செய்திகள்
காங்கிரஸ்

நாளை மறுநாள் மீண்டும் பேச்சுவார்த்தை- நம்பிக்கையோடு காத்து கொண்டிருக்கும் காங்கிரஸ்

Published On 2021-03-01 08:38 GMT   |   Update On 2021-03-01 08:45 GMT
நாளை மறுநாள் (3-ந் தேதி) தி.மு.க.வுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. அப்போது எடுக்கப்படும் முடிவை பொறுத்து காங்கிரஸ் தனது நிலைப்பாட்டை எடுக்கும் என்று தெரிகிறது.

சென்னை:

தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சிக்கு தொகுதிகள் ஒதுக்கு வதில் இழுபறி ஏற்பட்டுள்ளது.

கடந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரசுக்கு 41 தொகுதிகள் கொடுக்கப்பட்டன. இந்த தேர்தலிலும் அதே எண்ணிக்கையில் தொகுதிகள் வேண்டும் என்று காங்கிரஸ் கோரிக்கை வைத்தது.

ஆனால் கடந்த தேர்தலில் 8 தொகுதிகளில் மட்டுமே வென்றதால் தொகுதிகளை குறைத்து வழங்க தி.மு.க. முடிவு செய்தது.

இந்த நிலையில் உம்மன்சாண்டி தலைமையிலான காங்கிரஸ் குழுவினரும், துரைமுருகன் தலைமையிலான தி.மு.க. குழுவினரும் தொகுதி பங்கீடு தொடர்பாக பேசினார்கள்.

அப்போது ஒன்றிரண்டு தொகுதிகளை வேண்டுமானால் குறைத்து கொள்ளுங்கள் என்று காங்கிரஸ் தரப்பில் தெரிவித்தனர். ஆனால் தி.மு.க. தரப்பில் 18 தொகுதிகள் மட்டுமே தருவதற்கு சம்மதம் தெரிவித்தனர். இதனால் உடன்பாடு எதுவும் ஏற்படாமல் பேச்சுவார்த்தை முடிந்தது.

மிகவும் குறைவாக தொகுதிகள் ஒதுக்குவது காங்கிரஸ் தலைவர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.

இதுபற்றி தென்மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற் கொண்டுள்ள ராகுல் காந்தியுடன் ஆலோசனை நடத்தினார்கள்.

அவர் தமிழக நிர்வாகிகளின் கருத்தை கேட்டார். அப்போது 30 தொகுதிகளுக்கு, குறையகூடாது என்று சிலரும், 40 தொகுதிகளுக்கு குறைய கூடாது என்று சிலரும் கருத்து தெரிவித்தனர்.

காங்கிரசின் நிலைப்பாடு பற்றி தி.மு.க. தலைமைக்கு தெரிவிக்கப்பட்டது. அதை தொடர்ந்து 23 தொகுதிவரை கொடுப்பது பற்றி தி.மு.க. தரப்பில் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.

ஆனால் குறைந்தபட்சம் 30 தொகுதிகளாவது வேண்டும் என்று காங்கிரஸ் எதிர்பார்க்கிறது. எப்படியும் தருவார்கள் என்ற நம்பிக்கையில் காத்து இருக்கிறது.

இதுபற்றி காங்கிரஸ் மூத்த நிர்வாகி ஒருவரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

20 முதல் 24 தொகுதிக்கு மேல் வழங்க தி.மு.க. தயாராக இல்லை என்பது தெரிகிறது. நாங்களும் அதை ஒத்துக்கொள்ள தயாராக இல்லை.

கடந்த தேர்தலில் நாங்கள் தோற்றதை காரணம் காட்டி தொகுதியை குறைப்பதாக சொல்கிறார்கள். அப்படி பார்த்தால் தி.மு.க. கடந்த தேர்தலில் 178 தொகுதிகளில் போட்டியிட்டது. கூட்டணியை கருத்தில் கொண்டு அவர்களும் 10 தொகுதிகளை குறைத்துக் கொள்ள வேண்டும். கடந்த தேர்தலை விட கூடுதலாக கட்சிகள் இணைந்துள்ளன. அந்த கட்சிகளுக்கும் தொகுதிகள் ஒதுக்கும்போது தி.மு.க.வுக்கு எண்ணிக்கை குறையத்தான் செய்யும்.

ஸ்டாலின்தான் முதல்வர் என்றுதான் பிரசாரம் செய்யப் போகிறோம். ஆட்சியில் எங்களுக்கு பங்கு தரப்ப போவதுமில்லை. நாங்கள் கேட்கப்போவதும் இல்லை.

எம்.எல்.ஏ. தேர்தலை மட்டும் பேசுகிறார்கள். எம்.பி. தேர்தலில் ராகுல் தான் பிரதமர் என்று பிரசாரம் செய்தோம். மக்களும் ராகுலை ஆதரித்து 38 தொகுதிகளில் தி.மு.க. கூட்டணியை வெற்றி பெற செய்ததையும் நினைவில் கொள்ள வேண்டும் என்றார்.

நாளை மறுநாள் (3-ந் தேதி) தி.மு.க.வுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. அப்போது எடுக்கப்படும் முடிவை பொறுத்து காங்கிரஸ் தனது நிலைப் பாட்டை எடுக்கும் என்று தெரிகிறது.

Tags:    

Similar News