பெண்கள் உலகம்
தன்னம்பிக்கை

தன்னம்பிக்கை உடையவரா நீங்கள்?

Published On 2022-03-04 03:39 GMT   |   Update On 2022-03-04 07:26 GMT
உங்களிடத்தில் தன்னம்பிக்கை இருக்கிறதா என்று சோதித்து பார்க்க இந்த கட்டுரை உதவும். தன்னம்பிக்கை நிரம்பியவர்கள் எப்படி நடந்து கொள்வார்கள், எப்படி செயல்படுவார்கள் என்பதை தொகுத்திருக்கிறோம்.
உங்களிடத்தில் தன்னம்பிக்கை இருக்கிறதா என்று சோதித்து பார்க்க இந்த கட்டுரை உதவும். தன்னம்பிக்கை நிரம்பியவர்கள் எப்படி நடந்து கொள்வார்கள், எப்படி செயல்படுவார்கள் என்பதை தொகுத்திருக்கிறோம். அதை உங்கள் வாழ்க்கையோடு பொருத்திப் பாருங்கள். உங்கள் தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ளும் டிப்ஸ்... தன்னம்பிக்கை நிறைந்தவர்கள் அதிகம் விரும்பும் நபர், அவர்களாகத்தான் இருப்பார்கள். யாராக இருந்தாலும் சரி, அவர்களிடம், தான் இப்படித்தான் என்று வெளிப்படையாக இருப்பார்கள். பிறரைப் போலத் தன்னிடத்திலும் குறைகள் உண்டு என்பதை உணர்வார்கள். அவர்களின் எண்ணங்கள் ஒத்துப்போகும் ஒரே அலைவரிசையில் இருப்பவர்களோடுதான் அதிகம் உறவாடுவார்கள்.

தன்னம்பிக்கையுடைய மனிதர்கள் தாங்கள் எடுக்கும் முடிவில் அடுத்தவர்கள் தலையிடுவதை அனுமதிக்க மாட்டார்கள். பிறரின் ஆலோசனைகளை அவர்கள் கேட்டாலும், எது சரி, எது தவறு என்பதை ஒருமுறைக்கு பலமுறை யோசித்து, தங்களுக்கு எது சரியென்று தோன்றுகிறதோ அதன்படியே செயல்படுவார்கள்.

தன்னம்பிக்கை உடையவர்கள் சவால்களை எதிர்கொள்ள தயங்க மாட்டார்கள். எதிர்கொள்ளும் சவால்கள் அனைத்தும் தங்களின் சக்திக்கு அப்பாற்பட்டவையாக இருந்தாலும்கூட, அது தங்களுக்கு ஒரு புது அனுபவமாக இருக்கக் கூடும் என்று எண்ணி துணிவுடன் செயல்படுவார்கள்.

தாங்கள் செய்யும் அனைத்து செயல்களுக்கும், அதனால் விளையும் விளைவுகளுக்கும் தாங்கள்தான் பொறுப்பு என்பதை நன்கு உணர்வார்கள். சில சமயங்களில், வாழ்க்கை என்னும் விளையாட்டின் முடிவுகள் கை மீறிப் போகும்போது, அதை எப்படித் தங்களுக்குச் சாதகமாக மாற்றிக்கொள்ள முடியும் என்பதைப் பற்றிதான் யோசிப்பார்களே தவிர அதிலிருந்து எப்படி வெளியேறுவது என்பதைப் பற்றிச் சிந்திக்கவே மாட்டார்கள்.

அவர்கள் காணும் கனவுகள் அனைத்தும் நிறைவேற வேண்டும் என்பதில் கருத்தாக இருப்பார்கள். எத்தனை தடைகள் வந்தாலும் அதைத் தகர்த்தெறிந்து கனவுகள் நனவாகப் பாடுபடுவார்கள்.

தோல்வியடையும் போதும், ஒவ்வொரு முயற்சியிலும் தங்களை ஊக்குவிக்க மற்றவரின் ஆறுதல் அவசியம் என்று அவர்கள் நினைப்பதில்லை. எதைக்காட்டிலும் சுயமரியாதை அவசியம் என்று எண்ணுவார்கள். பிறரிடம் கருத்து விவாதம் செய்வது அவர்களுக்குப் பிடித்தமான ஒன்று. எதிர்தரப்பினர் கூறும் கருத்துகளில் நியாயம் இருந்தால் அதை ஏற்றுக்கொள்ளத் தயங்கமாட்டார்கள். தன் கருத்துகள் அனைத்தையும் பிறர் ஆமோதிப்பதையும் விரும்பமாட்டார்கள்.
Tags:    

Similar News