒன்றியத்தில் 3 ஊராட்சிகளும், தா.பழுர் ஒன்றியத்தில் 10 ஊராட்சிகளும், 86 கிராம ஊராட்சிகளையும் கொண்டது

அரியலூர் தொகுதியில் 1,31,335 ஆண் வாக்காளர்களும், 1,32,670 பெண் வாக்காளர்களும், 7 இதர வாக்காளர்கள் என மொத்தம் 264012 வாக்காளர்கள் உள்ளனர்.



வன்னியர்கள் 29 சதவீதமும், உடையார் 24 சதவீதமும், மூப்பனார் 22 சதவீதமும், ஆதிதிராவிடர் 16 சதவீதமும், முஸ்லிம்கள் 4 சதவீதமும், கிறிஸ்தவர்கள் 3 சதவீதமும், இதரவகுப்பினர் 2 சதவீதமும் உள்ளனர்.

இதுவரை நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. 5 முறையும், அதி.மு.க. 5 முறையும், காங்கிரஸ் 3 முறையும், தமிழ் மாநில காங்கிரஸ் ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளது. 2016 தேர்தலில் அ.தி.மு.க., தி.மு.க. நேரடி போட்டியில் களம் கண்டது. அ.தி.மு.க. வேட்பாளர் தாமரை எஸ்.ராஜேந்திரன் (88,523), தி.மு.க. வேட்பாளர் சிவசங்கர் (86,480) பெற்றனர். அதிக வாக்குகள் பெற்று தாமரை எஸ். ராஜேந்திரன் வெற்றி பெற்றார்.



காங்கிரஸ் ஆட்சி காலத்தில் அரசு சிமெண்ட் ஆலை, அரசு கலைக்கல்லூரி, அரசு ஐ.டி.ஐ. கொண்டுவரப்பட்டது. திமுக ஆட்சி காலத்தில் பொறியியல் கல்லூரி, அரசு ஐ.டி.ஐ., மத்திய மாநில அரசு அலுவலகங்கள் கொண்டு வரப்பட்டது. அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் அரசு மருத்துவக்கல்லூரி, ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், மேம்பாலங்கள், சாலை வசதிகள், தீவு கிராமமான ராமநல்லூருக்கு போக்கு வரத்து வசதி உட்பட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

எதிர்பார்ப்புகள்

அரியலூர் தொகுதியில் மொத்த மக்களின் எதிர் பார்ப்புகள் அரியலூர் வழியாக செல்லும் அனைத்து ரெயில்களும் நிறுத்தம் செய்ய வேண்டும், மத்திய பேருந்து நிலையம் அமைக்க வேண்டும், நகராட்சியை தரம் உயாத்த வேண்டும், முக்கிய திருத்தலங்களுக்கு பேருந்து வசதிகள் செய்து தரவேண்டும்.



50 ஆண்டு காலமாக செயல்பட்டு வந்த அலுவலகங்கள் மாற்றப்பட்டுள்ளது. அதை மீண்டும் கொண்டுவர வேண்டும். கோ-ஆப்டெக்ஸ், விரைவு தபால் நிலையம் அமைக்கப்பட வேண்டும். ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாக புதிய கட்டிட வசதிகள் ஏற்படுத்திட வேண்டும். வேலை வாய்ப்பு பெருக்க நவீன அரிசி ஆலை, அரசு சர்க்கரை ஆலை, முந்திரி தொழிற்சாலை போன்ற தொழிற்சாலைகள் உருவாக்கி கொடுத்திட வேண்டும்.

அரசு மகளிர் கல்லூரி அமைத்து கொடுக்கவேண்டும், மாவட்ட தலைநகர் அரியலூரை அடிப்படை வசதிகள் செய்து கொடுத்து அழகு படுத்திடவேண்டும். திருமானூரை தனிவட்டமாக அறி விக்க வேண்டும். டெல்டா பகுதியாக இருப்பதால் நிரந்தர நெல் கொள்முதல் நிலையம் அமைத்திட வேண்டும் போன்ற கோரிக்கைகளை எதிர்பார்க்கிறார்கள்.

தேர்தல் வெற்றி




1957- ராமலிங்க படையாச்சி (காங்கிரஸ்)
1962- நாராயணன் (தி.மு.க.)
1967- கருப்பையா (காங்கிரஸ்)
1971- சிவப்பெருமாள் (தி.மு.க.)
1977- ஆறுமுகம் (தி.மு.க.)
1980- ஆறுமுகம் (தி.மு.க.)
1984- புருஷோத்தமன் (அ.தி.மு.க.)
1989- ஆறுமுகம் (தி.மு.க.)
1991- மணிமேகலை (அ.தி.மு.க.)
1996- அமரமூர்த்தி (த.மா.கா.)
2001- இளவழகன் (அ.தி.மு.க.)
2006- அமரமூர்த்தி (காங்கிரஸ்)
2011- மணிவேல் (அ.தி.மு.க.)
2016- தாமரை எஸ்.ராஜேந்திரன் (அ.தி.மு.க.)
Tags:    

Similar News