பெண்கள் உலகம்
பெண்களின் திறமை

பெண்களின் திறமைக்கு பெருகிவரும் செல்வாக்கு

Published On 2021-12-17 03:43 GMT   |   Update On 2021-12-17 08:29 GMT
பெண்கள் தற்போது சிந்தனை, செயல், பேச்சு அனைத்திலும் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி சாதிக்கிறார்கள். அதனால் அவர்களது புகழ் மேம்பட்டுக்கொண்டிருக்கிறது.
பெண்களின் தனித்திறமைக்கு சமூகத்தில் செல்வாக்கு அதிகரித்து வருகிறது. விளம் பரம், மாடலிங், பேஷன், வரவேற்பு உபசாரம் போன்ற துறைகளில் அவர்கள் கோலோச்சுகிறார்கள். பேச்சுத் திறமையால் மற்றவர்களை வசீகரிப்பதிலும் பெண்கள்தான் முன்னணியில் இருக்கிறார்கள். அதனால்தான் பொருட்களை விற்பனை செய்யும் துறைகளில் பெண்களை அதிக அளவில் தேர்வு செய்கிறார்கள். புதிய தயாரிப்புகளை மக்கள் மத்தியில் அறிமுகப்படுத்தி விற்பனை செய்யும்திறன் பெண்களிடம் அதிகமாக இருக்கிறது.

ஒரு பொருளை விற்பனைசெய்யும்போது, விற்பனை செய்பவருக்கு அதை பற்றிய முழு விவரமும் தெரிந்திருக்க வேண்டியது அவசியம். வாங்குபவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு தெளிவான பதிலை விளக்கமாக கூற வேண்டும். அப்போதுதான் அந்த பொருள் மீது முழுநம்பிக்கை ஏற்படும். வாங்குப வரின் மனநிலையையும் கணிக்கவேண்டியது அவசியம். ஒரு புதிய பொருளை வாங்க தயங்குபவரிடம் நம்பிக்கை தரும் வார்த்தைகளை பேச வேண்டும். அந்த நம்பிக்கையை விதைப்பதில் பெண்கள் முதலிடத்தில் இருக்கிறார்கள். பெண்களிடம் மற்றவர்கள் சொல்வதை பொறுமையாக கேட்கும் பண்பும், மென்மையாக எடுத்துச்சொல்லும் பக்குவமும் அதிகமாக இருக்கிறது. நட்போடு பழகும்தன்மையும் பெண்களிடம் உள்ளது.

பேச்சுத்திறமை பெண்களின் கூடவே பிறந்த குணாதிசயமாக உள்ளது. இயல்பாகவே ஆண் குழந்தைகளைவிட, பெண் குழந்தைகள் சீக்கிரமாகவே பேசிவிடுவார்கள். மற்றவர்கள் சொல்வதையும் எளிதாக கிரகித்துக்கொள்வார்கள். ஒருமுறை சொல்லிக்கொடுத்தாலே போதும், அதை அப்படியே மறுமுறை செய்துகாட்டி அசத்திவிடுவார்கள். இத்தகைய குணாதிசயங்கள் அவர்கள் வளர வளர கூடுதல் தகுதிகளாக அவர்களிடம் இணைந்துவிடுகிறது. அதனை மேம்படுத்தும் பெண்கள் ஈடுபட்ட துறையில் பிரபலமாகிவிடுகிறார்கள். ஆண்களைவிட அவர்கள் வளர்ச்சி வேகமானதாக இருக்கும்.

செருப்பு தயாரிக்கும் நிறுவனம் ஒன்று, செருப்பு அணிந்தே பழக்கமில்லாத ஆப்பிரிக்க நாடு ஒன்றுக்கு தனது விற்பனை பிரதிநிதிகளை அனுப்பியது. அதில் ஆண் ஒருவரும், பெண் ஒருவரும் இடம்பெற்றனர். ஆண் திரும்பி வந்து ‘இங்கிருக்கும் யாரும் செருப்பு அணிந்து கொள்ளவில்லை. அது அவர்களுக்கு பழக்கமில்லையாம். அதனால் நம் தயாரிப்பு அங்கு விற்பனையாகாது. நாம் எந்த முயற்சி எடுத்தாலும் அது வெற்றியடையாது’ என்றார்.

ஆனால் பெண் விற்பனை பிரதிநிதி அதற்கு நேர்மாறாக சிந்தித்திருக்கிறார், ‘‘நம் தயாரிப்புகளை விற்பனை செய்ய சிறந்த இடம் இதுதான். இங்கு நமக்கு போட்டியாளர்கள் யாரும் இல்லை. இங்குள்ள மக்களுக்கு செருப்பு மிக முக்கியம். யாராவது ஒருவர் வாங்கிவிட்டால்போதும் எல்லோரும் வாங்கிவிடுவார்கள். நம் தயாரிப்பு அமோகமாக இங்கு விற்பனையாகும். முதலில் செருப்புகளை பயன்படுத்த கற்றுக்கொடுத்து இதன் நன்மைகளை எடுத்துச்சொல்லி சில காலணிகளை இலவசமாக கொடுப்போம்” என்றார். இதுவே புதிய சிந்தனை. விற்பனையாளர்கள் பயிற்சி முகாமில் சொன்ன கதை இது.

பெண்கள் தற்போது சிந்தனை, செயல், பேச்சு அனைத்திலும் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி சாதிக்கிறார்கள். அதனால் அவர்களது புகழ் மேம்பட்டுக்கொண்டிருக்கிறது.
Tags:    

Similar News