லைஃப்ஸ்டைல்
கணவன் மனைவி புரிதல்

மனித இனத்தின் மகத்துவம் தாம்பத்தியம்...

Published On 2020-04-06 07:34 GMT   |   Update On 2020-04-06 07:34 GMT
பிறவிகளில் மனித பிறவி மகத்துவம் மிக்கது. குடும்பம் என்னும் சோலையில் ஒரு ஆணும் பெண்ணும் கருத்து ஒருமித்து இல்லறத்தை நல்லறமாக நடத்துவது வீட்டுக்கும் நாட்டுக்கும் நன்மை பயக்கும்.
பிறவிகளில் மனித பிறவி மகத்துவம் மிக்கது. குடும்பம் என்னும் சோலையில் ஒரு ஆணும் பெண்ணும் கருத்து ஒருமித்து இல்லறத்தை நல்லறமாக நடத்துவது வீட்டுக்கும் நாட்டுக்கும் நன்மை பயக்கும். சமுதாயம் வாழ்க்கையின் அடிப்படையை ஒரு குறிப்பிட்ட தினத்தில் அங்கீகரித்து கொண்டாடுவது வளரும் சமூகத்திற்கு ஒரு முக்கியமான வாழ்வியல் கல்வி என்றே கூறவேண்டும்.

ஐம் புலன்களைக் கொண்டு இயங்கி கொண்டிருக்கிறது. மனித இனம். இயற்கையை சிருஷ்டியை உணர ஆணும் பெண்ணும் தம்பதிகளாக இணையவேண்டும். சமூக கோட்பாடுகள் வகுக்கும் சீரான வாழ்கை முறைக்கு அந்த ஆண் பெண் தம்பதியாக வாழ்வது மிகவும் அவசியம். கலாசார சீரொழுக்கம் இங்கிருந்துதான் பிறக்கிறது தழைக்கிறது. ஆறறிவு கொண்ட மனிதனுக்கே உரித்தான கோபம் தாபம் விருப்பு வெறுப்பு போன்ற உணர்வுகளை உள் வாங்கி கொள்ளும் ஆழ் தன்மை கொண்டதே தாம்பத்தியம். சம்சார சாகரத்தில் சீற்றம் காணும் காலங்களில் நங்கூரமாக வாழ்கையை ஒருநிலைப்படுதுவதே தாம்பத்தியம்.

பல தரப்பட்ட கல்வியை கற்றும் வாழ்வியலை கற்காதவனுக்கு அவன் சம்பாதித்த வேறெந்த செல்வமும் சொத்தும் முழுமையை அளிக்காது.

வருங்கால சமுதாயத்தை தூக்கி நிறுத்தும் தோள்களே குழந்தைகள். அவர்களின் செழிப்பான செம்மையான வளர்ச்சியையும் வாழ்வையும் ஆதரிப்பது தாயும் தந்தையுமான தம்பதிகளே.

ஈர்ப்பு என்பது ஆண் பெண் என்ற இனங்கள் தோன்றிய காலத்தில் இருந்து இயற்கை அளித்த விதி வரம் என்றுதான் கூறவேண்டும். நுண்ணுயிர்களில் இருந்து மனித இனம் வரை இவ்வுலகின் செயல்பாடுகளை இயக்கி வைப்பது அது ஒன்றே. உயிர் ஒன்றாக ஜனிக்கிறது ஒரு சாராரை தேர்வு செய்கிறது. பின்பு வளர்ந்து செம்மையடைந்து மறு சாராரை தேடியும் ஈர்த்தும் முழுமை அடைகிறது. ஒன்றோடு மற்றொன்று இணையும் இந்த இயற்கையின் விதி சிருஷ்டியின் மிகச்சிறந்த விளையாட்டாக திகழ்கிறது.

இவ்விளையாட்டின் விளைவாக சமூகம் உருண்டு திரண்டு செழித்து இன்று வாழ்வியல் இறை வழிபாடு சட்டங்கள் மற்றும் அரசியல் என்று பல களங்களை நிலை நிறுத்தி மனித இனத்தை செம்மைப்படுத்தி கொண்டிருக்கிறது. ஆண் பெண் என்ற இவ்விரண்டு இனங்களும் சமுதாயத்தின் ஆணி வேராக திகழ்ந்து கொண்டிருக்கின்றன. திருமணம் என்ற அழகிய சமூக விதி இவ்வினங்களை ஒன்று சேர்த்து நமக்கு அழியா நம்பிக்கையை அளிக்கிறது.

காலச்சக்கரம் உருண்டோட கலாசாரங்கள் வளர்ச்சி அடைய இப்பந்தம் மெருகேறிகொண்டேதான் இருக்கிறது. உலகத்தில் எந்த நாட்டை எடுத்து கொண்டாலும் திருமண பந்தத்தை சிரம் மேல் கொண்டாடுவதை நாம் காணலாம். சமூக முன்னேற்றங்களும் புதுமையான பார்வை கோணங்களும் இப்பந்தத்தை மேலும் மேலும் பலப்படுத்தியிருக்கிறதே தவிர ஆழ்ந்தோடியிருக்கும் அதன் வேரை அசைக்க கூட முடியவில்லை.

காதலன் காதலி மங்கை மணாளன் தாய் தந்தை தாத்தா பாட்டி என்ற அழகிய உறவு பரிமாணங்களை ஏற்று புதிதாக உயிரினத்தை ஜனித்து அதன் விளைவாக உறவுகள் பெருகி உணர்வுகளை அனுபவித்து தீர்த்து இப்பூவுலகில் பஞ்ச பூதங்களோடு மீண்டும் சங்கமிக்கும் மனித இனத்தின் ஆதாரங்களான தம்பதியர்கள் போற்றப்படவேண்டியவர்கள்தான்.

அன்றைய காலத்தில் கூட்டு குடும்பமாக வாழ்ந்தபோது ஏராளமான நன்மைகள் இருந்தன. பிரச்சினைகளை கலந்து பேசி சுமுக தீர்வு கண்டனர். இன்று தனித்து வாழும் தம்பதியர்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு காணமுடியாமல் தவிக்கின்றனர். வாழையடி வாழையாக தாம்பத்தியத்தை கொண்டாடும் கூட்டு குடும்பங்கள் இன்று சிதறி கூட்டு குடும்பங்களே இல்லாமல் போனதுதான் நிதர்சன உண்மையாக இருக்கிறது. தற்போதைய கால கட்டத்தில் தம்பதிகள் தங்கள் வாழ்க்கைப் பாதையில் சந்திக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண நீதிமன்றத்தை நாடி சென்று கொண்டிருக்கின்றனர். விவாகரத்தை நோக்கி பார்வை இப்போது அதிகபட்சமாக திரும்பி கொண்டிருக்கிறது. குடும்பநல நீதி மன்றங்கள் நிரம்பி வழிந்துகொண்டிருக்கின்றன.

கட்டுக்கடங்காத குற்றச்சாட்டுகள் போலியான சுதந்திர மனபான்மை பணம் மற்றும் சொத்துகளின் மீது பேராசை இல்வாழ்வை பற்றி சரியான புரிதல் இல்லாமை மூத்தோரின் அறிவுரை நிராகரித்தல் போன்ற காரணங்களால் திருமண பந்தங்கள் பெருத்த சேதம் அடைந்து கொண்டிருக்கின்றன. நிறைவான வாழ்கையை தேடும் ஆண் பெண் இருபாலரும் உணர்வு சார் நுண்ணறிவு கொண்டு தங்களுக்கு இடையே உள்ள உறவை பலப்படுத்தவேண்டும். சந்தோஷமான வாழ்க்கைக்கு இதுவே அடிக்கல். ஒருவர் மீது ஒருவர் செலுத்தும் பற்றும் பாசமுமே தத்தம் குறைகளை நிறைகளாக மாற்றும் சக்தி கொண்டவை. தம்பதியர் தன் மீதும் தன் துணையின் மீதும் வைக்கும் பரஸ்பர நம்பிக்கையே இணையான ஒரு இல்வாழ்க்கைக்கு ஆதாரம்.

உலக நாடுகள் முழுவதிலும் இந்த தினம் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. சீனா ஜப்பான் போன்ற நாடுகளில் தம்பதியினர் தங்களின் திருமண பந்தத்தை புதுமையான மற்றும் வினோதமான முறையில் கொண்டாடி மகிழ்கின்றனர். கடலின் அடியிலும் ஆகாயத்திலும் மோதிரங்களை மாற்றிக்கொண்டும் பல பரிசுகளை பரிமாறிகொள்வதும் என்று அவரவர் கற்பனை திறனுக்கேற்ப தாம்பத்தியத்தில் தங்களுடைய நம்பிக்கையை நிலைநிறுத்திக்கொண்டிருக்கிறார்கள். வருங்கால சமுதாயம் கரடு முரடான பாதை தென்பட்டாலும் வலிமையான சக்கரங்கள் கொண்ட தாம்பத்தியம் என்ற ஊர்தியை கொண்டு வளமாக மேலும் மேலும் முன்னேறும். மனிதவள மேம்பாடு தளர்ச்சியில்லா சமூக வளர்ச்சியில் கூடும். உற்சாகத்துடனும் நம்பிக்கையுடனும் மனித இனம் முன்னேறும்.

தாட்சாயினி வெங்கடேஷ் வக்கீல் சென்னை உயர்நீதிமன்றம்.
Tags:    

Similar News