லைஃப்ஸ்டைல்
நம்மைப் பண்படுத்துவது யார்?

நம்மைப் பண்படுத்துவது யார்?

Published On 2020-03-27 04:01 GMT   |   Update On 2020-03-27 04:01 GMT
எழுதாத சிலேட்டாக இருக்கும் நம் மனதில் யார் யாரோ வந்து அவர்களுக்குத் தேவையானதை எழுதிச்செல்ல நாம் அனுமதிக்கலாகாது. நமக்கான எழுத்தை நாமே எழுதுவோம்.
பண்பாடு பற்றி அதிகமாகப் பேசிய சமூகம் நம் தமிழ்ச்சமூகம். அதனாலோ என்னவோ பண்பாடு குறித்த புரிதல் நம்மிடம் சற்றுக் குழம்பிய நிலையிலேயே இருக்கிறது. பண்பாடு என்றால் இதுதான் இப்படித்தான் என்று ஒரு சட்டம் போட்டு இறுக்கமான வரையறை தந்து விடவும் முடியாது. எதையும் பண்படுத்துவது பண்பாடு. நிலத்தைப் பண்படுத் துவதை விவசாயம் என்கிறோம்.

தமிழ்ப்பண்பாடு, இந்தியப் பண்பாடு,  மேற்கத்தியப் பண்பாடு, வாசிப்புப் பண்பாடு, உணவுப்பண்பாடு, எனப்பல பண்பாடுகள் பற்றியும் நாம் பேசுகிறோம். சரி, அது இருக்கட்டும். எதையும் பண்படுத்துவது நல்லதா கெட்டதா என்று கேட்டால் இயல்பாக நாம் நல்லது என்றுதான் விடை அளிப்போம்.நிலத்தைப் பண் படுத்துவது நல்லதா கெட்டதா என்று கேட்டால் நல்லது என்று உடனே விடையளிப்போம். ஆனால் உங்க ளுக்குச் சொந்தமான நிலத்தை யாரென்று தெரியாத யாரோ சிலர் பண்படுத்தினால்  நல்லதா? என்று கேட்டால் அதெப்படி? என்று எதிர்க் கேள்வி கேட்போம்.

யார் நிலத்தை யார் பண்படுத்தி னால் நல்லது? அவர்கள் எதற்காகப் பண்படுத்துகிறார்கள்? அதில் என்ன விளையப்போகிறது? அது அறு வடை ஆகி யார் வீட்டுக்குப் போகப் போகிறது? என்கிற கேள்விகளுக்கெல்லாம் விடை தெரிந்தால்தான் நிலத்தைப் பண் படுத்துவது- - நல்லதா கெட்டதா என்று கூற முடியும். அதே போலத்தான் கல்ச்சர் எனப்படும் பண் பாடும். மனித மனங்களைப் பண்படுத்துவதே பண்பாடு. மனித மனங்களைப் பண்படுத்துவது நல்லதா கெட்டதா? உடனே நல்லது என்று சொல்ல வாய் வரை வார்த்தை வருகிறது.ஆனால் மீண்டும் அதே கேள்விகளை எழுப்பிப்பார்க்க வேண்டுமல்லவா? யார் மனதை யார் பண்படுத்துகிறார்கள்? எதற்காகப் பண்படுத்துகிறார்கள்? மனங்களில் என்ன விதைக்கப்போகிறார்கள்? அது யாருக்கு நன்மை தரும் ? போன்ற கேள்விகளை எழுப்பி அதற்கு விடை தெரிந்தல்தான் மனதைப் பண் படுத்துவது நல்லதா கெட்டதா என்று கூற முடியும்.

உதாரணமாக நாம் தொலைக் காட்சிகளில் அன்றாடம் பார்க்கும் விளம்பரங்களைப் பார்ப்போம்.  விளம்பரங்கள் எதற்காகச் செய்யப்படுகின்றன? அவற்றைப்  பார்க்கும் மனித மனங்களைப் பண்படுத்துவதற்காகவே செய்யப் படுகின்றன. ஒரு விளம்பரம் பல் தேய்க்கும் பிரஷ் பற்றியது. அந்த விளம்பரத்தில் நம்மைப்போல ஒருவர் இயல்பாக ஒரு பிரஷ்ஷை எடுத்து அதில் பற்பசையை வைத் துத் தேய்க்கத் துவங்குகிறார்.

அப்போது பின்னணியில் அழுத்த மான குரலில் ஒரு கேள்வி எழுப்பப்படுகிறது. உங்கள் பற்கள் தட்டையாக இருக்கின்றனவா? இல்லை என்பதாக நாமும் தலை ஆட்டுவோம். நம் பற்கள் வளைந்து தானே இருக்கின்றன என்று நம் மைண்ட் வாய்ஸ் நம்மோடு பேசும். பின்குரல் “அப்படியானால் உங்கள் பிரஷ் மட்டும் ஏன் தட்டையாக இருக்கிறது?” என்கிற கேள்வியைத் தூக்கி நம் முன்னால் போடும். நாம் ஒரு கணம் திகைத்துப் போவோம். அடுத்த நிமிடத்தில் திரையில் “எங்கள் பிரஷ் 32 டிகிரி வளைந்திருக்கிறது. பற்களின் மூலை முடுக்கெல்லாம் சென்று சுத்தம் செய்யும்” என்று காட்சிகள் விரியும். நாம் அப்படியே சரணடைந்து விடுகிறோம்.

தினசரி இந்த விளம்பரத்தைப் பார்க்கும் நம் மனம் என்னவாகும்? வழக்கமாகக் கடைக்குச் சென்று “அண்ணாச்சி ஒரு பிரஷ் குடுங்க” என்று கேட்ட நாம் இப்போது “அண்ணாச்சி அந்த வளைஞ்ச பிரஷ் இருந்தா குடுங்க” என்று கேட்கிறோம். அதாவது நேராக இருந்த நம் மனதை அந்த விளம்பரம் வளைத்து விட்டது. அதாவது நம் மனதைப்பண்படுத்தி விட்டது. எதை நோக்கி நம் மனம் வளைக்கப்பட்டது? அந்தக் கம்பெனிக்காரனின் சரக் கான வளைந்த பிரஷ்ஷை நோக்கி.

ஆகவே நம்மை யார் பண்படுத்து கிறார்கள் என்கிற கேள்வி முக்கியமானது. இதை நாம் “நுகர்வுப்பண்பாடு-” என்று சொல் கிறோம். எது நல்ல வாழ்க்கை? என்கிற கேள்வியை எழுப்பி, நுகர்வுப்பண்பாடு, இன்னின்ன பொருட்களெல்லாம் நிறைந்த வீட்டில் வாழ்வதுதான் “நல்ல வாழ்க்கை” என மக்களை நம்ப வைத்துள்ளது. ஒன்றிரண்டு பொருட்கள் குறைந்தால் அவற்றை வாங்கி நிரப்புவதே மன நிறைவு என உளவியல் ரீதியாகத் தயார்ப்படுத்திவிட்டது. அதாவது பண் படுத்தி விட்டது.
மனித மனங்களைப் பண் படுத்து வது உலகமயப் பொருளா தாரம் வந்த பிறகு விளம்பரயுகம் துவங்கிய பிறகு வந்த ஒன்றல்ல.அது ஆதி காலம் தொட்டே இருந்து வருகிறது.

“பண்பெனப்படுவது பாடறிந்து ஒழுகல்” எனக் கலித்தொகை (பாடல்  133) கூறுகிறது.
“பண்புடையார்ப் பட்டுண்டு உல கம் அதுஇன்றேல்
மண்புக்கு மாய்வது மன்” (திருக்குறள் 996) என்று வள்ளுவப் பெருந்தகை கூறுகிறார்.
பண்பு,பண்புடைமை என்பதி லிருந்து பிறந்ததுதான் பண்பாடு.
உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும் கல்லார் அறிவிலா தார்
(குறள் எண்:140)

பொழிப்பு (மு வரதராசன்): உலகத் தாரோடு பொருந்த ஒழுகும் முறை யைக் கற்காதவர், பல நூல்களைக் கற்றிருந்த போதிலும் அறிவில்லா தவரே ஆவர்.அதாவது என்ன படிச்சிருந்தா லும் ஊரோடு ஒத்துப் போகத் தெரியலேன்னா அவன் முட்டாள் தான் என்கிறார். ஊரோடு ஒத்துப் போகும்படி நம் மனங்களைத் தகவ மைப்பதுதான் பண்பாட்டின் பணி. இப்போது இன்னொரு கேள்வி எழு கிறது. ஊர் நல்ல ஊரா இருந்தா ஊரோடு ஒத்துப்போகலாம். மோச மான ஊராக இருந்தால் அதனு டன் எப்படி ஒத்துப்போக முடியும்? இந்தக்கேள்விக்கு நாம் அப்புறமாக வருவோம்.

நம் மனங்களைப் பண்படுத்துவது யார் என்கிற கேள்வியை இப்போது எடுத்துக்கொள்வோம். நம் சமூகத் தில் இயங்கும் பல பண்பாட்டு நிறு வனங்கள் தாம் நம் மனங்களைப் பண்படுத்துகின்றன. அவை எவை?

1.குடும்பம் 2.கல்விச்சாலைகள் 3.சாதி 4.மதம் 5.கலை, இலக்கியம் 6.மீடியா எனப்படும் ஊடகம்

இப்படிப் பல பண்பாட்டு நிறுவனங்கள் தாம் நம் மனங்களை பண்படுத்துகின்றன. இவை ஒவ்வொன்றையும் பற்றி நாம் விரிவாக அறிந்துகொள்ள வேண்டும். இடம் கருதி இங்கு சுருக்கமான அறிமுகமாகப் பார்க்கலாம்.

குடும்பம் என்பது மிக முக்கியமான சமூக வயமாக்கும் பண்பாட்டுத் தொழிற்சாலை ஆகும். நாம் யார்? நாம் என்ன சாதி? என்ன மதம்? எது நல்லது? எது கெட்டது? என்பன போன்ற பல முக்கியமான புரிதல் களையும் உணர்தல் களையும் நமக்குக் கற்றுக் கொடுக்கும் இடம் குடும்பம்தான். ஆணுக்கு என்ன வேலை? பெண்ணுக்கு என்ன வேலை என்பதை யும் தீர்மானிக்கும் இட மாகவும் அது திகழ்கிறது. நமக்கு ஆடை அணிவிக்கப் பழக்கும் குடும்பம் தான் ஆணும் பெண்ணும் சமமில்லை என்கிற கருத்தையும் நம் தலையில் ஏற்றி விடுகிறது. ஆணுக்கான வேலை பெண்ணுக்கான வேலை என்கிற பிரிவினையைக் குடும்பம்தான் கற்றுத்தருகிறது. ஆனால் குடும்பம் தானாக யோசித்து எதையும் கற்றுத் தருவதில்லை.

எந்த நாட்டில் எந்த சமூகத் தில் எந்தக் காலத்தில் ஒரு குடும்பம் இயங்குகிறதோ அந்தக்காலமும் இடமும்தான் குடும்பத்தின் சிந்தனையையும் தீர் மானிக்கிறது.“ஈன்று புறந்தருதல் என் தலைக்கடனே..சான்றோனாக்குதல் தந்தைக்குக் கடனே” என்று சங்க காலத்தில் சொல்லப்பட்ட கட மையில் இன்றளவும் மாற்றமில்லாமல் இருப்பது சரியா? எண்ணற்ற குடும் பங்களில் பிள்ளை களின் கல்வி பற்றி அக்கறைப் படுவது மட்டுமின்றி அன்றாடம் பிள்ளைகளோடு கூட உட்கார்ந்து வீட்டுப் பாடம் சொல்லிக் கொடுப்பது வரை சான்றோனாக்கும் கடமையைத்  தாய் மார்கள் தாம் செய்கிறார்கள். ஆனாலும் தந்தையோடு கற்போம் என்கிற பழைய கருத்தைத்தான் நாம்  சுமந்து கொண்டலைகிறோம்.

ஆணாதிக்க சமூகத்தில் குடும்பங்களும் ஆணாதிக்கச் சிந்தனைகளையே குழந்தைகள் மனதில் விதைக்கும். பெண் குழந்தைகளை அடுப்படிக்கு அழைக்கும் குடும்பம் ஆண் குழந்தை களுக்குச் சமைக்கக் கற்றுத் தருவதில்லை. வாசல் பெருக்கிக் கோலம் போட ஆண் குழந்தைகளைப் பழக்குவதில்லை. இப்படித்தான் குடும்பம் என்னும் பண்பாட்டு நிறுவனம் நம்மைப் பண்படுத்துகிறது.

கல்விச்சாலைகள் நம்மை ஒரு ஆசிரியர் சொல்வதைக் கைகட்டி வாய் பொத்தி  அமைதியாக கேட்கும் பண்பாட்டில் வளர்க் கின்றன. கல்வி என்பது ஆசிரியர் மற்றும் கல்வித்திட்டம் கொடுப் பதை மாணவர்கள் கைநீட்டி வாங்கிக்கொள்வதாகவே நாம் புரிந்து கொண்டிருக்கிறோம். “எனக்குக் கல்விப்பிச்சை இட்ட ஆசிரியர்/பள்ளிக்கூடம்” என்கிற சொல்லாடல் இதனால் தான் வந்தது. கல்வி ஒருபோதும் ஒருவர் கொடுக்க இன்னொருவர் வாங் கும் பிச்சை அல்ல. கற்பவரும் கற்பிப்பவரும் சேர்ந்து இந்த சமூகத் தையும் உலகத்தையும் பிரபஞ்சத்தையும் புரிந்து கொள்ளும் ஓர் நிகழ்வுப் போக்கே கல்வி. ஆனால் நம் கல்விச்சாலைகள் புத்தகத்தில் உள்ளதை அப்படியே மனப்பாடம் செய்து தேர்வுத்தாளில் வாந்தி எடுக்கும் மாணவர்களையே உரு வாக்குகின்றன. எதிர்க்கேள்வி கேட்காமல் சொன்னதைக் கேட் டுச்சொல்லும் மனிதர்களை உரு வாக்கும் தொழிற்சாலைகளாகக் கல்விச்சாலைகள் இயங்குகின்றன.

சொன்னபேச்சுக் கேட்கும் மனிதர்கள்தாம் ஆள்பவர்களுக்கும் ‘படியளப்பவர்’களுக்கும் பிடிக்கும் என்பது ஊரறிந்த உண்மை.அவர்களுக்குத் தேவையான மனித மனங் களைப் பண்படுத்தும் இடமே பள்ளி.

சாதி என்பது உலகத்தில் வேறு எந்த நாட்டிலும் இல்லாத இந்தியா வில் மட்டுமே இருக் கின்ற ஓர் ஏற்பாடு. பிறப்பின்  அடிப்படையிலேயே  ஒருவ ருடைய  சமூக நிலையை  அவர வர் ஏற்றுக்கொள்ளச்செய்யும் பண் படுத்தலை சாதியம் செய்கிறது. மலம் அள்ளும் தொழில் யாருக்காவது பிடிக்குமா? சாதியின் பெயரால் அத்தொழில் ஒரு குறிப்பிட்ட பகுதி மக்களின் தலையில் கட்டப்பட்டு விட்டதல்லவா? எந்த அறி வும் திறமையும் இல்லாதவனும் கூட தான் பிறந்த சாதியின் காரணமாக உயர்ந்தவனாகக் கருதிக்கொள்ளும் பண்பாட்டை சாதியம் செயல்படுத்துகிறது.சாதி அடிப்படையில் தொழில் என்பதில் சில உடைப்புகள் ஏற்பட்டுள்ளன. சாதியை மறுத்ததால்தான் அது நிகழ்ந்தது. ஆனாலும் கீழ் மட் டத்திலும் உயர்மட்டத்திலும் தொழில் மாற்றம் இன்னும் ஏற்பட்டு விடவில்லை.மலம், சாக்கடை அள்ளுவதும் புரோகிதம் செய்வதும் இன்றைக்கும் சாதி அடிப்படையில்தான் தொடர்கிறது.

அதே போல சாதி, மத, இன பேத மற்றுப் பிறக்கும் மனிதனை, மனுஷியை பெற்றவர்களின் மதத்தில் அவர் கள் சம்மதம் இல்லாம லேயே சேர்த்து விடுகிறோம். அம்மதத்தின் பழக்க வழக்கமும் பண்பாடும் அக்குழந்தைகளைப் பண்படுத்துவதில் மிகப்பெரிய பங்காற்றுகின்றன. நம்பிக்கையும் அறிவும் எதிரெதிர் நிலைகளில் போரிட்டவாறே சக பயணிகளாக மனிதகுல வரலாறு நெடுகிலும் வந்து கொண்டிருப்பவை. தனக்கு மதம் தேவையா இல்லையா? தேவை எனில் எந்த மதம் என் மதம் என்று தேர்வு செய்யும் உரிமை ஒவ்வொரு குழந்தைக்கும் தரப்பட வேண்டும். குறைந்தபட்ச வயது/வளர்ச்சிக்குப் பிறகு அவர்கள் தேர்வு செய்ய வேண் டிய ஒன்றாக அது மாற வேண்டும்.

கலை இலக்கியங்கள் என்கிறவையும் பண்பாட்டு நிறு வனங்கள்தாம். மனித மனங்களை “இருப்பதை ஏற்றுக் கொள்ள”வைப்பதில் அவை முக்கியப் பங்காற்றுகின்றன.  எழுதப்பட்ட இலக்கியங்கள் மட்டுமல்ல எழுதப்படாத இலக்கியங்களான விடுகதை, பழமொழி, சொல்லடை போன்றவையும் இப்பணியையே செய்கின்றன.
“ராஜா வீட்டு நாய் சிம்மாசனம் ஏறுதுன்னு வண்ணான் வீட்டு நாய் வெள்ளாவியிலே ஏறலாமா”

என்று ஒரு சொல்லடை உண்டு. உனக்கு என்ன விதிக்கப்பட்டி ருக்கிறதோ அதை ஏற்றுக்கொள். அதை மீற நினைக்காதே என்கிற பண்படுத்தல் இதில் இருக்கிறது.
மீடியா பற்றி ஏற்கனவே பேசி னோம். ஆகவே நம்மை யார் யாரோ பண்படுத்துகிறார்கள் என்பதுதான் உண்மை. இன்றிருக்கும் நம் மன தைப் பண்படுத்தியவர்கள் இந்தப் பண்பாட்டு நிறுவனங்களே. நல்லதை எல்லாம் ஏற்றுக்கொள்ளலாம். அல்லவற்றிலிருந்து  விடுபடுவது எப்படி? ஊர் சரியில்லை என்றால் ஊரோடு ஏன் ஒத்துப்போக வேண்டும்? கட்ட மைக்கப்பட்ட -பண்படுத்தப்பட்ட- நம் மனதிற்கு விடுதலை எப்படிக் கிடைக்கும்?

கேள்வி கேட்கும் கலாச்சாரத்தை வளர்த்துக் கொள்வது முதல்படி.. பகுத்தறிவின் பரப்பில் நிற்க முடியாத பண்படுத்துதல்களை துணிவுடன் நிராகரிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். வாசிப்புப் பண்பாட்டை வளர்த்துக்கொள்வதன் மூலம்தான்  கேள்வி கேட்கும் பண்பாட்டுக்குள் நாம் நுழைய முடியும். எழுதாத சிலேட்டாக இருக்கும் நம் மனதில் யார் யாரோ வந்து அவர்களுக்குத் தேவையானதை எழுதிச்செல்ல நாம் அனுமதிக்கலாகாது. நமக்கான எழுத்தை நாமே எழுதுவோம்.

தொடர்புக்கு: tamizh53@gmail.com

Tags:    

Similar News