செய்திகள்
ஜி.கே. வாசன்

அ.தி.மு.க.வுடன் இன்று தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை- ஜி.கே.வாசன்

Published On 2021-03-03 09:55 GMT   |   Update On 2021-03-03 09:55 GMT
அ.தி.மு.க.வுடன் தொகுதி பங்கீடு குறித்து இன்று பேச்சுவார்த்தை நடைபெறுவதாக ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
சென்னை:

த.மா.கா.தலைவர் ஜி.கே. வாசன் சென்னையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

த.மா.கா. இளைஞர் அணியினர் 234 தொகுதிகளிலும் அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களின் வெற்றிக்காக களப்பணி ஆற்றுவார்கள்.

அ.தி.மு.க.வின் நிஜமான வாக்குறுதிகள் எதிர்க்கட்சிகளின் பொய்யான வாக்குறுதிகளுக்கு முன்பு வெற்றிபெறும். அ.தி.மு.க.வுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இன்று நடைபெறுகிறது.

எங்களது எண்ணத்தை அவர்களிடம் தெரிவிப்போம். 2 கட்சிகளும் வெற்றிவாய்ப்பை உறுதி செய்துகொள்ளும் வகையில் இடங்களை நிர்ணயிப்போம். அ.தி.மு.க. ஏழை-எளிய மக்களுக்காக அறிவித்துள்ள சலுகைகள் எங்கள் கூட்டணிக்கு வெற்றியை தேடித்தரும்.

கூட்டணியில் உள்ள கட்சிகள் சுமூகமாக பேச்சுவார்த்தை நடத்தி அடுத்த கட்டத்துக்கு எங்களுடைய பயணத்தை மேற்கொள்வோம். அ.தி.மு.க.வில் உள்ள குழுவோடு த.மா.கா. குழுவினர் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவார்கள்.

த.மா.கா. சார்பில் வெல்லக்கூடிய தொகுதிகளை மண்டல குழுவினரிடம் கேட்டு தெரிந்து வைத்துள்ளேன். மாணவர்கள் அணி, இளைஞர் அணி கூட்டத்தை நடத்தி தேர்தல் பணிகளை செய்துகொண்டு இருக்கிறோம்.

எங்களுக்கு கிடைக்கும் தொகுதிகளில் வெற்றி வாய்ப்பை உருவாக்கி சட்டமன்றத்தில் எங்கள் கட்சி எம்.எல்.ஏ.க்களின் குரலை ஒலிக்க வைப்பேன்.

தமிழகத்தில் தேர்தல் நெருங்கும் போது எத்தனை புதிய அணிகள் வேண்டுமானாலும் உருவாகலாம். மக்கள் மனதில் முதல் அணியாக, முக்கிய அணியாக அ.தி.மு.க. செயல்படுகிறது.

சைக்கிள் சின்னத்தை பெறுவதே எங்களுடைய தொடர் சட்ட முயற்சி. அது நடந்துகொண்டு இருக்கிறது. அது இறுதிநாள் வரை தொடரும். சைக்கிள் சின்னம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News