செய்திகள்
மழைக்காலங்களில் நோயை தடுக்கும் வழிமுறைகள்

மருத்துவம் அறிவோம் - மழைக்காலங்களில் நோயை தடுக்கும் வழிமுறைகள்

Published On 2021-11-22 09:09 GMT   |   Update On 2021-11-22 09:09 GMT
மருத்துவம் அறிவோம் என்ற தலைப்பில் மழைக்காலங்களில் நோயை தடுக்கும் வழிமுறைகள் குறித்து டாக்டர் கமலி ஸ்ரீபால் ‘மாலைமலர்’ வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்.
மழை என்றாலே மகிழ்ச்சிதான். ஆனால் இன்றைய சூழ்நிலையில் அப்படி சொல்ல முடியவில்லை. பகலில் இதமான காற்று, அழகான வானம், ஆங்காங்கே குடை பிடித்து செல்லும் மக்கள் என்று இல்லாமல் வெள்ளம், வீட்டினுள் தண்ணீர், கட்டில் மேல் ஏறி நிற்க வேண்டிய நிலை என மழை மக்களிடம் தன் பலத்தினை காட்டி வருகின்றது. அதிக குளிர், தண்ணீர் சுத்தமின்மை, கொசுக்கள் என நோய்களை கொடுப்பவையும் வரிசையாய் வருகின்றன.

முதலில் அதிகம் பாதிப்பாக இப்போது காணப்படுவது ஜீரணக் கோளாறு, வயிற்று வலி, வயிற்று போக்குதான். மழையில் வீட்டில் முடங்கி கிடக்கும் பலர் செய்தி பார்ப்பதும் சுடச்சுட பஜ்ஜி, போண்டா, மசால் வடை என உண்பதுமாய் இருக்கின்றனர். உடல் உழைப்பும் இல்லாமல், உடற்பயிற்சியும் இல்லாமல் இப்படி எண்ணை பலகாரங்களை சாப்பிடுவது மேளதாளத்தோடு நோயினை வரவேற்பதாகின்றது.

இத்தோடு காய்ச்சாத நீரினை குடிக்கும் போது கிருமிகளின் தாக்குதல்களும் சேர்ந்து விடுகின்றது. இப்போது மருத்துவமனைக்கு சென்றால் முதலில் “கொரோனா” பரிசோதனையும் செய்ய வேண்டி உள்ளது. இது காலத்தின் கட்டாயம். ஆக சற்று வாயடக்கம் இல்லாத காரணத்தினால்  கொரோனா பரிசோதனை முடிவு வரும் வரை உங்களுக்கு சிகிச்சை முறையாய் இருந்தாலும் நீங்கள் தனிமைப்படுத்தப்படுவீர்கள்.

மீண்டும் உங்கள் ஜீரண மண்டலத்தினை சரி செய்ய குறைந்தது ஒரு வாரம் ஆகி விடும். இதெல்லாம் அவசியம் தானா?
எனவே அதிக காரம், எண்ணை, மசாலா இல்லாத உணவு களை அதிகம் பழக்கப் படுத்துங்கள்.
மழை பெய்வதால் சோம்பலாய் இருக்கின்றது என இழுத்து தலைவரை போர்த்தி படுத்துக் கொள்ள வேண்டாம். வீட்டினுள் இருக்கும் இடத்தில் உடற்பயிற்சி செய்வது தீய கிருமிகள் உடலில் இருந்து நீங்க உதவும்.

சுய சுகாதாரம் மிக அவசியம். எனக்கு வேர்க்கவே இல்லை என்று குளியலுக்கு லீவு போட வேண்டாம். கண்டிப்பாய் அன்றாடம் குளியுங்கள். அன்றாடம் துணிகளை மாற்றி துவைக்க வேண்டும். ஒரே போர்வையை ஒரு மாதம் வரை துவைக்காமல் பயன்படுத்துவது கிருமிகளின் தொழிற்சாலையாக, அதன் முதலாளியாக உங்களை மாற்றி விடும். தலையணை, போர்வை இவற்றினை அடிக்கடி துவைத்து விடுங்கள். கைகளை கண்டிப்பாய் சோப்பு கொண்டு சுத்தம் செய்வது, கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்வது போன்றவை அவசியம் பின்பற்றப்பட வேண்டிய ஒன்றே. மேலும் ஒருவரது படுக்கை விரிப்பு, தலையணை, போர்வை இவற்றினை மற்றவர் பயன்படுத்தக் கூடாது. பொடுகு பிரச்சினை, சரும பாதிப்பு போன்றவை ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்.
காதில் கிருமி தாக்குதல், ஜலதோஷம், புளு காய்ச்சல், கண்ணில் கிருமி தாக்குதல் போன்றவை இந்த கால கட்டத்தில் அதிகம் காணப்படும் ஒன்று. கவனமாக இருங்கள்.


டாக்டர் கமலி ஸ்ரீபால்

மழை பெய்கின்றது, குளிருகின்றது என்று சொல்லி போதிய அளவு நீர் குடிக்காமல் இருந்து விடக்கூடாது. தாகமே இல்லை என்றாலும் அவ்வப்போது சிறிது நீர் குடியுங்கள். இது உங்களின் நோய் எதிர்ப்பு சக்தியினைக் கூட்டும். நீங்களும் சோம்பலாக இருக்க மாட்டீர்கள்.

மழை காரணமாக வெளியில் செல்ல முடியவில்லையா? வீட்டில் குடும்ப நபர்களோடு இருங்கள், பேசுங்கள், பிள்ளைகளோடு விளையாடுங்கள், புத்தி கூர்மையாக்கும் குறுக்கெழுத்து போட்டிகளைச் செய்யுங்கள்.
கொஞ்சம் உலர்ந்த பழங்கள், வானவில் நிற உணவு. பச்சை காய்கறி, கீரை வகைகள் இவற்றை நம் நிரந்தர உணவாக்குங்கள்.
வீட்டை ஒழுங்கு படுத்துங்கள், உங்கள் துணிகளை அளவு பார்த்து, பட்டன் தைத்து சரி செய்வதில் எந்த தவறும் இல்லை.
“உழைப்பும், அடுத்தவர் கஷ்டமும் தெரியாத ஒருவரது வாழ்க்கை உடலாலும், உள்ளத்தாலும் கெட்டே போகும்”
கண்டிப்பாய் கொசுக்களில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள வேண்டும். வேப்பிலை புகை சிறந்தது. எளிதானது, செலவற்றது.
எப்போதுமே உங்கள் செல்போன் முழுமை யாக சார்ஜ் செய்து இருக்கட்டும். மெழுகுவர்த்தி, தீப்பெட்டி நம் இடத்தின் அருகில் இருக்கட்டும்.

பொதுவில் இரவு நேரங்களில் கூடுதல் கவனத்துடன் இருப்போமே!
குளிர் காலமோ, மழை காலமோ, வெயில் காலமோ சில முறையான பழக்கங்களை கடை பிடித்தே ஆக வேண்டும்.
சுகாதாரமற்ற இடங்களில் உண்ணும் பழக்கம் வேண்டாமே.
ஒமேகா 3 மாத்திரைகளையோ, மீன் எண்ணை மாத்திரைகளையோ மருத்துவரின் ஆலோசனையின் பெயரிலேயே எடுத்துக் கொள்ள வேண்டும்.

ராகி கஞ்சி ஒரு டம்ளர் காலையில் எடுத்துக் கொள்ளலாமே.
ராகியில் கால்ஷியம் கொட்டிக் கிடக்கின்றது. உபயோகித்து பயன்பெற வேண்டாமா?
முருங்கை கீரை, மற்ற ஏதேனும் கீரை, கருவேப்பிலை இவற்றினை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
அசைவ உணவு பழக்கம் உள்ளவர்கள் மீன் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
இஞ்சி, மஞ்சள், எலுமிச்சை இவை மனித னின் நண்பர்கள்.
குளிருக்கு இதமாக இருக்கும் என்ற பெயரில் மது, புகை பிடிப்பது வேண்டாம். கிரீன் டீ வெகுவாய் உதவும்.
உடை, சென்ட், மேக்அப் கிரீம் களை குறைத் துக் கொண்டாவது தரமான காலணிகளை அணி யுங்கள்.
வெளிநாட்டின் மிகப்பெரிய ஆய்வு கூறுவது அன்னாசி பழத்தின் 2 வட்டங்கள் அல்லது 12 சிறிய துண்டுகளை தினமும் உண்பது பல நோய்களை தவிர்க்கும் என்பதுதான்.
பைன் ஆப்பிள் எனப்படும் அன்னாசி பழம் உடல் உள் வீக் கங்களைக் குறைக்கும்.

நடைபயிற்சி என்றால் பொதுவில் முன்னோக்கி நடப்போம். கை வீசி நடப்போம். சிலர் கைகளை உயர்த்தியவாறு நடப்பார்கள். இது சாதாரணமாக நாம் பார்க்கும் ஒன்று. ஆனால் பின்னோக்கி நடப்பதும் சிறந்த பலன் அளிக்கும் என்பதனை சிலர் அறிந்திருப்பார்கள். பின்னோக்கி நடக்கவும் பின்பு மெதுவாய் ஓடவும் பழகலாமே. இது கால் தசைகளை நன்கு வலுவாக்கும். உங்கள்  முட்டி மீதும் அதிக அழுத்தம் இராது. இதனால் முட்டி பாதிப்புகளும் குறையும். நிறைந்த பலனையும் அளிக்கும். இது இருதயத்தை பலப்படுத்தும் ஒரு உடற்பயிற்சி. 100 அடி பினனோக்கி நடப்பது பல மடங்கு முன்னோக்கி நடப்பதற்கு சமம். உடலில் சமநிலை கூடும். பக்கப்பார்வை திறன் நன்கு இருக்கும். மூளைக்கு நல்லது. நிற்கும் தோற்றம் கம்பீரமாகவும், உடலுக்கு நன்மை பயப்பதாகவும் இருக்கும். 

* ஆனால் இவ்வாறு பின்னோக்கி நடை, ஓட்டம் பயிற்சி செய்யும் முன் வயது, நோய், சமநிலை இவற்றினை கருத்தில் கொள்ள வேண்டும். மருத்துவரின் ஆலோசனை பெற்று செய்ய வேண்டும். 
* முதலில் நடை, பின்பு மெதுவாக மிதமான ஓட்டம் என்ற முறையில் இருக்க வேண்டும். 
இப்பொழுது கறுப்பு திராட்சை எங்கும் கிடைக்கின்றது. வெளிநாடுகளில் டிசம்பர் 31 அன்று புது வருடத்தினை வரவேற்கும் விதமாக 12 திராட்சை சாப்பிடுவார்கள். ஆனால் பொதுவில் இதில் கிடைக்கும் நன்மைகள் மிக அதிகம். 
* வயிற்றில், குடலில் உடலுக்கு நன்மை செய்யும் நல்ல பாக்டீரியா உருவாக உதவும்.
* நோய் எதிர்ப்பு சக்தி கூடும்.
* புற்றுநோயை தவிர்க்க உதவும்.
* மைக்ரேன் தலைவலி நீங்கும்.
* வைட்டமின் ஏ, பி, சி சத்து நிறைந்தது. பொட்டாசியம், கால்சியம் சத்து நிறைந்தது.
ஒரு பாக்கெட் எண்ணையில் பொரித்த நொறுக்குத் தீனிக்குப் பதிலாக கொஞ்சம் கறுப்பு திராட்சையினையும் வாங்குவோமே.

Tags:    

Similar News