செய்திகள்
மாசிலாமணி சுவாமிகள்

சென்னை சித்தர்கள்: மாசிலாமணி சுவாமிகள் - திருமுல்லைவாயல்

Published On 2021-11-20 10:17 GMT   |   Update On 2021-11-20 10:17 GMT
சிறு வயதில் பக்தி மிகுந்தவராக மாசிலாமணி சுவாமிகள் இருந்திருக்கிறார். இவரது மூதாதையர்கள் வைணவத்தில் தீவிர ஈடுபாடு கொண்டவர்கள்.
சென்னையில் ஜீவ சமாதி ஆகியிருக்கும்  சித்தர்களில் பெரும்பாலானவர்களின் பூர்வீகம் பற்றி யாருக்கும் எதுவும் தெரியாது. அந்த சித்தர்கள் எங்கு பிறந்தார்கள்? எங்கு  வளர்ந்தார்கள்? சென்னைக்கு எதற்கு வந்தார்கள்? எப்படி வந்தார்கள்? என்பன போன்ற கேள்விகளுக்கும் விடை தெரியாது. 

அதுபோல அவர்கள் குறிப்பிட்ட சில பகுதிகளை தேர்வு செய்து தங்களை ஐக்கியமாக்கி கொண்டார்கள். அதிலுள்ள சூட்சும ரகசியங்களுக்கும் இதுவரை யாராலும் விடை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் இந்த சித்தர்கள் எல்லாம் இன்னமும் சென்னையில் புரியாத புதிராகவே இருந்து கொண்டு இருக்கிறார்கள். 

ஆனால் இவர்களில் இருந்து மிகவும் வித்தியாசப்பட்டவர் மாசிலாமணி சுவாமிகள். இவர் சென்னையிலேயே பிறந்து, இங்கேயே வளர்ந்து பின்னர் சித்தராகி அருள் பாலித்தவர்.  தனது சொந்த ஊர் மண்ணிலேயே அதாவது திருமுல்லைவாயல் அருகேயுள்ள சோழம்பேடு பகுதியில் அவரது ஜீவ சமாதி அமைந்துள்ளது. 

சிறு வயதில் இவர் எப்படி இருந்தார்? சித்தப் புருஷர்களுக்குரிய ஆற்றல் அவருக்கு எந்த வயதில் எப்படி ஏற்பட்டது? என்பதற்கு இதுவரை யாராலும் எந்த தகவலையும் சொல்ல இயலவில்லை. சிறு வயதில் பக்தி மிகுந்தவராக மாசிலாமணி சுவாமிகள் இருந்திருக்கிறார். இவரது மூதாதையர்கள் வைணவத்தில் தீவிர ஈடுபாடு கொண்டவர்கள். பெருமாளை தவறாது வழிபாடு செய்து வந்தவர்கள். இதன் காரணமாக மாசிலாமணி சுவாமிகளுக்கும் வைணவத்தில் அதிக ஈடுபாடு இருந்தது. 

குறிப்பாக ஆஞ்சநேயர் மீது அளவுகடந்த பக்தியை மாசிலாமணி சுவாமிகள் வைத்திருந் தார். ஒருநாள் கூட அவர் ஆஞ்சநேயரை வழிபட தவறியதில்லை. பொதுவாக சித்தராக மாறுபவர்கள் பெரும்பாலும் சைவ சமயத்தை பின்புலமாகக் கொண்டவர்களாக இருப்பார்கள். 

மிக மிக அரிதாக வைணவத்தில் இருப்பவர் கள் சித்தர்களாக மாறுவது உண்டு. எனவே  மாசிலாமணி சுவாமிகள் சித்தப் புருஷராக மாறியதும் அரிதான நிகழ்வாகவே கருதப்படுகிறது. சென்னையில் சிறு வயதில் கல்வி கற்ற அவர் திருமணம் செய்து கொள்ளவில்லை. ஒரு கட்டத்தில் ராணுவத்தில் இணைந்து பணியாற்ற தொடங்கினார். 

வடமாநில எல்லையில் அவருக்கு காவல் பணி வழங்கப்பட்டு இருந்தது. அந்த சமயத்தி லேயே அவர் சித்தர்களுக்குரிய அனைத்து ஆற்றல்களையும் பெற்றிருந்தார். இது ஒரு சம்பவம் மூலம் வெளிப்பட்டது. ஒருநாள் நிறைய ராணுவ வீரர்களை ஏற்றிக் கொண்டு பாதுகாப்பு கவச வாகனம் ஒரு முகாமில் இருந்து இன்னொரு முகாமிற்கு சென்று கொண்டிருந்தது. 

அந்த வாகனத்தை ஓட்டிய ராணுவ வீரர் மிகவும் கண்மூடித்தனமாக வாகனத்தை செலுத்தினார். எந்த நேரத்திலும் ராணுவ லாரி கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுவிடும் என்ற அபாய சூழ்நிலை இருந்தது. எவ்வளவோ சொல்லியும் அந்த டிரைவர் ராணுவ வாகனத்தை மேலும் வேகமாக செலுத்தினாரே தவிர வேகத்தை குறைக்கவில்லை. 

அந்த சமயத்தில் மாசிலாமணி சுவாமிகள் எழுந்து சென்று டிரைவரிடம் கண்டிப்புடன் கூறி வாகனத்தை நிறுத்த செய்தார். பிறகு அவர் வாகனத்தில் இருந்து இறங்கி அங்குள்ள ஒரு மரத்தடியில் போய் அமர்ந்து கொண்டார். அவர் இறங்கியதும் டிரைவர் வாகனத்தை மீண்டும் இயக்க முயற்சி செய்தார். 

ஆனால்  ராணுவ வாகனம் பழுதாகி நின்றது போல அந்த இடத்திலேயே நின்று விட்டது. ராணுவ வீரர்களும், டிரைவரும் எவ்வளவோ முயற்சி செய்தும் ஒரு அங்குலம் கூட அந்த வாகனம் அசையவில்லை. இந்த நிலையில் சிரித்துக் கொண்டே மாசிலாமணி சுவாமிகள்  ராணுவ வாகனத்தில் ஏறி அமர்ந்தார். 

அவர் அமர்ந்த அடுத்த வினாடி ராணுவ வாகனம் மீண்டும் இயங்கத் தொடங்கியது. இதைக் கண்டதும் சக ராணுவ வீரர்களும், டிரைவரும் அதிர்ச்சியும், ஆச்சரியமும் அடைந்தனர். மாசிலாமணி சுவாமிகள் சாதாரண ராணுவ வீரர் அல்ல. அனைத்து சக்திகளும் நிறைந்த சித்தர் என்பதை உணர்ந்து கொண்டனர். 

அன்றுமுதல் ராணுவத்தில் மாசிலாமணி சுவாமிகளுக்கு அனைவரும் பயபக்தியுடன் மரியாதை கொடுத்தனர். இதன் காரணமாக ராணுவ பணியை மாசிலாமணி சுவாமிகளால் அமைதியுடன் தொடர முடியாத சூழ்நிலை உருவானது.  எனவே ஒரு கட்டத்துக்கு பிறகு ராணுவ பணியை உதறிவிட்டு சொந்த ஊரான சோழம்பேடுக்கு திரும்ப முடிவு செய்தார். அதன்படி ராணுவப் பணியை நிறைவு செய்தார்.  வடமாநிலத்தில் இருந்து விடைபெற்று விட்டு சென்னைக்கு திரும்பி வந்தார்.

சோழம்பேடு கிராமத்தில் குடியேறிய மாசிலாமணி சுவாமிகள் மீண்டும் ஆஞ்சநேயரை வழிபடும் வழக்கத்தை தொடங்கினார். அப்போதுதான் ஆஞ்சநேயருக்கென்று தனி ஆலயம் இல்லாமல் இருப்பதை உணர்ந்தார். ஆஞ்சநேயருக்கு புதிய ஆலயம் ஒன்றை கட்ட அவர் முடிவு செய்தார். அதன்படி சோழம்பேடு குளக்கரையில் ஆஞ்சநேயர் சிலை ஒன்றை பிரதிஷ்டை செய்தார். தினமும் அவருக்கு அலங்காரம் செய்து, நைவேத்தியம் படைத்து வழிபாடு செய்வதை வழக்கமாக கொண்டிருந்தார். 

ஆஞ்சநேயர் வழிபாடு மூலம் மாசிலாமணி சுவாமிகளுக்கு சித்தர்களுக்குரிய அனைத்து பலன்களும் தங்கு தடையின்றி கிடைத்தன. இதனால் அவரது சக்தி கொஞ்சம் கொஞ்சமாக சென்னை மக்களுக்கு தெரியத் தொடங்கியது. நிறைய  பேர் அவரை தேடி வந்து ஆசி பெற்று சென்றனர். நாளுக்கு நாள் மாசிலாமணி சுவாமிகளை தேடி வரும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்தது. அவர்களிடம் ‘ராம் ராம்‘ என்று உச்சரித்தபடியே அருள் வாக்குகளை மாசிலாமணி சுவாமிகள் தெரிவித்தார். 

1982-ம் ஆண்டு பக்தர்கள் உதவியுடன் ஆஞ்சநேயர் ஆலயத்தை சீரமைத்து மேம்படுத்தினார். அந்த ஆண்டு கார்த்திகை மாதம் கும்பாபிஷேகமும் நடத்தினார். அதன்பிறகு அவரை தேடி வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. பக்தர்கள் மத்தியில் மாசிலாமணி சுவாமிகள் அடுத்தடுத்து பல்வேறு அற்புதங்களை நிகழ்த்தி காட்டினார். திடீரென எப்போதாவது ஆஞ்சநேயர் சிலையை கட்டிப்பிடித்துக் கொண்டு ராம் ராம் என்று சொல்லி கண்ணீர்விட்டு கதறுவார். 

தனக்கு நெருக்கமான பக்தர்களிடம் அவர் உரிய நேரத்துக்கு ஏற்ப அறிவுரைகளை வழங்கி வந்தார். நாடு, காடாகிறது. காடு நாடாகிறது. மனிதர்கள் விலங்குகள் போல மாறுகிறார்கள் என்று அடிக்கடி சொல்லிக் கொண்டே இருப்பார்.
ஆஞ்சநேயர் ஆலயத்தில் அடிக்கடி விழாக்களையும் மாசிலாமணி சுவாமிகள் நடத்துவது உண்டு. பூஜைகள் நடந்து கொண்டு இருக்கும்போது வானரம் போலவே அவர் மாறி விடுவார். கோவிலுக்குள் அங்கும் இங்கும் தாவி குதித்து ஓடுவார். 
அந்த சமயத்தில் அவரிடம் சித்தப் புருஷர்களுக்குரிய அருள் ஆற்றல் பலமடங்கு அதிகரித்து காணப்படும். அந்த சமயத்தில் அவர் சொல்வதெல்லாம் நிதர்சனமாக நடந்தன. சில சமயம் அருள் அதிகமாக இருக்கும்போது அவரிடம் வாழைப்பழங்களை நைவேத்தியமாக படைப்பார்கள். 

அந்த பழங்களை மாசிலாமணி சுவாமிகள் லேசாக கடித்துவிட்டு பக்தர்கள் மத்தியில் தூக்கி போட்டுவிடுவார். அந்த பிரசாதத்தை பெறுவதற்கு பக்தர்கள் மத்தியில் கடும் போட்டி இருக்கும். இவ்வாறு பக்தி நெறியையும், ஆத்ம  நெறியையும் ஒருங்கிணைத்து செயல்பட்டு வந்த மாசிலாமணி சுவாமிகள் பழக்க வழக்கங்களிலும் வித்தியாசமாக காணப்பட்டார். யாசகம் எடுத்துத்தான் உணவு உண்பதை வழக்கமாக வைத்திருந்தார். யாசகத்தில் கிடைக்கும் அரிசி, காய்கறி மற்றும் மளிகை பொருட்களை மொத்தமாக போட்டு தானே தன் கைப்பட சமைப்பார். சாதம் வெந்துகொண்டிருக்கும் போதே 2 கவளம் எடுத்து சாப்பிடுவார். அதுதான் அவருக்கு அன்றைய ஒருநாள் உணவாகும்.
 
அதன்பிறகு அவர் எதுவும் சாப்பிட மாட்டார். சமைத்த உணவுகள் அனைத்தையும் பக்தர்களுக்கும், விலங்குகளுக்கும் சமமாக பிரித்து பங்கிட்டு கொடுத்து விடுவார். அவர் செய்த அற்புதங்களுக்கு ஏராளமானவர்கள் இன்னமும் சென்னையில் சாட்சிகளாக உள்ளனர்.
ஆனால் அவர்களது எடுத்துக்காட்டுகள் ஆவணங்களாக பதிவு செய்யப்படாமல் இருப்பது துரதிர்ஷ்டமாகும். மாசிலாமணி சுவாமிகள் செய்த அற்புதங்கள் தொகுக்கப் பட்டால் அவை ஆச்சரியப்படும் அற்புத பொக்கிஷமாகக் கூட திகழும். 

இத்தகைய சிறப்புப் பெற்ற மாசிலாமணி சுவாமிகள் 1995-ம் ஆண்டு இந்த உலகில் இருந்து விடைபெற முடிவு செய்தார். இதுபற்றி தனக்கு நெருக்கமான சிலரிடம் அவர் சூசகமாக கூறியுள்ளார். ஆனால் அதை அவர்கள் யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. அந்த ஆண்டு டிசம்பர் மாதம் 4&ந் தேதி தமிழுக்கு யுவ ஆண்டு கார்த்திகை மாதம் 18&ந் தேதி திங்கட்கிழமை திரயோதசி திதி, பரணி நட்சத்திரத்தில் காலை 9.10 மணிக்கு அவர் பரிபூரணமடைந்தார். 

அந்த சமயத்தில் அவர் பருத்திப்பட்டில் உள்ள ஒரு வீட்டில் இருந்தார். ராம் ராம் இவனுக்கு நேரம் வந்துவிட்டது. ராம் ராம் என்றபடி அங்குள்ள கட்டிலில் படுத்தார். அப்படியே தனது உடலில் இருந்து ஆத்மாவை பிரித்து ஐக்கியமாகி விட்டார். இதுபற்றி தகவல் அறிந்ததும், அவரது சீடர்கள் ஒன்று சேர்ந்தனர். பருத்திப்பட்டில் இருந்து அவரது உடலை சோழம்பேடுக்கு கொண்டு வந்தனர். மாசிலாமணி சுவாமிகளை எங்கு ஜீவசமாதி செய்வது என்று ஆய்வு செய்தனர். 

இறுதியில் அவர் கட்டிய ஆஞ்சநேயர் ஆலயத்தில் அவரை ஜீவசமாதி செய்வது என்று முடிவு செய்யப்பட்டது. அதன்படி ஆஞ்சநேயருக்கு அருகில் அவரது ஜீவசமாதி அமைக்கப்பட்டது. அப்போது ராம் ராம் முழக்கம் எழுப்பி பஜனை பாடல்கள் பாடப்பட்டன. சுவாமிகள் படுத்த நிலையில் உயிரை பிரித்துக்கொண்டு இருந்தால், அவரை எப்படி ஜீவசமாதி செய்வது என்பதில் மாறுபட்ட கருத்துக்கள் இருந்தன. அப்போது சுவாமிகளின் முக்கிய சீடரான துக்காராம் என்பவர், ‘ஐயா, உங்கள் கால்களை மடக்கிக் கொள்ளுங்கள்’ என்று கூறினார். அடுத்த நிமிடம் மாசிலாமணி சுவாமிகளின் கால்கள் தாமாகவே மடங்கி பத்மாசனம் கோலத்துக்கு மாறியது. 

இதைக் கண்டதும் அங்கிருந்த அனைவரும் மெய்சிலிர்த்தனர். பின்னர் சுவாமிகளின் உடல் சமாதியினுள் உட்கார வைக்கப்பட்டது. 108 குடங்களில் புனித நீர் மூலம் அவர் அபிஷேகம் செய்யப்பட்டார். அவரது உடலை சுற்றி வில்வம், துளசி, விபூதி ஆகியவை போடப்பட்டன. இந்த நிலையில் அவருக்கு ஜீவசமாதி அமைக்கப்பட்டது. இப்போதும் அங்கு மாசிலாமணி சுவாமிகளின் அருள் ஆற்றல் அலை அலையாக வந்து கொண்டிருக்கிறது. கடந்த 18&ந் தேதி அவரது குருபூஜை சிறப்பாக நடத்தி முடிக்கப்பட்டது. 
சுவாமிகளின் ஜீவசமாதி பீடத்தின் மீது அவரது உருவச்சிலையை பிரதிஷ்டை செய்துள்ளனர். அம்பத்தூர் ஓ.டி. பஸ் நிலையத் தில் இருந்து மிக எளிதாக மாசிலாமணி சுவாமிகளின் ஜீவசமாதிக்கு செல்ல முடியும். 
Tags:    

Similar News