செய்திகள்
முக ஸ்டாலின்

ஸ்டாலின் தான் வராரு போர்டு கடைகளில் வைத்து கொள்ள அனுமதி

Published On 2021-03-03 06:54 GMT   |   Update On 2021-03-03 07:49 GMT
ஸ்டாலின் தான் வராரு போர்டுகளை வைத்துக் கொள்ள தேர்தல் கமி‌ஷனரிடம் அனுமதி கேட்கப்பட்டது. அதற்கு தேர்தல் கமி‌ஷன் அனுமதி அளித்துள்ளது.

சென்னை:

தி.மு.க. எவ்வாறு தேர்தல் பணிகள், பிரசாரங்கள் செய்ய வேண்டும் என்பது குறித்து பிரசாந்த் கிஷோரின் ஐ-பேக் நிறுவனம் திட்டங்களை வகுத்து கொடுத்து வருகிறது.

அதன்படி முதலில் முக்கியமான வாசகங்கள் வெளியிடப்பட்டு ஆங்காங்கே வைக்கப்பட்டன. விளம்பரமும் செய்யப்பட்டது. முதலில் ‘அ.தி.மு.க.வை புறக்கணிப்போம்’ என்ற வாசகம் வைக்கப்பட்டது.

அதன் பிறகு ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற பிரசாரம் செய்யப்பட்டு அந்த தொகுதிகளில் மு.க.ஸ்டாலின் நேரடியாக சென்று பிரசாரம் செய்தார்.

மேலும் பல்வேறு வாசகங்கள் கொண்ட பேனர்களும் வைக்கப்பட்டன. அதில் ‘ஸ்டாலின்தான் வராரு, விடியல் தர போறாரு’ என்ற வாசகம் அடங்கிய பேனர்கள் தமிழ்நாடு முழுவதும் வைக்கப்பட்டன.

இவ்வாறு 9 ஆயிரம் பேனர்கள் வைக்கப்பட்டு இருந்தன. தற்போது தேர்தல் அறிவிப்பு வந்துவிட்டதால், பேனர்கள் வைப்பது தேர்தல் நடத்தை விதிமுறைக்கு எதிரானதாகும்.

அதேநேரத்தில் தேர்தல் கமி‌ஷனரிடம் உரிய அனுமதி பெற்று சொந்த இடங்களில் பேனர்களை வைத்துக் கொள்ளலாம். எனவே ‘ஸ்டாலின் தான் வராரு’ பேனர்களை வைத்துக் கொள்ள தேர்தல் கமி‌ஷனரிடம் அனுமதி கேட்கப்பட்டது. அதற்கு தேர்தல் கமி‌ஷன் அனுமதி அளித்துள்ளது.

எனவே அந்த பேனர்களை வைத்து கொள்ளலாம். ஏற்கனவே கடை, டீக்கடை போன்ற இடங்களில் வைத்து இருந்தனர். இப்போது அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் அது நீடிக்கும்.

தேர்தல் கமி‌ஷன் அனுமதியை அடுத்து புதிதாக 7 ஆயிரம் டிஜிட்டல் போர்டுகளை வைக்க உள்ளனர். மொத்தமாக மாநிலம் முழுவதும் 30 ஆயிரம் போர்டுகள் வைப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக கட்சியினர் கூறினர். அவற்றை பெரும்பாலும் டிக்கடைகளில் பொருத்த இருக்கிறார்கள்.

இதுதொடர்பாக இணை தலைமை தேர்தல் அதிகாரி ஆனந்த் கூறும்போது, ‘‘எந்தவொரு அரசியல் வாசகங்கள் வைப்பதாக இருந்தாலும் அதற்கு மீடியா சான்றிதழ் மற்றும் கண்காணிப்பு குழுவிடம் உரிய அனுமதி பெற வேண்டும். அதில் வர்த்தக ரீதியான விளம்பரங்கள் இருக்கக் கூடாது. தேர்தல் நடத்தை விதிமுறைகளை சரியாக பின்பற்ற வேண்டும்’’ என்று கூறினார்.

Tags:    

Similar News