செய்திகள்
கமல்ஹாசன்

திருமாவளவனுக்கு கமல்ஹாசன் ‘திடீர்’ அழைப்பு

Published On 2021-03-05 05:27 GMT   |   Update On 2021-03-05 05:27 GMT
அதிமுக, திமுக ஆகிய 2 கட்சிகள் வந்ததும் காலத்தின் கட்டாயம். அவர்கள் வெளியே போவதும் காலத்தின் கட்டாயம் என்று கமல்ஹாசன் கூறினார்.
சென்னை:

மடிப்பாக்கத்தில் நடந்த மக்கள் நீதி மய்யம் கட்சி கூட்டத்தில் கமல்ஹாசன் பேசியதாவது:-

நான் பேச தொடங்கும் போதே எனக்கு நன்றாக கோபம் வந்து விடுகிறது. சூடு ஏறி விடுகிறது. வீட்டுக்கு போய் படுத்து தூங்க நீண்ட நேரம் ஆகிறது.

இத்தனையும் பேசிட்டோமே, இவ்வளவு கடன் இருக்குதே. எப்படி அடைக்க போகிறோம் என்கிற பதட்டம் இப்போதே எனக்கு வந்து விட்டது. ஏழை தாயின் மகன் ஒருவர் இருக்கிறார். அவர் தனது ஏழ்மையால் அதானிக்கும், அம்பானிக்கும் எல்லாவற்றையும் விற்று விட்டார். இங்கு ஒரு விவசாயி மகன் ரூ.1 கோடி கடனை 5 லட்சம் கோடியாக மாற்றியுள்ளார். தமிழகத்தை அடமானம் வைத்து விட்டார்.

தமிழ் கலாசாரத்தை தாங்கள் காப்பாற்ற போகிறோம் என்று சொல்வது வெறும் நடிப்பு. இன்று நாடு முழுவதும் ஒரே மொழி, ஒரே கொள்கை என்று சொல்லிக்கொண்டு இருக்கிறீர்கள். அது இங்கு நடக்காது. பன்முகம்தான் நாட்டின் பெருமை. அதை சிதைத்து ஒருமுகமாக மாற்ற நினைத்தால் நாட்டின் அழகு குறைந்து விடும்.

எங்கள் கலாசாரம், மொழி, பண்பாடு விற்பனைக்கு இல்லை. பாதி இந்தியா பட்டினி கிடைக்கிறது. இளைஞர்களுக்கு வேலை இல்லை. வேலை இல்லை என்றால் இதோ வேல் என்கிறார்கள்.

எனது கட்சியில் எல்லா மதத்தினரும் உள்ளனர். இப்படிப்பட்ட சமூக நல்லிணக்கம் விற்பனைக்கு அல்ல. நீங்கள் எந்த வேலை காட்டினாலும் இங்கு நடக்காது. இவர்கள் எல்லாம் சேர்ந்து வாழும் தமிழகம்தான் எங்கள் தமிழகம்.

100 வருடங்களாக கட்சிகள் சமூக நீதி பற்றி பேசி பலவற்றை இழந்துள்ளனர். இங்கே சமூக நீதியை குத்தகைக்கு எடுத்து வைத்துள்ளதாக பலர் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அது அவர்களிடம் மனதளவில் இல்லை. உதட்டளவில்தான் உள்ளது. நீங்கள் எல்லாம் கீழ்சாதியில் இருந்தீர்கள். உங்களை உயர வைத்தது நாங்கள் போட்ட பிச்சை என்று பேசுகிறார்கள்.

சமூக நீதி என்பது ஈகை அல்ல. அது எங்களின் உரிமை. இவ்வளவு சமூக நீதி பேசுகிறீர்களே... என் தம்பி திருமாவளவனுக்கு முன்பு 21 இடம், பின்னர் 10 இடம், இப்போது 6 இடம், அப்புறம் எங்கு கொண்டு வைப்பீர்கள் என் தம்பியை. என் தம்பி இங்குதான் வர வேண்டியது இருக்கும். அதனை அடுத்த தேர்தலில் பார்ப்போம்.

இருவரும் மாறி மாறி என்ன செய்தீர்கள். அ.தி.மு.க.வை பற்றி கடுமையாக பேசுவது போன்று தி.மு.க.வை பேசுவது இல்லையே என்று என்னிடம் கேட்கிறீர்கள்.

நான் பேசுவதை நீங்கள் எடிட் செய்து கொண்டால் நான் என்ன செய்வது? அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய 2 கட்சிகள் வந்ததும் காலத்தின் கட்டாயம். அவர்கள் வெளியே போவதும் காலத்தின் கட்டாயம்.

இவ்வாறு கமல்ஹாசன் பேசினார்.
Tags:    

Similar News