செய்திகள்
விடுதலை சிறுத்தைகள் கட்சி

திமுக கூட்டணியில் 3 பொதுத் தொகுதிகளை கேட்கும் விடுதலை சிறுத்தைகள்

Published On 2021-03-02 05:15 GMT   |   Update On 2021-03-02 05:15 GMT
விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்க தி.மு.க. முன் வந்துள்ளது. ஆனால் 3 பொதுத் தொகுதிகளையும் கேட்டு விடுதலை சிறுத்தைகள் வற்புறுத்துகிறது.

சென்னை:

தி.மு.க. கூட்டணியில் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடந்து வருகிறது.

இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு 3 இடங்களும், மனித நேய மக்கள் கட்சிக்கு 2 இடங்களும் ஒதுக்கப்பட்டு உள்ளன.

ம.தி.மு.க. மற்றும் விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகளுடனும் பேச்சு வார்த்தை நடந்தது. ஆனால் இறுதி உடன்பாடு ஏற்பட வில்லை.

விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்க தி.மு.க. முன் வந்துள்ளது. ஆனால் 3 பொதுத் தொகுதிகளையும் கேட்டு விடுதலை சிறுத்தைகள் வற்புறுத்துகிறது.

அந்த கட்சியை சேர்ந்த 3 சமூக முக்கிய நிர்வாகிகளுக்கு தொகுதிகள் வழங்குவதற்காக இந்த கோரிக்கையை வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம் விடுதலை சிறுத்தைகள் குறிப்பிட்ட சமூகத்துக்கான கட்சி மட்டுமல்ல என்ற இமேஜையும் ஏற்படுத்த முடியும் என்று விடுதலை சிறுத்தைகள் திட்டமிட்டுள்ளது.

ம.தி.மு.க. சார்பில் எத்தனை தொகுதிகள் வேண்டும் என்பது தொடர்பாக வைகோ கொடுத்து அனுப்பிய கடிதத்தை பேச்சுவார்த்தைக்கு சென்றவர்கள் தி.மு.க. குழுவினரிடம் வழங்கினார்கள்.

ம.தி.மு.க.வுக்கும் 8 தொகுதிகள் வரை ஒதுக்க தி.மு.க. முன் வந்துள்ளது. ஆனால் இரட்டை இலக்கத்துக்கு குறையாமல் தொகுதிகள் வேண்டும் என்று ம.தி.மு.க. தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கீடு செய்வது, தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வராவிட்டால் அரசியல் நெருக்கடிகள் உருவாகும் என்பதை தி.மு.க. தரப்பில் சுட்டிக்காட்டி எண்ணிக்கையை விட கூட்டணி வெற்றி என்ற எண்ணத்தோடு ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளனர்.

இதுதொடர்பாக வைகோவுடன் ஆலோசனை நடத்தி முடிவை சொல்வதாக தெரிவித்துள்ளனர்.

இன்று விடுதலை சிறுத்தைகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது. அப்போது உடன்பாடு எட்டப்படும் என்று கூறப்படுகிறது. அதன் பிறகு ம.தி.மு.க.வுடன் பேச்சு வார்த்தை நடைபெறும்.

Tags:    

Similar News