தேர்தலில் விருப்பு வெறுப்பின்றி நமது வேட்பாளர்கள் வெற்றி பெற ஒவ்வொருவரும் கடுமையாக உழைக்க வேண்டும் என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
தமிழக சட்டசபைக்கு அடுத்த மாதம் 6-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது.
இதற்காக தி.மு.க.வில் ஒவ்வொரு சட்டசபை தொகுதியிலும் ஏராளமானோர் விருப்ப மனு கொடுத்து இருந்தனர். அவர்களுக்கு கடந்த 2-ந்தேதியில் இருந்து அண்ணா அறிவாலயத்தில் நேர்காணல் நடைபெற்று வந்தது. நாளையுடன் நேர்காணல் முடிவடைகிறது.
இந்த நிலையில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மாவட்ட செயலாளர்களை அழைத்து காணொலி வாயிலாக பேசினார். அப்போது தேர்தலில் பணியாற்றுவது தொடர்பாக பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். தேர்தலின் போது செயல்படுத்த வேண்டிய யுக்திகளையும் விளக்கினார்.
எல்லோருக்கும் வாய்ப்பு கொடுப்பது இயலாத காரியம். எனவே நான் நிற்பதாக கருதி ஒவ்வொரு வேட்பாளரையும் நீங்கள் வெற்றி பெற செய்ய கடுமையாக பாடுபட வேண்டும். 11-ந்தேதி தேர்தல் அறிக்கையும் வெளியிடப்படுகிறது.
திருச்சியில் நாளை மறுநாள் (7-ந்தேதி) பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் திரளாக பங்கேற்க வேண்டும். தி.மு.க. ஆட்சிக்கு வரும்போது செயல்படுத்தப்பட வேண்டிய அடுத்த 10 ஆண்டுக்கான செயல் திட்டத்தையும் இந்த பொதுக்கூட்டத்தில் அறிவிக்க உள்ளேன்.
இதை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கும் வகையில் உங்கள் செயல்பாடு அமைய வேண்டும். பேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ்-அப், சமூக வலைதளங்கள் மூலம் மக்களிடம் கொண்டு செல்லும் பணியை தலைமை கழகம் செயல்படுத்த உள்ளது.
எல்.இ.டி. அகன்ற திரை மூலமும் மக்களுக்கு விளக்கி கூற ஏற்பாடுகள் செய்யப்படுகிறது. இது தவிர ஒவ்வொரு இடங்களிலும் குறைந்தது 50 ஆயிரம் வாக்காளர்களை சென்றடையும் வகையில் இந்த பிரசாரம் அமைய வேண்டும்.
தி.மு.க.வின் செயல் திட்டங்கள் என்ன என்பதை மக்கள் முழுமையாக அறிந்து கொள்ளும் வகையில் உங்களது பணிகள் இருக்க வேண்டும். இந்த தேர்தலுக்கு தலைமை கழகம் வெளியிடும் ஒவ்வொரு அறிவிப்புகளையும் மக்களிடம் நீங்கள் கொண்டு சேர்ப்பதற்கு துணையாக இருக்க வேண்டும்.
தேர்தலில் விருப்பு வெறுப்பின்றி நமது வேட்பாளர்கள் வெற்றி பெற ஒவ்வொருவரும் கடுமையாக உழைக்க வேண்டும். அனைத்து வேட்பாளர்களும் வெற்றி வேட்பாளர்களாகவே இருப்பார்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
அதன்பிறகு தி.மு.க. வழக்கறிஞர்கள் அணியினர் மாவட்ட செயலாளர்களுக்கு பல்வேறு ஆலோசனைகளை காணொலி வாயிலாக வழங்கினார்கள்.