பாராளுமன்ற மக்களவையில் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் இன்று மத்திய பொது பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றினார்.
பாராளுமன்ற தேர்தலையொட்டி 2019-20-ம் நிதி ஆண்டுக்கான முழுமையான மத்திய பட்ஜெட் இன்னும் தாக்கல் செய்யப்படவில்லை. இடைக்கால பட்ஜெட்டைத்தான் கடந்த பிப்ரவரி 1-ந் தேதி அப்போதைய நிதி மந்திரி பியூஸ் கோயல், பாராளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்தார்.
2019-20-ம் நிதி ஆண்டின் முதல் 4 மாத காலத்துக்கு, அதாவது புதிய அரசு பதவி ஏற்று, முழு பட்ஜெட் தாக்கல் செய்து நடைமுறைக்கு வரும் வரையிலான காலத்துக்கு மத்திய அரசு ஊழியர்கள் சம்பளம், நடைமுறையில் இருந்து வருகிற திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதற்கு அந்த இடைக்கால பட்ஜெட் உதவியது.
இப்போது தேர்தல் நடந்து முடிந்து, பா.ஜனதா கூட்டணி அமோக வெற்றி பெற்று, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான புதிய அரசு கடந்த மே மாதம் 30-ந் தேதி பதவி ஏற்றது. நிதி மந்திரியாக தமிழ்நாட்டைச் சேர்ந்த நிர்மலா சீதாராமன் பதவி ஏற்றார். பதவி ஏற்றவுடன் அவர் 2019-20-ம் நிதி ஆண்டுக்கான முழு பட்ஜெட் தயாரிப்பு பணியில் ஈடுபட்டார்.
2024-ம் ஆண்டுக்குள் இந்தியா 5 லட்சம் கோடி டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.350 லட்சம் கோடி) பொருளாதார நாடாக உருவாக வேண்டும் என்பது பிரதமர் மோடியின் கனவு ஆகும். அதற்கு ஏற்றவகையில் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கான திட்டங்கள் பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளன.