லைஃப்ஸ்டைல்
திருமணத்திற்கு முந்தைய நெருக்கத்தால் ஏற்படும் பிரச்சனைகள்

திருமணத்திற்கு முந்தைய நெருக்கத்தால் ஏற்படும் பிரச்சனைகள்

Published On 2020-03-30 07:40 GMT   |   Update On 2020-03-30 07:40 GMT
திருமணத்திற்கு முன்பு இருசக்கர வாகனத்தில் ஜோடியாக செல்லும்போது விளையாட்டுத்தனமாக செய்யும் குறும்புத்தனம்கூட, ஒட்டுமொத்தமாக ஒரு குடும்பத்தின் எதிர்காலத்தையே சிதைத்துவிடும் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு எடுத்துக்காட்டு.
திருமணத்திற்கு முன்பு இருசக்கர வாகனத்தில் ஜோடியாக செல்லும்போது விளையாட்டுத்தனமாக செய்யும் குறும்புத்தனம்கூட, ஒட்டுமொத்தமாக ஒரு குடும்பத்தின் எதிர்காலத்தையே சிதைத்துவிடும் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு எடுத்துக்காட்டு.

அவள் நடுத்தர வருவாய் குடும்பத்தை சேர்ந்தவள். அழகான தோற்றமும், துடுக்குத்தனமான பேச்சும்கொண்டவள். மூன்று மொழிகளிலும் தேர்ச்சி பெற்றிருந்தாள். அவளது தூரத்து உறவினர் ஒருவர் ‘ஈவென்ட் மேனேஜ்மென்ட்’ நிறுவனம் ஒன்றை நடத்திவந்தார். அவள் கல்லூரி படிப்பை முடித்ததும் அவர், அவளது திறமையை பார்த்து தனது நிறுவனத்தில் வேலைக்கு சேர்த்துக் கொண்டார். அவளுக்கு மூத்த சகோதரிகள் இருவர் உண்டு. இருவரும் கல்வித்துறையில் பணியாற்றிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கும் திருமணமாகவில்லை.

இவளது சுறுசுறுப்பும், திறமையும் அந்த ஈவென்ட் மேனேஜ்மென்ட் நிறு வனத்தின் வளர்ச்சிக்கு நன்றாக கைகொடுத்தது. வாடிக்கை யாளர்களும் அவளை பாராட்டினார்கள்.

வாடிக்கையாளர்களில் ஒருவர் ஓட்டல் உரிமையாளரின் மகன். அந்த இளைஞன் தொழில்ரீதியாக அடிக்கடி அவளை சந்தித்தான். அதனால் அவர்களிடையே நட்பு பலப்பட்டது. திறமைசாலியான அவளை காதலித்து திருமணம் செய்துகொள்ள அவன் விரும்பினான். அவள் மூலம் தனது ஓட்டல் தொழிலை வளர்ச்சிப்பாதைக்கு கொண்டு செல்வதும், தனது குடும்ப வாழ்க்கையை சிறப்பாக அமைத்துக்கொள்வதும் அவனது திட்டமாக இருந்தது.

ஆனால் அவளோ அவனது காதலை ஏற்றுக்கொள்ளவில்லை. ‘எனது மூத்த சகோதரிகள் இருவருக்கும் திருமணம் நடக்க வேண்டும். அதுவரை நான் உண்டு என் வேலை உண்டு என்று அமைதியாக இருந்தாகவேண்டும்’ என்று கூறினாள். அவனும் அதை ஏற்றுக்கொண்டு, ‘நாம் காதலர்களாக இல்லாவிட்டாலும் நல்ல நண்பர்களாக இருப்போம்’ என்றான். அதற்கு அவளும் சம்மதிக்க, அவர்களது நட்பு அலுவலகத்திற்கு வெளியேயும் தொடர்ந்துகொண்டிருந்தது.

அவனுடன் நட்புரீதியாக மாதத்தில் ஒன்றிரண்டு நாட்கள் அவள் ‘காபி ஷாப்’ செல்வாள். அலுவலகம் முடிந்து அவள் வெளியே வரும்போது அவன் காரில் காத்திருப்பான். இருவரும் காபி ஷாப் சென்று, அங்கிருந்து பேசிவிட்டு அவரவர் வீட்டிற்கு திரும்பிவிடுவார்கள்.

அவள் காரில் மட்டுமே அவனுடன் செல்வாள். அவனுக்கு அவனது தந்தை மீது அதிக பயம் உண்டு. அவளோடு தான் வெளியே செல்வது தந்தைக்கு தெரிந்துவிடக்கூடாது என்பதில் மிக கவனமாக இருந்தான்.

அன்று சற்று தூரத்தில் உள்ள கடற்கரை பகுதிக்கு சென்று பேசிக்கொண்டிருக்கலாம் என்று இருவரும் முடிவு செய்தார்கள். குறிப்பிட்ட நேரத்தில் காருடன் வந்துவிடுகிறேன் என்றவன், திடீரென்று விலை உயர்ந்த பைக்கில் வந்து, அவளை ஏறும்படி சொன்னான். பைக்கை பார்த்ததும் அவள் மிரண்டு அதில் ஏற தயங்கினாள். ‘எனது தந்தை காரை கொண்டுசென்றுவிட்டார். உன்னை ஏமாற்றிவிடக்கூடாது என்பதற்காகத்தான் பைக்கில் வந்தேன். யாரும் பார்ப்பதற்குள் நாம் வேகமாக பீச்சுக்கு சென்றுவிடலாம்’ என்றான்.

அவளும் வேறுவழியில்லாமல் ஏறிவிட்டாள். முதலில் அவளுக்கு சற்று பதற்றம் ஏற்பட்டாலும், சிறிது தூரம் சென்றதும் உற்சாகமானாள். பைக் ஓட்டிய அவனை ஏதேதோ கூறி கலாய்த்துக்கொண்டிருந்தாள். அப்போது பைக்குக்கு பின்னால் ஒரு கார் வேகமாக வந்து கொண்டிருந்ததை பார்த்தாள். உடனே அவள் திடீரென்று அவனிடம், ‘உங்கள் தந்தை நம்மை பார்த்துவிட்டார். காரில் விரட்டியபடி வந்துகொண்டிருக்கிறார்’ என்று பதற்றமாகி கூறுவதுபோல் சொன்னாள்.

அவள், அவனை ஏமாற்றும் நோக்கத்தோடு விளையாட்டுத் தனமாகத்தான் அதை சொன்னாள். ஆனால் அதை அவன் உண்மை என்று நம்பி தடுமாற்ற மடைந்துவிட்டான். அந்த நேரம் பார்த்து எதிரே ஒரு லாரி வர, அவனது பைக் கட்டுப்பாட்டை இழந்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த விபத்து நடந்தது. பைக்கை ஓட்டிய இளைஞன் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டான். பின்னால் இருந்த அவள் நூலிழையில் காயத்தோடு தப்பினாள்.

இந்த விபத்து நடந்து ஒரு வருடம் ஆகிவிட்ட பின்பும், இப்போதும் அவள், ‘நானும் அவரோடு சேர்ந்து செத்துப்போயிருக்கலாம்’ என்று அழுது புலம்பிக்கொண்டிருக்கிறாள். அந்த அளவுக்கு அவள், சுற்றியிருப்ப வர்களால் அவமானப் படுத்தப் படுகிறாள். ‘காதலனை கட்டிப்பிடித்துக் கொண்டு இருசக்கர வாகனத்தில் பயணம் செய்தால் அவன் கிளுகிளுப்படைந்து விபத்தில் சிக்கத்தான் செய்வான். அவனை இவள் நிதானமிழக்கவைத்து சாகடித் துவிட்டாள்’ என்று பேசுகிறார்கள். அவளது அலுவலகத்தில் உள்ளவர்களும் தப்பும் தவறுமாக பேசியதால் வேலையைவிட்டு விலகி விட்டாள். இவளை காரணங்காட்டி மூத்த சகோதரிகள் இருவரது திருமணமும் தள்ளிப்போகிறது. அதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட சில வரன்களின் குடும்பத்தினர், அதிக வரதட்சணை தந்தால் திருமணம் செய்து கொள்ளலாம் என்று மனசாட்சியின்றி பேரம் பேசிக் கொண்டிருக்கிறார்கள்!

விளையாட்டுத்தனமான ஒரு சம்பவம், எவ்வளவு பெரிய வேதனையை உருவாக்கிக் கொண்டிருக்கிறது பார்த்தீர்களா..!
Tags:    

Similar News