செய்திகள்
குஷ்பு - பி.வாசு

குஷ்பு என்னும் நான்: சந்தித்ததும் சிந்தித்ததும் - எனது ஹீரோ பி.வாசு

Published On 2021-11-22 09:28 GMT   |   Update On 2021-11-22 09:28 GMT
நடிகை குஷ்பு கடந்த வந்த பாதையும் பயணமும் கடினமானது அதை ‘மாலைமலர்’ வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்.
நடிகர் ஜெயராம். 
நான் தமிழில் முன்னணி நட்சத்திரமாக இருந்த போது அவர் மலையாளத்தில் முன்னணி நடிகர்.
1992-களில் தமிழில் அறிமுகமானார். அந்த காலகட்டத்தில் பி.வாசு சார் எழுதிய புருஷ லட்சணம் படத்தில் என்னுடன் ஜோடி சேர்ந்தார்.

ஜெயராம் மலையாளம்  கலந்து பேசுவார். அவருடைய பேச்சை ரசிப்பேன். அவர் பலகுரலில் பேசுவதில் கில்லாடி. படப்பிடிப்பு தளத்தில் பலரும் களைப்போடும், டென்சனோடும் இருக்கும்போது ஜெயராம் வந்து விட்டால் போதும். ஏதாவது மிமிக்கிரி செய்து அந்த இடத்தையே கலகலப்பாக்கி விடுவார். அது அவரால் மட்டும் தான் முடியும்.

எப்போதும் சிரித்த முகத்துடன் எல்லோரிடமும் இனிமையாக பழகக் கூடியவர். அவரும் நானும் இணைந்து நடித்த புருஷ லட்சணம் படத்திலேயே நல்ல நண்பர்களாகி விட்டோம். 

மீண்டும் இரண்டு, மூன்று ஆண்டுகளுக்கு பிறகு பி.வாசு சார் கதை எழுதிய ‘பத்தினி’ என்ற படத்தில் நானும், ஜெயராமும் இணைந்து நடித்தோம். 

 வாசு சாரிடம் டைரக்டர் என்ற மரியாதை மற்றும் பயத்துடனேயே இருப்பார் ஜெய்ராம். ஆனால் என்னிடம் துளி அளவும் அது கிடையாது. எப்போதும் வாசு சாரிடம் சின்ன பிள்ளை போல் சண்டை போட்டுக்கொண்டே இருப்பேன்.

ஒருமுறை நானும் ஜெய ராமும் நடித்த படக் காட்சிகள் சென்னையில் அப்போதைய உட்லன்ட்ஸ் ஓட்டலில் (இப்போதைய செம்மொழி பூங்கா) நடந்தது. அப்போது வாசு சார் யூனிட்டில் எல்லோர் முன்பும் வைத்து என்னை திட்டிவிட்டார். 

அவ்வளவு தான் எனக்கு கோபம் வந்தது. ஏற்கனவே வாசு சாரிடம் எதற்கெடுத்தாலும் சண்டை போடுவேன். அன்று அவர் திட்டிய தால் கடும் கோபத்தில் ‘எல்லோர் மத்தியிலும் வைத்து எப்படி திட்டலாம் என்று அவரிடம் கன்னா பின்னா வென்று பேசி சண்டை போட்டேன்.

ஒரு கட்டத்தில் அவரால் என்னிடம் எதிர்த்து பேசவே முடியவில்லை. கோவித்துக் கொண்டு வெளியேறிவிட்டார். அங்கிருந்த ஆன்டியிடம் நான் சாப்பிட்டுவிட்டு வருகிறேன் என்று சொல்லி இருக்கிறார். அவரது வீடு அருகில் உள்ள கோபாலபுரத்தில் தான் இருந்தது.

மேக்கப் போட்டு நடிப்பதற்கு தயாராக இருந்த ஜெயராம்  எங்களுக்குள் நடந்த சண்டையையும் வாசு சாரின் கோபத்தையும்  பார்த்து இனி இன்றைக்கு ஷூட்டிங்   அவ்வளவு தான்... டைரக்டர் வரமாட்டார் என்று வெறுத்துப்போனார். 



ஆனால் அவர் திரும்பி வருவார் என்பது எனக்கு தெரியும். ஏனெனில் வராவிட்டாலும் ஏன் வரவில்லை என்று அதற்கும் சண்டை போடுவேன். 

இப்படி அடிக்கடி சண்டைபோடுவதை பார்த்து ‘உன்னை சமாளிப்பதே எனக்கு பெரும்பாடாக இருக்கிறது’ என்பார். 
நான் படப்பிடிப்பு தளத்தில் ஓய்வாக இருக்கும்போது ஏதாவது புத்தகங்கள் படிப்பேன். அன்றும் அப்படித்தான் கையில் இருந்த புத்தகத்தை விரித்து வைத் திருந்தேன். ஆனால் அது தலைகீழாக இருந்திருக்கிறது. அதை நான் கவனிக்கவில்லை. படித்தால்  தானே தெரியும்....? அவருடன் சண்டை போட்டதால் புத்தகத்தை படிப்பதுபோல் பாசாங்கு செய்து கொண்டிருந்தேன். அவர்   அதை கவனித்துவிட்டார். 

‘படிக்கிறது தப்பில்லை, ஆனால் படிப்பது போல் நடிப்பது தப்பு’ என்று என் அருகில் வந்து என் காதில் விழும்படி சொன்னார். அதை கேட்டதும் நான் எதை வேண்டுமானாலும் படிப்பேன், உங்களுக்கென்ன? என்றேன்.

ஆனால் அவர் கோபப்படாமல் சிரித்துக் கொண்டே படி. ஆனால் தலைகீழாக வைத்து படித்தால் தலையில் ஏறாது என்றார். அதன் பிறகுதான் எனக்கே தெரிந்தது புத்தகம் தலைகீழாக இருந்தது.

இருந்தாலும் நான் விடவில்லை. நான் எப்படி வேண்டுமானாலும் வைத்து படிப்பேன். அது என் இஷ்டம் என்றேன். என்ன வேண்டும் என்றாலும் செய் என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டார்.

ஒருமுறை ஊட்டியில் படப்பிடிப்பு. வாசு சார் வருகைக்காக மதிய வேளையில்  எல்லோரும் காத்தி ருந்தோம். நான் அடிக்கடி வாசு சாரை போல் மிமிக்கிரி செய்வதுண்டு வழக்கமாக  அவர் தோளில் ஒரு துண்டை போட்டிருப்பார். அதன் நுனியை கடித்தபடியே அங்கும் இங்கும் சென்றவாறே  காட்சிகளையும் விளக்குவார்.

நானும் அதேபோல்  ஒரு துண்டை தோளில் போட்டுக்கொண்டு  அதன் நுனியை வாயில் கடித்தபடி படப்பிடிப்பு குழுவினரை பார்த்து ஷாட் ரெடி வாங்க.... என்றேன். டிராலி ரெடியா? ஸ்டார்ட் கேமரா... என்றபடி வாசு சாரை போல் ஒவ்வொருவரையும் எப்படி எப்படி நடிக்க வேண்டும் என்று மிமிக்கிரி செய்து கொண்டு இருந்தேன்.

 ஆனால் சுற்றி நின்ற ஒருவர் கூட சிரிக்கவும் இல்லை. அவர்கள் முகத்தில் எந்த ரியாக்ஷனும் இல்லை மிகவும் அமைதியாக இருந்தார்கள். என்னடா இது எல்லோரும் இப்படி முகத்தில் பேய் அறைந்ததுபோல் நிற்கிறார்களே என்று நினைத்து பின்னால் திரும்பி பார்த்தேன்.

அங்கு வாசு சார் தோளில் கிடந்த துண்டை கடித்தபடி பொங்கி வந்த சிரிப்பை அடக்கிக்கொண்டு அப்படியே நின்றிருந்தார்.  ஸ்பாட்டில் நான் இல்லை என்றால் இப்படித்தான் என்னை நையாண்டி செய்வாயா? என்றார்.

எனக்கோ எது வும் சொல்ல முடிய வில்லை. அய் யய்யோ... மாட்டிக் கொண் டோமே என்று தலையை கவிழ்ந்தபடி நின்று கொண் டிருந்தேன். ஆனால் அவர் சிரித்தபடியே ‘போ... ஷூட்டிங் குக்கு ரெடியாகு’ என்றார்.

பொதுவாக படப் பிடிப்பு தளத்தில் படப்பிடிப்பு நடக்கும் போது எனது சம்பந்த மான காட்சி களில் வாசு சார் டைரக்டராக இருந்தாலும் அவரிடம்   போய்  எந்த சந்தே கமும் கேட்க மாட்டேன். உதவி டைரக்டரை தான் அழைத்து கேட்பேன்.

நான் நடிப்பது எல்லாவற்றையும் சற்று தொலைவில் இருந்து அவர்  பார்த்துக்கொண்டிருப் பார். அவருக்கு தெரியும். அவரது எண்ணம் எதுவாக இருக்குமோ அதை நான் காட்சியில் பிரதிபலிப்பேன். அந்த நம்பிக்கையும், பாசமும் தான் அவரிடம் இவ்வளவு உரிமையை எடுத்துக்கொள்ள வைத்தது.

பத்தினி படம் 1997-ல் பெண்களை சிறப்பாக சித்தரிக்கும் சிறந்த படமாக தேர்வானது. எனக்கு சிறப்பு பரிசையும் பெற்றுத்தந்தது. 
வாசு சார் டைரக்ஷனில் நடித்த ஒவ்வொரு தருணமும் மறக்கமுடியாதவை. இனிமை யானவை.
அதிர வைத்த மற்றொரு சம்பவத்துடன் அடுத்த வாரம் சந்திப்போம்...

எனது ஹீரோ பி.வாசு
பி.வாசு சார் இயக்கத்தில்   சின்னத் தம்பி, மன்னன், உள்பட பல பெயர் சொல்லும் படங்களில் நடித்திருக்கிறேன். 
படத்தில் ஹீரோக்கள் உண்டு. ஆனால் எல்லா ஹீரோக்களையும் தாண்டி எனக்கு ஹீரோ வாசு சார் தான். இன்றும் அவரையே ஹீரோவாக பல விஷயங்களில் பின்பற்றுகிறேன்.
Tags:    

Similar News