பெண்கள் உலகம்
பாராட்டக் கற்றுக்கொள்ளுங்கள்..

பாராட்டக் கற்றுக்கொள்ளுங்கள்..

Published On 2022-05-11 06:12 GMT   |   Update On 2022-05-11 06:12 GMT
கணவர் மனைவியை பாராட்டுவதும், மனைவி கணவரை பாராட்டுவதும் குடும்ப உறவை வலுப்படுத்தும். அந்த பாராட்டு பலவிதங்களில் இருவரையும் உற்சாகப்படுத்தும்.
பாராட்டு என்பது ஒருவருடைய உழைப்பை நாம் மதிக்கிறோம் என்பதன் அடையாளம். பாராட்டை ஏற்றுக்கொள்பவர்களும், பாராட்டியவர்களை மதிக்க கடமைப்பட்டவர்கள். கணவர் மனைவியை பாராட்டுவதும், மனைவி கணவரை பாராட்டுவதும் குடும்ப உறவை வலுப்படுத்தும். அந்த பாராட்டு பலவிதங்களில் இருவரையும் உற்சாகப்படுத்தும்.

உடை அலங்காரம்: அணிந்திருக்கும் உடை, சிகை அலங்காரம் போன்ற விஷயங்களில் கணவரின் உண்மை அபிப்பிராயத்தை தெரிந்து கொள்வதற்கு மனைவி விரும்புவார். நேர்த்தியான தனது உடை அலங்காரத்தை கணவர் பாராட்ட வேண்டும் என்றும் எதிர்பார்ப்பார். எந்த உடைக்கு எந்தவிதமான அலங்காரத்தை தேர்வு செய்தால் அழகாக பொருந்தும் என்பதை கணவர் மனைவியிடம் சுட்டிக்காட்டலாம். சிகை அலங்காரத்தில் என்னென்னெ மாறுதல்களை செய்யலாம் என்பதையும் பட்டியலிடலாம். முன்பை விட அழகாக இருந்தால் தயங்காமல் பாராட்டலாம். இதுபோன்ற பாராட்டு மனைவியை மகிழ்விக்கும். மனைவியும் கணவரின் உடை, அலங்காரம் போன்ற விஷயத்தில் மாற்றங்களை எதிர்பார்ப்பார். மனைவி சொல்லும் கருத்தை கணவர் ஆமோதிக்க வேண்டும். அதனை பின்பற்றி தனது தோற்றத்தில் மாற்றத்தை உணர்ந்தால் மனைவியை தயங்காமல் பாராட்டவும் வேண்டும்.

பொறுப்பு: தன்னை சார்ந்திருப்பவர்களை பொறுப்புடன் கவனித்துகொள்வது பெரும்பாலான ஆண்களின் குணமாகும். அதற்காக சில அசவுகரியங்களையும் ஏற்றுக்கொள்வார்கள். மற்றவர்களுக்கு தக்க சமயத்தில் உதவுவது, ஆதரவாக இருப்பது போன்ற சமூக பொறுப்புள்ள பணிகளை விரும்பி செய்யும்போது தாராளமாக பாராட்ட வேண்டும். அதுவும் பெண்கள் பாராட்டினால் அதன் மதிப்பே தனித்துவமானது. குறிப்பாக கணவர் மேற்கொள்ளும் சமூக சேவையை பாராட்டவேண்டிய பொறுப்பு மனைவிக்கு இருக்கிறது. அலுவலகங்களில் மற்றவர்களோடு சேர்ந்து சமூக பணிகளில் பங்கேற்பது, நெருக்கடியான சூழலில் மற்றவர்களின் பணியை பொறுப்பெடுத்து செய்வது, மற்றவர்களுக்கு தெரியாத வேலையை கற்றுக்கொடுப்பது, அறிமுகமில்லாத நபர்களுக்கு உதவுவது போன்ற செயல்களை ஆண்கள் மனமுவந்து செய்வார்கள். இதையெல்லாம் அவர்களின் பணிக்கு மத்தியில் கூடுதல் நேரத்தை செலவழித்து செய்ய வேண்டியிருக்கும். அந்த சமயத்தில் மனைவி, கணவர் மனம் நோகும்படி நடந்து கொள்ளக்கூடாது. கணவரின் சுபாவத்தை நினைத்து பெருமிதம் கொள்ள வேண்டும். பாராட்டி கவுரவிக்க வேண்டும்.

பேச்சு: குடும்ப விஷயங்களில் முக்கிய முடிவுகளை கணவர்-மனைவி இருவரும் சேர்ந்து எடுப்பதே சிறப்பானது. இக்கட்டான சூழலில் கணவர் எடுக்கும் முடிவுக்கு மனைவி ஆதரவாக இருக்க வேண்டும். அதனால் நன்மை ஏற்படும்போது கணவரை மனமுவந்து பாராட்ட வேண்டும். சிக்கலான விஷயங்களுக்கு பேச்சுவார்த்தை மூலம் சாமர்த்தியமாக தீர்வு காணும்போது கணவரின் பேச்சு திறமையை பாராட்டலாம். அது அவரை மேலும் ஆக்கப்பூர்வமாக சிந்திக்க வைக்கும். மன குழப்பத்தில் இருக்கும்போது கூட மனம் தளராமல் முடிவெடுக்க வழிவகுக்கும்.

தனித்திறன்: செய்யும் தொழில், வியாபாரம், வேலை இவைகளை கடந்து வேறு ஏதேனும் தனித்திறன்கள் கணவரிடம் இருந்தால் அதை நிச்சயம் பாராட்ட வேண்டும். அது மேலும் அவரை உற்சாகத்துடன் செயல்பட தூண்டும். விளையாட்டு, சங்கீதம், ஓவியம், கலை போன்ற தனித்திறன்களை பாராட்டுவதன் மூலம் வாழ்க்கையின் அடுத்த கட்டத்தை நோக்கி உற்சாகமாக பயணிப்பார்கள். மேலும் இந்த பாராட்டுகள் அவர்களுக்கு பல நன்மைகளை ஏற்படுத்தி கொடுக்கும். செய்யும் வேலையில் சோர்வு அடையும்போது இதுபோன்ற விஷயங்கள் அவர்களை மகிழ்ச்சி அடைய செய்யும்.

இளமை: பொதுவாக கணவர்மார்கள் ஆடை, அலங்கார விஷயத்தில் ஆர்வம் கொள்ள மாட்டார்கள். ‘இன்று நீங்கள் ரொம்ப ஸ்மார்ட்டாக இருக்கிறீர்கள்’ என்று கணவரிடம் கூறி பாருங்கள். அதுவரை அவரிடம் குடிகொண்டிருந்த களைப்பெல்லாம் போய்விடும். அந்த அழகை தக்கவைத்துக்கொள்ள முயற்சிப்பார்கள். இந்த உடையில் நீங்கள் இளமையாக இருக்கிறீர்கள் என்று பாராட்டி விட்டால் போதும். வயதை மீறிய உற்சாகம் வெளிப்பட்டுவிடும். ஆடை, அலங்காரம் மீது தினமும் கவனம் பதிக்க தொடங்கிவிடுவார்கள்.

நம்பிக்கை: நெருக்கடியான சூழ்நிலையில், ‘நான் உங்களை நம்புகிறேன். உங்களால் நிச்சயம் நினைப்பதை சாதிக்க முடியும் என்று நம்புகிறேன்’ என்று ஒரு வார்த்தை கூறினால் போதும். நம்பிக்கை என்பது தனி மரியாதையையும், நன் மதிப்பையும் ஏற்படுத்திக்கொடுக்கும். அதை எப்போதும் ஆண்கள், பெண்களிடம் இருந்து எதிர்பார்ப்பார்கள். கணவர் மீது நம்பிக்கை வைத்து, அவருக்கு பக்கபலமாக இருந்தாலே போதுமானது.

புதிய தொழில்நுட்பம்: இன்றைய கணினி யுகத்திற்கு ஏற்ப தொழில்நுட்பங்களை கற்றுக்கொள்வதற்கு பலரும் ஆர்வம் காட்டுகிறார்கள். அதில் கைதேர்ந்தவர்களாக விளங்கி சாதனை புரிவதற்கும் முயற்சிப்பார்கள். கணவர் புதிய தொழில் நுட்பங்கள் மீது ஆர்வம் கொண்டவராக இருந்தால் அவரை பாராட்டி உற்சாகப்படுத்தலாம். தொழில்நுட்பங்களில் புதுமை படைக்கும்போது உடன் இருப்பவர்கள் யாராவது பாராட்டினால் அது அவர்களை மேலும் சாதிக்க தூண்டும்.

குடும்ப பாசம்: குடும்ப உறுப்பினர்கள் மீது அன்பும், பாசமும் கொண்டிருப்பது ஆண்களின் இயல்பான சுபாவத்திலேயே கலந்திருக்கும். ஆனால் அதனை வெளிப்படுத்தமாட்டார்கள். சிலர் வெளிப்படுத்துவதற்கு தயங்குவார்கள். பொதுவாகவே ஆண்கள் குடும் பத்தை அனுசரித்து வாழும் வழக்கம் கொண்டவர்கள். குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் நல்ல நிலைக்கு கொண்டுவர வேண்டிய பொறுப்பு அவர்களுக்கு இருக்கிறது. எல்லோரையும் நல்லபடியாக பார்த்துகொள்வது தனது கடமை என்று கருதுவார்கள். அதற்காக சில சமயத்தில் கடுமையாக நடந்து கொள்ள நேரிடும். அந்த சமயத்தில் அதை உணர்ந்தும், ஏற்றுக்கொண்டும் வாழ பழகிக்கொள்ள வேண்டும். மற்றவர்கள் தவறாக புரிந்து கொண்டாலும் மனைவி கணவருக்கு பக்கபலமாக இருக்க வேண்டும். கணவரின் கண்டிப்பின் பின்னணியில் இருக்கும் உண்மை நிலையை குடும்பத்தில் உள்ளவர்களிடம் விளக்கமாக எடுத்து கூறி அவர்களை சமாதானப்படுத்த வேண்டும். இதுவே கணவருக்கு தரும் மரியாதையாக அமையும். இதையே கணவரும் எதிர்பார்ப்பார். குடும்ப நலனுக்காக கணவர் மேற்கொள்ளும் நடவடிக்கைகளை மனைவி பாராட்ட வேண்டும்.
Tags:    

Similar News