பெண்கள் உலகம்
மாமியார்-மருமகள் நல்லுறவை வலுப்படுத்தும் வழிகள்

மாமியார்-மருமகள் நல்லுறவை வலுப்படுத்தும் வழிகள்

Published On 2022-01-20 03:26 GMT   |   Update On 2022-01-20 03:26 GMT
வயதானவர்கள்‌ தெரிவிக்கும் ‌கருத்துக்களையும்‌, யோசனைகளையும்‌ இந்த காலத்திற்கு ஏற்றதல்ல என்று ஒதுக்கி விடாதீர்கள்‌. அவர்கள்‌ அனுபவத்தின்‌ மூலம்‌ பெற்ற பாடங்களாக அவை இருக்‌கலாம்‌.
திருமணத்திற்கு பின்‌ புகுந்த வீட்டில் காலடி எடுத்துவைக்கும்‌ ஒவ்வொரு பெண்ணுக்கும்‌ ஆரம்பத்தில்‌ லேசான கலக்கம் ‌ இருக்கும்‌. தாய்‌ வீட்டிலிருந்து முற்றிலும்‌ மாறுபட்ட ஒரு புதிய சூழலை‌ எதிர்‌ நோக்குவதால்‌ இந்த கலக்கம்‌ இயற்கையாகவே எழுகிறது. கணவனுடன்‌ தனிக்குடித்தனம் ‌நடத்தும்‌ வாய்ப்பு தொடக்கத்திலேயே கிடைத்துவிட்டால்‌ அந்த கலக்கத்தின் வீரியம் குறைந்துவிடும்.

அதேசமயம்‌ கூட்டுக்‌ குடும்பம்‌ என்றால்‌ மாமியார்‌, மாமனார்‌, மைத்துனி, மைத்துனர்‌ குழந்தைகள்‌ என்று பல்வேறு தரப்பினரின்‌ விருப்பங்களுக்கு ஏற்ப அவர்‌களுக்கு பணிவிடை செய்து அனுசரித்து செல்ல வேண்டிய கட்டாய சூழல் ‌உருவாகும். இந்த கட்டாய சூழலை சாமர்த்தியமாக சமாளிக்கும் யுக்தி புதுப்பெண்ணுக்கு தெரிந்திருக்க வேண்டியது அவசியம்‌. அப்‌போதுதான்‌ மாமியார்‌-மருமகள்‌ இடையே போர்‌ மேகங்கள்‌ சூழாமல்‌ தடுக்க முடியும்‌.

தனது கணவனின்‌ வாழ்க்கையில்‌ எப்போதும்‌ மாமியார்தான்‌ முதல்‌ பெண்‌ என்பதை புதுப்பெண் உணர வேண்டும். ஏனெனில்‌ மகனை வளர்த்து ஆளாக்குவதற்கு அவர்தான்‌ பல தியாகங்களை செய்திருப்பார்‌. எனவே புகுந்த வீட்டில்‌ தனக்கு முன்னுரிமை கொடுக்கப்பட வில்லை என்றோ கணவன், அவரது ‌அம்மாவின்‌ பேச்சையே கேட்‌கிறாரே என்றோ நினைத்து வருத்‌தம்‌ அடையக்கூடாது. மாமியாரிடம்‌ கணவனைப்‌ பற்றிபேசும்போது, ‘என்‌ கணவன்‌' என்ற வார்த்தையை பயன்படுத்தாதீர்கள். அது நீங்‌கள்‌ மட்டுமே சொந்தம் ‌கொண்டாட முயற்சிப்பதாகி விடும்‌. எனவே ‘உங்கள்‌ பையன்‌' என்று கூறுங்கள்‌. அதை கேட்டு மாமியார்‌ நிச்சயம் சந்தோஷப்படுவார்‌.

புதிதாக திருமணமான பெண்கள்‌ கணவனிடம்‌ சில வேண்டாத குணங்கள்‌ இருப்‌பதை கண்டுபிடித்து விடுவார்‌கள்‌. இதை கணவனிடம்‌ குற்றமாக எடுத்துச்‌ சொல்லாதீர்கள்‌. உடனே மாற்றிக்‌ கொள்வதற்கும் வலியுறுத்தாதீர்கள்‌. ஏனெனில்‌ குழந்‌தைப்‌ பருவத்தில்‌ கற்றுக்‌கொண்ட பல விஷயங்களை உடனடியாக மாற்றி விட முடியாது. ஒரு சில மாதங்கள் கழித்து மென்மையாக எடுத்து சொல்லுங்கள்‌. அப்படிச்‌ சொல்லும்போது, ‘உங்‌கம்மா எப்படித்தான்‌ உங்களை வளர்த்தார்களோ’ என்று கூறிவிடாதீர்கள்‌. அது தேவையற்ற பிரச்சினைகளுக்கு வித்திடும். தவறான குணங்கள், பழக்க வழக்கத்தை உடனே மாற்றிக்‌ கொள்ளும்படி பக்குவமாக கூறலாம்‌.

புதிதாக திருமணமான சமயத்தில்‌ கணவர்‌ எப்போதும்‌ தாயாரின்‌ சமையலையே புகழ்ந்து பேசுவார்.‌ இது இளம் ‌மனைவியை எரிச்சல் படுத்தும்‌. அதனை தவிர்த்து கோபமே அடையாமல் எந்த மாதிரியான உணவு வகைகளை தயாரித்து கொடுத்தார்‌ என்பதை கணவரிடம் கேட்டு தெரிந்து கொண்டு அதற்கேற்ப சமையல்‌ முறையை மாற்றிக்‌ கொள்ளுங்‌கள்‌.

வயதானவர்கள்‌ தெரிவிக்கும் ‌கருத்துக்களையும்‌, யோசனைகளையும்‌ இந்த காலத்திற்கு ஏற்றதல்ல என்று ஒதுக்கி விடாதீர்கள்‌. அவர்கள்‌ அனுபவத்தின்‌ மூலம்‌ பெற்ற பாடங்களாக அவை இருக்‌கலாம்‌. எனவே மூத்தவர்கள்‌ கூறும்‌ யோசனையை நிராகரித்து விடாதீர்‌கள்‌. திருமணத்திற்கு முன்பு தாய்‌ வீட்டில்‌ நீங்கள்‌ செய்த உடை அலங்காரம்‌, அழகு சாதன அலங்‌காரங்கள்‌ உங்கள்‌ விருப்பத்திற்கு ஏற்ப இருந்திருக்கும்‌. புகுந்தவீட்டிலும்‌ அப்படியே தொடர வேண் டும் என்று நினைக்காதீர்‌கள்‌. பழைய வழக்கத்தை கொஞ்சம்‌ விட்டுக்‌கொடுத்தும்‌ புகுந்த வீட்டில்‌ உள்ளவர்கள் பின்பற்றும் அலங்‌காரத்திற்கு ஏற்பவும்‌ ஆடை, அணிகலன்‌, அழகு சாதன அலங்‌காரங்களை கொஞ்ச காலத்திற்கு மாற்றிக்‌ கொள்ளுங்‌கள்‌.

குடும்பத்தை நிர்வகிக்கும்‌ பொறுப்பு உங்களிடம் ‌இருந்தால் செலவுகளை குறைத்து சிக்கனமாக வாழக்‌ கற்றுக்கொள்ளுங்‌கள்‌. மாமியார் நிர்வகிக்கும்‌ சூழ்‌நிலை இருந்தால்‌ சிக்கன நடவடிக்கையை இன்னும்‌ கொஞ்‌சம்‌ அதிகப்படுத்துவதில்‌ தவறில்லை. நீங்கள் சிக்கனவாதி என்று பெயரெடுத்துவிட்டால் போதும். மாமியாரிடம் நன் மதிப்பை விரைவாகவே பெற்றுவிடலாம்.

திருமணத்துக்கு தயாராகும் பெண்களும்‌, திருமணமாகி புகுந்த வீடு செல்பவர்களும்‌ பெற்றோரிடம் ‌ஆலோசனை பெறுவது நல்லது. புகுந்த வீட்டில்‌ எப்படி அனுசரித்து நடந்து கொள்ள வேண்‌டும்‌ என்பதை பெற்றோரும் ‌சொல்லித்‌ தர வேண்டும்‌.

புகுந்த வீட்டில்‌ பொறுப்புகள்‌ நிறைய இருக்கும்‌. அதை விடுத்து ‘இப்படி இருக்கலாம்‌. அப்படி இருக்கலாம்’ என்ற கற்பனை கோட்டையை கட்டி விடாதீர்‌கள்‌. ஒருவேளை எதிர்பார்ப்பு தவறிவிட்டால்‌ வாழ்க்கையில் ‌கசப்பு ஏற்பட்டு விடும்‌. எதிர்‌பார்த்ததை விட நன்றாக இருந்‌தால்‌ அதனால்‌ ஒன்றும்‌ பாதகம் ‌இல்லை. இளையவர்கள்‌ குடும்ப பொறுப்பேற்க முன் வரும்போது மூத்தவர்கள்‌ ஒதுங்கி கொள்வது நல்லது. குறிப்பாக மாமியார்-மருமகள் இடையே சுமூக உறவு நிலவ வேண்டும். ‘நமது சுதந்திரத்தை மருமகள்‌ பறித்து விட்‌டாளே’ என்று நினைக்காதீர்கள்‌.

நீங்கள்‌ பெற்ற மகனுடன்‌ அவள்‌ ஆயுட்காலம்‌ முழுவதும்‌ வாழும்‌ பெரும்‌ பொறுப்பு அவளுக்கு இருக்கிறது. உங்களுக்கு பின்னால்‌ மகனுக்கு உறுதுணையாக இருக்கப்போவது யார்‌? என்பதை உணருங்கள்‌.

திருமணத்திற்கு முன்பு வரை உங்கள்‌ மகன்‌ உங்களுக்கு மட்டும்‌தான்‌ சொந்தம்‌. அதன்‌ பிறகு அவன்‌ மனைவிக்கும்‌ உரிமையுடையவன் என்பதை உணர்ந்து மருமகளின் ‌கருத்துக்களுக்கு மதிப்பு கொடுங்‌கள்‌. அதேபோல் தாயிடமும்‌, தாரத்துடனும்‌ ஒரு சேர அன்பு காட்ட வேண்டிய பொறுப்பு ஆண்மகனுக்கு இருக்கிறது. எனவே ‘என்‌ பேச்சைத்தான்‌ அவன்‌ கேட்க வேண்டும்’‌ என்று மகனை வற்புறுத்தாதீர்‌கள்‌. மருமகள்‌ நல்ல யோசனை சொன்னால்‌ அதை ஏற்பதில் ‌தவறு கிடையாது.

காலங்கள்‌ மாறுகின்றன. விஞ்‌ஞானமும்‌ தொழில்நுட்பமும்‌ எவ்வளவோ முன்னேறி விட்‌டன. எனவே கடந்த காலத்தில்‌ சரியாகப்படும்‌ ஒரு கருத்து தற்காலத்துக்கு மாறி வரலாம்‌. இதுபோன்ற சூழ்நிலைகளில் மாமியார் புதிய அணுகுமுறைக்கு ஏற்ப மகன்‌ - மருமகளுடன்‌ வாழக்‌ கற்றுக் கொள்ளவேண்டும்‌. இன்று பெண்கள்‌ ஆண்களுக்கு இணையாக வேலைக்கு செல்ல ஆரம்பித்து விட்டார்கள்‌. கல்வியறிவு அவர்களுக்கு தன்னம்பிக்கையை பெற்றுக்கொடுத்திருக்கிறது. திருமணத்திற்கு பிறகும் வேலைக்கு செல்ல விரும்புவார்கள். சுதந்திரத்‌தன்மையையும்‌ விரும்புவார்கள்‌.

வேலைக்குச்‌ செல்லும்‌ மருமகள்‌ என்றால்‌ வீட்டில்‌ குழந்தைகளை பாதுகாக்கும்‌ பொறுப்பை மாமியார்‌-மாமனார்‌ இருவரும்‌ ஏற்க வேண்டியதிருக்கும்‌. இதுபோன்ற சமயத்தில்‌ மருமகள்‌ மீது கோபம்‌ காட்டாதீர்கள்‌. அதே சமயம்‌ குழந்தைகளை வளர்க்கும்‌ பொறுப்பு பெற்றோருக்கும்‌ உண்டு என்பதை மகனுக்‌கும்‌-மருமகளுக்கும்‌ உணர்த்துங்‌கள்‌. மாமியார்‌ மருமகள் ‌இடையே விட்டுக்‌கொடுக்கும்‌ உணர்வு தோன்றிவிட்டால்‌ அந்த உறவு போல்‌ வேறு எதுவும்‌ வாழ்க்கையில் இனிமையாக அமைந்து விடாது.

தனது கட்டளைப்படியே மருமகள் நடந்து கொள்ள வேண்டும்‌ என்று மாமியார் எதிர்பார்க்க கூடாது. மருமகளின் செயல்பாடுகளில் குறை ஏதேனும் தெரிந்தால் எப்படி நடந்து கொண்டால்‌ குடும்பம்‌ நன்றாக இருக்கும்‌ என்பதை பக்குவமாக எடுத்து சொல்லுங்கள். மாமியார் மருமகளுக்கு ஆலோசனை சொல்வதில் தவறில்லை. அதேவேளையில் தன்னை தவிர குடும்பத்தில் உள்ள மற்றவர்களின் தலையீடு இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டிய பொறுப்பு மாமியாருக்கு இருக்கிறது. ஏனெனில்‌ எந்தவொரு விஷயத்திலும்‌ அனாவசியமாக மற்றவர்கள் மூக்கை நுழைப்பதை மருமகளும்‌ விரும்ப மாட்டார்.
Tags:    

Similar News