செய்திகள்
ஸ்ரீ சிதம்பரம் பெரிய சுவாமிகள்

சென்னை சித்தர்கள்: ஸ்ரீ சிதம்பரம் பெரிய சுவாமிகள் -வேளச்சேரி

Published On 2021-11-27 13:45 GMT   |   Update On 2021-11-27 13:45 GMT
வேளச்சேரி மெயின் ரோட்டில் சாலையோரத்திலேயே இத்தலம் உள்ளதால் சென்னையின் அனைத்துப் பகுதிகளில் இருந்தும் மிக, மிக எளிதாக இத்தலத்துக்கு செல்ல முடியும்.

சென்னையில் ஒரு சித்தர், விபூதியைக் கொடுத்து அதை பணமாக மாற்றி அற்புதம் செய்தார். அந்த சித்தர் ஸ்ரீசிதம்பரம் பெரிய சுவாமிகள்.
சிதம்பரம் என்ற பெயர் வரும் வகையில் பல சித்தப் புருஷர்கள், மகான்கள் இருப்பதால் இவர் ஸ்ரீசிதம்பரம் பெரிய சுவாமிகள் என்று அழைக்கப்படுகிறார்.

வேளச்சேரியில் உள்ள தண்டீஸ்வரர் ஆலயத்தை சீரமைத்த போதுதான், அவர் விபூதியை பொட்டலம் போட்டுக் கொடுத்து, அதை பணமாகவும், தங்கக் காசாகவும் மாற்றி அற்புதம் செய்தார். சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு வேளச்சேரி பகுதி நெல் விளையும் பூமியாகவும் ரம்மியமான கிராமங்கள் கொண்ட பகுதியாகவும் இருந்த போது இந்த அற்புதம் நடந்தது.

இந்த அற்புதத்தை நிகழ்த்திய ஸ்ரீசிதம்பரம் பெரிய  சுவாமிகள் சிவ தொண்டு செய்வதற்காகவே இறைவனால் பூமியில் அவதாரம் எடுத்தவர். இவரது பூர்வீகம் திருச்சி அருகில் உள்ள அரியபாக்கம் எனும் ஊர். முனியப்பன்&பெரியாநாயகி தம்பதியின் மகனாக இவர் பிறந்தார். இவருக்கு வீராசாமி என்று பெயரிட்டனர்.

7 வயதிலேயே அவர் துறவு பூண்டார். 12-வது வயதில் ஊர், ஊராகச் சென்று சிவத் தொண்டு செய்யத் தொடங்கினார்.
எந்த ஊரில் சிவாலயம் சிதிலம் அடைந்து காணப்படுகிறதோ, அந்த ஊரில் தங்கி இருந்து திருப்பணிகள் செய்வார். அந்த ஆலயத்தை முழுமை யாக சீரமைத்து முடித்த தும் அடுத்த ஊருக்குச் சென்று விடுவார்.

சிறு வயதிலேயே அவருக்கு சித்தப் புருஷ ருக்குரிய ஆற்றல்கள் கைவரப் பெற்றிருந்ததால் அவரால் இந்த புனரமைப்புப் பணிகளை செய்ய முடிந்தது. அவருக்கு சிதம்பரம் பெரிய சுவாமிகள் என்ற பெயர் ஏற்பட்டது.

ஊர், ஊராக சென்ற அவர் 1840களில் சென்னை வேளச்சேரிக்கு வந்தார். அப்போது வேளச் சேரி, “வேதசிரோணி” என்று அழைக்கப்பட்டு வந்தது.

அங்கிருந்த தண்டீஸ்வரர் ஆலயம் வழிபாடு இல்லாமல் சிதிலம் அடைந்து கிடந்ததைக் கண்டு சிதம்பரம் பெரிய சுவாமிகள் மனம் வேதனைப்பட்டது. அந்த சமயத்தில் அவருக்கு 90 வயது ஆகி இருந்தது.

ஒருநாள் அவர் கோவில் குளத்தில் நீராடி விட்டு வெளியில் வந்து கொண்டிருந்தபோது, ஒரு மூதாட்டி அருகில் வந்தாள். “இந்த ஆலயத்தை சீரமைக்க வேண்டியது உன் கடமை.உன்னால்தான் அது முடியும். அந்த திருப்பணியை நீ செய்” என்று கூறினாள்.
உடனே சிதம்பரம் பெரிய சுவாமிகள், “ஈசன் சித்தம் அதுவாயின், அது என் பாக்கியம்“ என்றார். அதைக் கேட்டு சிரித்த மூதாட்டி நடந்து சென்று கொண்டிருந்த போதே மறைந்து விட்டாள்.

அன்றிரவு சிதம்பரம் பெரிய சுவாமிகள் கனவில் தண்டீசுவரர் தலத்து அம்பாள் கர்ணாம்பிகை தோன்றினாள். “நான்தான் மூதாட்டி வடிவத்தில் வந்து உன்னிடம் திருப்பணி செய்யக் கூறினேன்” என்றாள்.

அம்பிகை தன் மீது கொண்ட அளவற்ற பாசத்தால் உருகிய சிதம்பரம் பெரிய சுவாமிகள் மறுநாளே தண்டீசுவரர் ஆலய சீரமைப்புப் பணியை செய்ய முடிவு செய்தார். சித்தப் புருஷர்கள் கையால் ஒரு பைசா கூட தொட மாட்டார்கள். ஸ்ரீசிதம்பரம் பெரிய சுவாமிகளும் அப்படித்தான் கையில் எதுவும் இல்லாமல் இருந்தார்.

பணம் இல்லாமல் எப்படி ஆலயத்தை சீரமைப்பது? வேளச்சேரி ஊர் மக்களிடம் கை ஏந்தினார். ஆனால் அவரை நம்பி ஒருவர் கூட பணம் கொடுக்க முன்வரவில்லை. திட்டி துரத்தி விட்டனர். அதற்காக கவலைப்படாத சுவாமிகள் மற்ற ஊர்களுக்கு சென்று யாசகம் மேற்கொண்டார். அந்த பணத்தை வைத்து சிறு, சிறு திருப்பணிகளை செய்து வந்தார்.

ஒருநாள் அலைந்த களைப்பு தீர்வதற்காக ஒரு மரத்தடியில் படுத்துத் தூங்கினார். அவர் முகத்தில் வெயில்பட்டது. அப்போது அங்கு வந்த ஒரு நாகம் படம் எடுத்து அவர் முகம் மீது சூரிய ஒளி படாதபடி நின்றது. வயலுக்கு சென்று கொண்டிருந்த 2 விவசாயிகள் அதை பார்த்தனர்.

ஆச்சரியம் அடைந்த அவர்கள் ஊருக்குள் ஓடிச் சென்று அனைவரையும் அழைத்து வந்தனர். பாம்பு படம் விரித்துள்ள நிழலில் சுவாமிகள் அயர்ந்து தூங்குவதைக் கண்டு கிராமமே வியந்து நின்றது.இந்த சம்பவத்துக்குப் பிறகே தங்கள் ஊருக்கு வந்திருப்பவர் சாதாரண மகான் அல்ல... மிகப்பெரிய சித்தப்புருஷர் என்பதை புரிந்து கொண்டனர். சுவாமிகளிடம் மன்னிப்புக் கேட்ட ஊர் மக்கள், தண்டீஸ்வரர் ஆலய திருப்பணிக்கு தேவையான பொருள் உதவிகளை செய்தனர்.

ஒருநாள் மாலை சுவாமிகளிடம் கூலி கொடுக்க பணம் எதுவும் இல்லாத நிலை ஏற்பட்டிருந்தது.தொழிலாளர்கள் வேலை முடிந்து அவரிடம் வந்து நின்றனர். அவர்கள் கையில் ஆளுக்கு ஒரு விபூதி பொட்டலத்தை சுவாமிகள் எடுத்துக் கொடுத்தார்.
“இந்த பொட்டலத்தை இங்கு வைத்து பிரிக்காதீர்கள். வீட்டுக்குப் போய் பிரித்துப் பாருங்கள்” என்று உத்தரவிட்டார்.
அதன்படி தொழிலாளர்கள் வீடு திரும்பியதும் விபூதி பொட்டலத்தைப் பிரித்துப் பார்த்தனர். அதற்குள் இருந்த விபூதி அவரவர் உழைப்புக்கு ஏற்ற பணமாகவோ, தங்கக் காசாகவோ மாறி இருந்தது.

இப்படி பல்வேறு அற்புதங்கள் செய்த சுவாமிகள் விரைவில் தண்டீஸ்வரர் ஆலயத் திருப்பணிகளை செய்து முடித்தார். தனது சக்தியால் அவர் அந்த பகுதி திவானின் வயிற்று வலியை குணப் படுத்தினார். அவருக்கு மீண்டும் வயிற்று வலி வரவே இல்லை.
நன்றிக்கடனாக வேளச்சேரியில் 10 ஏக்கர் நிலத்தை (தற்போது ஜீவசமாதி ஆலயம் உள்ள இடம்) சுவாமிகளுக்கு அவர் தானமாகக் கொடுத்தார்.

அங்கிருந்தபடி சுவாமிகள் மக்களுக்கு உதவி வந்தார். தினமும் அவர் ஒரு பெண்ணின் வீட்டுக்கு சென்று யாசகம் கேட்டு உணவு வாங்கி சாப்பிடுவதை வழக்கத்தில் வைத்திருந்தார். அந்த அம்மையாரும் தினமும் சுவாமிகளுக்கு உணவு சமைத்து கொடுப்பதை பாக்கியமாக கருதினார்.

ஒருநாள் அந்த அம்மையார் சமைத்து முடித்து விட்டு அசதியில் படுத்திருந்தார். அப்போது சுவாமிகள் வந்து, “அம்மா... பசிக் கிறது. சாப்பாடு தாருங் கள்” என்று கேட்டார்.

வேறு யாரோ பிச்சைக் காரன் வந்திருக்கிறான் என்று  தவறுதலாக புரிந்து கொண்ட அந்த அம்மையார், போப்பா சாப்பாடு இல்லை என்றார். சுவாமிகளும் உணவு கிடைக்காமல் திரும்பி விட்டார்.

இதற்கிடையே அந்த அம்மையாரின் கணவர் சாப்பிட வீட்டுக்கு வந்தார். அந்த அம்மையார் சாப்பாடு எடுக்க சென்ற போது பாத்திரங்களில் உணவு இல்லாமல் வெறுமையாக இருப்பதைப் பார்த்து திடுக்கிட்டார்.

அப்போதுதான் அவருக்கு சுவாமிகள் சாப்பாடு கேட்டதும், தான் தூக்கக் கலக்கத்தில் இல்லை என்றதும் நினைவுக்கு வந்தது. உடனே அவர் சுவாமிகளிடம் ஓடோடி சென்று மன்னிப்புக் கேட்டார்.

அந்த அம்மையாருக்கு ஆசி வழங்கிய சுவாமிகள், “வீட்டுக்குப் போ உணவு இருக்கும்” என்றார். வீடு திரும்பிய அந்த அம்மையார் மீண்டும் பாத்திரங்களை திறந்து பார்த்த போது, அறுசுவை உணவு வகைகள் தயாராக இருப்பதை கண்டு ஆச்சரியம் அடைந்தார்.
மற்றொரு தடவை தண்டீஸ்வரர் கோவில் தென்னந்தோப்பில் தினமும் தேங்காய் திருட்டுப் போவது அவர் கவனத்துக்கு வந்தது. உடனே அவர் ஒரு தென்னை மரத்திடம் சென்று, “இன்றிரவு திருடனைப் பிடித்து வை” என்றார்.

அருகில் இருந்தவர்கள் சிரித்தபடி, “அது எப்படி தென்னை மரம் திருடனைப் பிடிக்கும்?” என்றனர். அன்றிரவு தேங்காய் திருட வந்த திருடன் தென்னை மரத்தில் ஏறியபோது, அவன் கால்கள் மரத்தை சுற்றி இறுகி விட்டன. திருடனால் ஏறவும் முடியவில்லை, இறங்கவும் முடியவில்லை. மரம் அவனைப் பிடித்துக் கொண்டது.

மறுநாள் காலை அங்கு வந்த சுவாமிகள், தென்னை மரத்தைப் பார்த்து, “விட்டு விடு” என்றார். அதன் பிறகே திருடனால் தென்னை மரத்தில் இருந்து கீழே இறங்க முடிந்தது. அவனுக்கு சுவாமிகள் அறிவுரை கூறி அனுப்பி வைத்தார்.

இப்படி சுவாமிகள் நடத்திய அற்புதங்கள் ஏராளம். அவரால் வளமான வாழ்வு பெற்ற பல குடும்ப வாரிசுகள் இன்றும் சென்னை முழுவதும் உள்ளனர்.

1856ல் அவர் “உபதேச உண்மை” என்ற செய்யுள் வடிவ நூலை எழுதி வெளியிட்டார். 1858ம் ஆண்டு கார்த்திகை மாதம் அவர் உயிருடன் ஜீவ சமாதியில் பரிபூரணம் பெற விரும்பினார். டிசம்பர் மாதம் 4-ந்தேதி சனிக்கிழமை விசாகம் நட்சத்திர தினத்தன்று காலை 9.45 மணிக்கு வேளச்சேரியில் தான் தங்கி இருந்த இடத்தில் சுவாமிகள் ஜீவ சமாதி கட்டினார்கள்.
வழக்கமாக சித்தர்களின் ஜீவ சமாதி மீது லிங்கம்தான் அமைத்திருப்பார்கள். ஆனால் வேளச்சேரியில் சுவாமிகளின் ஜீவ சமாதி மீது அவரது திருவுருவச் சிலை நிறுவப்பட்டுள்ளது.

2010-ம் ஆண்டு இத்தலத்தில் ராஜகோபுரம் கட்டினார்கள். இதன் மூலம் தமிழ்நாட்டில் சித்தர்களின் ஜீவசமாதிகளில் ராஜகோபுரத்துடன் கூடிய ஒரே ஜீவசமாதி என்ற சிறப்பை இத்தலம் பெற்றுள்ளது. வேளச்சேரி மெயின் ரோட்டில் சாலையோரத்திலேயே இத்தலம் உள்ளதால் சென்னையின் அனைத்துப் பகுதிகளில் இருந்தும் மிக, மிக எளிதாக இத்தலத்துக்கு செல்ல  முடியும்.

டிசம்பர் 3-ந் தேதி ஸ்ரீமத் சிதம்பரம் பெரிய சுவாமிகளின் 163-வது குருபூஜை நடைபெற உள்ளது.
Tags:    

Similar News