செய்திகள்
கொய்யாப்பழம்

இயற்கைத் தரும் இனிய வாழ்வு - மலிவான பழத்தில் நிறைவான சத்து

Published On 2021-11-19 10:35 GMT   |   Update On 2021-11-19 10:35 GMT
இயற்கைத் தரும் இனிய வாழ்வு எனும் தலைப்பில் கொய்யாப்பழம் குறித்து போப்பு அவர்கள் ‘மாலைமலர்’ வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்.
அதிக கிராக்கியுடன் விற்றாலும் கிலோ 60 ரூபாய் தான். அதுவும் இந்தப் பழத்தை விற்பது பெரும்பாலும் கடைக்காரர்களாக அல்லாமல் தலைச் சுமைக்காரர்களாக இருப்பதால் நீங்கள் ஒரு கிலோ வாங்கினால் கொசுறாகக் கால்கிலோ உங்கள் பைக்கு வந்து விடும். அந்தளவிற்கு மலிவான பழத்தை இன்று நாம் பார்க்கவே முடியாது. அதே நேரத்தில் எத்தனை மலிந்த போதும் இதன் அளவிற்குச் சத்தும் சுவையும் மிகுந்த இன்னொரு பழத்தை நீங்கள் காட்டவே முடியாது. அதுதான் கொய்யா.

தமிழகத்து முக்கனிகள் என்பதை சிலர் மா, பலா, கொய்யா என்றும் வேறுசிலர் அந்த இறுதியை அகற்றி விட்டு மா, பலா, வாழை என்றும் அழைப்பதுண்டு. எது எப்படியானாலும் சத்தும் சுவையும் ஒருங்கே பெற்ற பழம் எதுவென்றால் நாம் தயங்காமல் சொல்லத் தகுந்தது கொய்யாப் பழம். 

மற்ற பழங்களை காயாக இருந்தால் ஒதுக்கி விடுவார்கள். ஆனால் கொய்யாவில் மட்டுமே காய் & பழம் இரண்டுமே சம அளவில் மதிக்கப்படுவதாக இருக்கிறது. அதே போல பெரியவருக்குப் பிடிக்கும் பழம் சிறியவர்களுக்குப் பிடிக்காது. சிறியவர்களுக்குப் பிடிப்பது பெரியவர்களுக்குப் பிடிக்காது. ஆனால் கொய்யா மட்டுமே பல் உதிரத் தொடங்கிய பெருசுகள் முதல் பல் முளைக்கத் தொடங்கிய சிறுசுகள் வரை அனைத்து வயதினருக்கும் பிடித்த பழமாக இருக்கிறது. 

மற்றெல்லாப் பழங்களும் குறிப்பிட்ட மாதங்களில் மட்டும் தான் காய்த்துக் கனியும். கொய்யா அனைத்து மாதங்களிலும் பூத்துக் காய்க்கக் கூடியது. அதுபோக கோடை & குளிர் அனைத்துக் காலங்களிலும் உண்ணக் கூடியதாக இருக்கிறது.  ஆண்டிற்கு இரட்டை விளைச்சல் தருவதால் கிட்டத்தட்ட ஆண்டு முழுவதும் நமக்குக் கொய்யா கிடைக்கிறது. 

மிதமான நீர்ச் சத்தும், நார்ச்சத்தும், சதைப்பற்றும் இருப்பதால் எல்லாக் காலங்களிலும் எல்லா வயதினரும் உண்ணத் தகுந்ததாகவும் இருக்கிறது கொய்யா. சிவப்புக் கொய்யா, வெள்ளைக் கொய்யா என இரண்டு வகைகள் இருந்தாலும் இரண்டிலும் சத்துக்கள் அளவு கிட்டத்தட்ட ஒரே மாதிரியாகவே உள்ளது. சிவப்புக் கொய்யாவில் வைட்டமின் சி, சற்று அதிகமாக உள்ளது. மற்றபடி இரண்டிலுமே வைட்டமின் ஏ,பி,சி சத்துக்களும், மக்னீசியம், பாஸ்பரஸ், கால்சியம், இருப்புச் சத்து ஆகியனவும் உள்ளன. 

மாவுத் தன்மையுடன் கூடிய சதைப்பற்று இருப்பதால் ஒருவேளை உணவாக எடுத்தாலும் வயிறு நிறைவு கொள்ளும். இயற்கை இனிப்புச் சுவை இருப்பதால் சர்க்கரை நோய் உள்ளவர்கள் அச்சப்படத் தேவையில்லை. ரத்தத்தில் சர்க்கரையை வெகு நிதானமாகவே கலக்கிறது என்பதால் சர்க்கரை நோய் உள்ளவர்கள் பயமின்றி எடுத்துக் கொள்ளலாம். உயர் ரத்த அழுத்தத்தைக் குறைப்பது போலவே குறைவான ரத்த அழுத்தம் உடையவர்களுக்கும் பலன் தரக்கூடியது கொய்யா. குறை ரத்த அழுத்தம் உடையவர்கள் சிவப்புக் கொய்யா எடுப்பது மிகவும் சிறந்தது.

பெரியவர்கள் அதன் நார்ச் சத்திற்காகவும், நீர்ச்சத்திற்காகவும் எடுக்கும் அதே வேளையில் சிறியவர்கள் அதன் சதைப்பற்றிற்காக மிகவும் விரும்பி உண்கின்றனர். மூளை மென் நரம்புகளைப் போன்ற தோற்றத்தைக் கொண்டிருப்பதாலோ என்னவோ கொய்யாவின் சதையின் ஊடாக ஓடும் நார்கள் குழந்தைகளின் மூளைக்கு நிறைய ஆற்றலை வழங்குவதாகக் கூறுகின்றனர். அதனால் நன்றாகக் கனிந்த கொய்யாக் கனியை விரல்களால் மசித்து குழந்தைகளுக்கு ஊட்டுவது நல்லது. 

மூன்று வயதினைக் கடந்து பற்கள் ஓரளவு பலப்பட்டுள்ள சிறுவர்கள் கொய்யாக் காயையே பெரிதும் விரும்புவார்கள். துவர்ப்பம், இனிப்பும் கலந்த சுவையில் இருக்கும் கொய்யாக் காய் இறுகலான திப்பி திப்பியான சதையமைப்பைக் கொண்டிருக்கும். இந்தச் சுவையும், காயின் கட்டமைப்பும்  வளரும் பிள்ளைகளின் சிறு  பெருங்குடல்களுக்கு உறுதித் தன்மையை வழங்குகின்றன. எனவே குழந்தைகள் கொய்யாக் காயை விரும்புவது இயற்கையானது தான். அதேபோல வளர்ந்த இளைஞர்களும், பெண்களும் கடினமான காயை விரும்புவதைப் பார்த்திருப்போம். சதை மற்றும் குடல் உறுதிக்கு இந்தக் காய் ஏற்றது. அதுபோக வயிற்றைச் சுத்தம் செய்யவும் துணைபுரியும். 

கொய்யாக் காயைக் கடித்து மென்று உண்பதன் மூலம் வயிறு மற்றும் குடல்கள் பகுதிகள் உறுதியடைவதால் நீண்ட நாட்பட்ட மலக்கட்டு நீங்கும். குடல் உறுதியடைந்த பிறகு மலக்கட்டு நீங்கி விட்டால் அதன் பின்னர் மலச்சிக்கல் இராது. ஆனால் அதற்குப் பின்னர் மலச் சிக்கல் கொண்டிருந்தோரின் உணவுப் பழக்கம் முறையாக இருத்தல் வேண்டும். 

தற்கால வாழ்க்கை முறையில் மாவுப் பொருட்களை உண்பது அதிகரித்து விட்டது. மாவுப் பொருட்கள் என்றால் இட்லி, தோசை, பிரட், கேக், இனிப்பு வகைகள் அத்தனையும் மாவுத் தன்மையானவையே. உண்ணுகிற பொருட்கள் எதையும் வாயில் இட்டு மென்றால் நம்மையறியாமல் கூழ் உள்ளே சென்று விடும். இப்படி கரைந்து செல்கிற அனைத்தும் மாவுப் பொருட்கள் ஆகும். வாயில் இட்டு மென்ற சிறிது நேரத்தில் சாறாகவும், கூழாகவும் உள்ளே இறங்கியது போக வாயில் சிறிதளவேணும் சக்கைத் தங்கி இருப்பதே நார்ச்சத்துள்ள பொருளாகும். மேலும் மேலும் மென்று உண்பது தான் பற்களுக்கும், தாடைக்கும், முகவடிவத்திற்கும் நல்லது. 

நார்ச்சத்துள்ள பொருட்களை மென்று விழுங்குதல் முகத்தை விட உள்ளுறுப்புகளுக்கும், சதைக்கும், ரத்தத்திற்கும் நல்லது. தற்காலத்தில் ”வாயில் வைச்சதும் வெண்ணையா கரைஞ்சு ஓடுதய்யா. அவ்வளவு நல்லா இருக்கு” என்று ஒரு உணவுப் பொருளின் மேன்மையைப் புகழ்ந்து கூறுவார்கள். உண்மையில் இது சிறப்பான தகுதியாகாது. அவ்வாறு கரைந்து செல்லும் உணவுப் பொருள் வயிற்றில் இறங்கியதும் சட்டென்று ரத்தத்தில் கலந்து விடும். அதனால் தான் உண்டு இரண்டு மணி நேரத்தில் திடீரென்று ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்து விடுகிறது. சர்க்கரை அளவு சட்டென்று கூடினால் அதே வேகத்தில் இறங்கவும் செய்யும். அதனால் தான் மிகைச் சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கே குறைவுச் சர்க்கரைப் பிரச்சினையும் ஏற்படுகிறது. 

உடலியக்கம் உடைய அனைவருக்கும் சர்க்கரை தேவைதான். ஆனால் அது உணவில் இருந்து நிதானமாகப் பெறப்பட்டு நிதானமாகவே ரத்தத்தில் சேர வேண்டும். ஆனால் இன்றைய வாழ்க்கை முறையில், உணவு முறையில் சர்க்கரையை ரத்தத்தில் பளீரென்று கொட்டும் விதமாக அனைத்தும் வடிவமைக்கப்பட்டு விட்டது. 

இன்று இத்தனை மழை பெய்தாலும் அடுத்த நான்கு மாதங்களில் நாம் நீருக்கு அலையும் நிலைக்குத் தள்ளப்பட்டு விடுவோமே அதுபோல ஒரு நேரத்தில் சர்க்கரை அதிகமாக இருப்பதும் இன்னொரு நேரத்தில் சர்க்கரை இயல்புக்குக் குறைவாக இருப்பதும் நடக்கிறது. மழை பெய்யும் போது அதனைப் பிடித்து நிறுத்தி வைக்கும்படியாக புதர்களும், புல் படர்வும், மர வேர்களும் இருக்க வேண்டும். அப்படி இருந்தால் நீரோட்டப் பாதையில் நீர் நிதானமாக வடிந்து ஆற்றொழுக்காகச் செல்லும். ஆற்றொழுக்காகச் செல்லும் நீரையும் பெரிய அணைகளுக்கு மாறாக அங்கங்கே சிற்சிறு அளவில் தடுத்து வைக்கும் படியாகத் தடுப்பணைக் கட்டப்பட்டு இருக்குமானால் ஆறு ஓடுகிற பாதையில் உள்ள கரையோர மக்கள் அனைவரும் பயன்பெறுவார்கள். ஒட்டுமொத்தமாக நிலத்தடி நீர் மட்டமும் உயரும். 

ஆனால் இன்றோ தொடர் மழை பெய்யும் போது அதனைப் பிடித்து நிறுத்தி வைக்க எந்தப் பிடிமானமும் இல்லாததால் மழை நீர் நிலத்தை அறுத்துக் கொண்டு காட்டாற்று வெள்ளமெனப் பாய்ந்து நான்கைந்து நாட்களில் கடலில் கலந்து முடிந்து விடுகிறது. அல்லது நகரங்களில் வெள்ளமாய்த் தேங்கி நிற்கிறது. எப்படியானாலும் மக்கள் அமுதமாகக் கொண்டாட வேண்டிய மழை பெருந்துயராக மாறி விட்டது. 



மழை நீரை பிடித்துச் சேமித்து வைத்து நாம் பயன்படுத்த வேண்டியது போல கொய்யாவின் சத்துக்களை வயிற்றில் இருத்தி நிதானமாக ரத்தத்தில் கலக்கும் விதமாக இருக்கிறது கொய்யாக் காயின் இறுகலான, திப்பித் திப்பியான, நார்த்தன்மை மிகுந்த அதன் கட்டமைப்பு. எனவே சிறியவர்கள், பெரியவர்கள், சர்க்கரை நோயுள்ளவர்கள் என அனைவரும் உண்பதற்கு ஏற்றது கொய்யாக் காய். கொய்யாவைக் காயாக உண்கிற போது அதில் உள்ள துவர்ப்பும் இனிப்பும் கலந்த சுவை ரத்தத்தில் சர்க்கரையை நிதானமாக ஏற்றுவதோடு கொய்யா விதைகள் நமது எலும்புகளுக்குத் தேவையான கால்சியம் சத்துக்களைப் பெருமளவு வழங்குகிறது. 

பற்களும், ஈறும் பலவீனமடைந்தவர்கள், கொய்யாவைக் காயாக கடித்து மென்றுத் தின்ன முடியாதவர்கள் பழமாகச் சாப்பிடுவதில் எந்தக் குறைபாடும் இல்லை. கொய்யாப் பழத்தை பல நேரங்களில் நான் ஒருவேளை உணவாகவே எடுத்துக் கொள்வது வழக்கம். பயணத்தின் போதெல்லாம் கண்ட இடங்களில் கண்ட பொருளையும் உணவு என்ற பெயரில் வயிற்றில் கொட்டி, காசையும் விரயமாக்குவதற்குப் பதிலாகக் கொய்யாப் பழம் இரண்டை வாங்கிச் சுவைத்துக் கொண்டே போனால் உண்பதற்குத் தனியாக நேரம் ஒதுக்க வேண்டியதும் இல்லை. பயணமும் இலகுவாக இருக்கும். உடலும் ஆரோக்கியமாக இருக்கும். அடுத்தநாள் காலைக் கடனும் சுலபமாகக் கழியும்.  

கொய்யாப் பழத்தைத் தனி உணவாக எடுக்கப் பிடிக்கவில்லை என்றால் கொய்யாப் பழத் துண்டுகளை சப்பாத்தி அல்லது ரொட்டிக்கு நடுவில் வைத்து உண்ணலாம். நமது உண்ணும் முறையில் பாரம்பரியத்தில் இருந்து விலகி வெகுதொலைவிற்கு வந்து விட்டிருக்கிறோம். ஆனால் சத்தான உணவை சலிப்பூட்டும் முறையிலேயே உண்டு வருகிறோம். அதனால் தான் பழம் போன்ற ஆரோக்கிய உணவுகளை நம்மால் அடிக்கடி எடுக்க முடிவதில்லை. கொய்யாப் பழம் உண்பதைப் பழமாக மட்டுமே உண்ணும் முறையில் இருந்து மாற்றம் கொண்டு வர வேண்டும். 

கொய்யா எத்தனை வாசனை மிகுந்த பழம். மேநாட்டு விருந்துகளில் கொய்யாவை அலங்காரப் பொருளாகவும் வாசனைக் கனியாகவும் சேர்த்து சுவை கூட்டுகின்றனர். அமெரிக்காவில் இருந்து 17 ஆம் நூற்றாண்டில் உலகம் முழுவதும் பரவிய கொய்யா பல மேற்கத்திய நாடுகளில் விருந்து மேசையை அலங்கரிக்கும் கனியாக மாறி விட்டது. நாம் கொய்யாவை இன்னும் ஜூஸாகக் கூடக் குடிப்பதில்லை. கொய்யாப் பழத்தை தேங்காய்ப் பாலுடன் கலந்து சாறாகக் குடித்தால் வயிறும் இதமாக இருக்கும். செரிமானம் தொடர்பான தொல்லைகள் நீங்கும். அடிக்கடி கொய்யாச் சாறு எடுத்து வந்தால் பல வருடங்களாக நீடித்து வருகிற வாயுத் தொல்லைகள் நீங்கும். 

நீரும், சதைப்பற்றும் நிரம்பி இருப்பதால் இரவு வேளைகளில் எடுத்தால் சிலருக்குச் சளிப்பிடிக்கக் கூடும். காலை நேரங்களில் சாறாகப் பருகினால் காலை நேரத்தில் உணவுக்குப் பின் தோன்றும் மந்தத் தன்மை நீங்கி சுறுசுறுப்பை அடையலாம். இதுபோன்ற மழைக் காலத்தில் சிறிதளவு பட்டை, கிராம்பு சேர்த்து பாலில்லாத தேநீர் தயாரிக்கும் போது பத்துப் பேருக்கு ஆன தேநீரில் அரைக் கொய்யாப் பழத்தையும் மசித்துப் போட்டுக் கொதிக்க வைத்தால் மணம் மிகுந்த தேநீர் உடலுக்கு மட்டுமல்ல மூளைக்கும் சுறுசுறுப்பைத் தரும். 

கொய்யாக் கொழுந்தினைப் போட்டு தேநீர் தயாரிக்கும் பழக்கம் அதிகரித்து வருவது நமது ஆரோக்கியத்தின் மீதான அக்கறைப் பெருகி வருவதையே காட்டுகிறது. கைக்கெட்டும் உயரத்தில் தொங்கும் கொய்யா மிகச் சிறிய அளவிலும் பயிரிடப்படுகிறது. அதிக வெப்பத்தையும் தாங்கி பலன் தரக்கூடியதாக இருப்பதால் யாரும் அதிக முதலீடின்றி அதிகப் பராமரிப்பின்றி பரவலாகப் பயிர் செய்கின்றனர். இந்தியாவில் பீகார் தான் கொய்யா விளைச்சலில் முதலிடத்தில் இருக்கிறது. அடுத்த இடத்தில் அதனையடுத்து தமிழகமும், கர்நாடகாவும் இருக்கின்றன. 

கொய்யாப் பழம் மலிவாகக் கிடைத்தால் அரைத்துக் கூழாக்கி ஜாமாகத் தயாரித்து வைத்துக் கொண்டால் அவ்வப்போது தோசையுடன், சப்பாத்தியுடன் வைத்துச் சாப்பிடலாம். பிள்ளைகளுக்கு ரசாயனக் கலவையுடன் கூடிய ஏதோவொரு ஜாம் வாங்கித் தருவதற்குப் பதிலாக இயற்கை மணத்துடன் கூடிய கொய்யா ஜாமை பிரட், ரொட்டித் துண்டுகளோடு வைத்துக் கொடுக்கலாம். 

அடுத்தமுறை கொய்யாவைக் காயாகவோ பழமாகவோ பார்த்தால் சாதாரணமாகக் கடந்து செல்லாமல் மேலே வாசித்த நினைவுகளுடன் காதலுடன் பார்த்து வாங்கி உண்ணுங்கள். நலம் பெறுங்கள்.
Tags:    

Similar News