லைஃப்ஸ்டைல்
பெண் எனும் பேரொளி

இல்லறமும் நல்லறமும்: பெண் எனும் பேரொளி

Published On 2020-03-24 08:22 GMT   |   Update On 2020-03-24 08:22 GMT
வீரப்பெண்மணிகளின் சரித்திரம் எடுத்துரைத்து, அச்சமின்றி, சவால்களை எதிர்கொண்டு, சாதனைப் படைக்கும் தலைசிறந்த ஒரு பெண் சமுதாயத்தை உருவாக்க உறுதி கொள்வோம்.
ஒரு சமூகத்தின் வளர்ச்சி என்பது  தனிமனிதர்கள் வளர்ச்சியின் அடிப்படையிலேயே அமைய முடியும்.  அத்தகைய தனிமனித வளர்ச்சியின் ஆணி வேராக இருப்பவர்கள் பெண்கள் மட்டுமே.ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப்பின் மட்டுமல்ல வாழ்வாதாரத்தின் அடிப்படையிலேயே பெண்தான் இருக்கிறாள்.

ஆதியில் பெண்ணே தலைமை வகிப்பவளாகவும், வேட்டையாடி உணவைக் கொண்டுவருபவளாகவும், சமுதாயத்தை வழிநடத்துபவளாகவும் இருந்தாள். நாகரிகம் வளர ஆரம்பித்தவுடன் பொதுவுடமைக் கொள்கைகளில் மாற்றம் காண ஆரம்பிக்கவும், தனிவுடைமைக் கொள்கை, அரசியல், மத நிறுவனங்கள் தலை தூக்க ஆரம்பித்தன. அறிவியல் கண்டுபிடிப்புகள் உருவாக ஆரம்பித்தன. மெல்ல மெல்ல ஆண் தலைமைப் பொறுப்பை ஏற்க ஆரம்பித்தான்.

முதல் விஞ்ஞானி, முதல் விவசாயி, முதல் ஞானி என அனைத்திலும் பெண்களே முன்னிலை வகித்திருந்தனர். ஆனாலும் சட்டங்கள், கருத்தாக்கங்கள், சமூக அமைப்புகள் என அனைத்திலும் பெண் ஓரங்கட்டப்பட்டு ஆண் மட்டுமே முன்னிலைப்படுத்தப்பட்டான். மெல்ல மெல்ல பெண்கள் வீட்டிற்குள் முடக்கப்பட்டு, குறுகிய எல்லைகளை வகுத்து, இறுதியாக இரண்டாந்தர குடிமக்களாகவும் ஆக்கப்பட்டனர்.

சமுதாயத்தில் அடக்கி ஒடுக்கப்பட்ட பெண் வீறு கொண்டு எழுந்தது இன்று, நேற்று முதல் அல்ல. பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே தம் உரிமையை மீட்க போர்க்கொடி தூக்கியவள்தான். இன்றைய இந்த உன்னத நிலைக்கு அன்றைய மங்கையர் எத்துணைப் போராட்டங்களையும், எதிர்ப்புகளையும் சந்தித்திருக்கிறார்கள் என்பதை உணர வேண்டும்..

இன்று மகளிர்தம் உரிமையை நிலைநாட்ட எத்துணையோ சட்டங்களும், திட்டங்களும் இருந்தாலும், அதற்கான விழிப்புணர்விற்காக சமூக ஆர்வலர்கள் முயற்சி மேற்கொள்ளுதல் அவசியம்.  ஒரு பெண் தன்னை மிஞ்சி விடுவாளோ என்ற பதற்றமும், சுயபச்சாதாபமும் ஒரு ஆணுக்கு ஏற்படுவதாலேயே பல பிரச்சனைகள் எழுவதையும் வெளிப்படையாகவே காணமுடிகின்றது. ஒரு பெண்ணை சக மனுசியாக  பார்க்க முடியாத நிலையே இதன் காரணம்.  

பெண்களை எண்ணம், சொல், செயல் என எவ்வகையிலும் இழிவுபடுத்துவது அறிவற்ற செயல் என்றாலும் அதை இன்று ஊடகங்கள் செவிமடுப்பதில்லை. விளம்பரங்களில் தேவையின்றி பெண்களை அரைகுறை ஆடைகளுடன், மோசமான பாலுணர்வைத் தூண்டுகின்ற உடல் மொழிகள், இரட்டை அர்த்த வசனங்கள் என்று மிகக் கேவலமாக நடத்துவதைக் காணமுடிகிறது.

தொலைக்காட்சித் தொடர்களில் மேலும் ஒருபடி மோசமாக, பெண்கள் கலாச்சார சீர்கேடுகளை ஊக்குவிப்பவர்களாக புனையப்படுகிறார்கள். குடும்பத்தில் வன்முறைகளை எப்படி செயல்படுத்துவது என்பதை பெண்களைக்கொண்டு வகை வகையாகத் திட்டமிட்டு காட்சிப்படுத்துவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. கொலை, கொள்ளை, கருவைக் கலைத்தல், பாலியல் வன்கொடுமைகள் போன்ற கொடுமைகள் அனைத்தையும் சர்வ சாதாரணமாகப் பெண்கள் செய்வதுபோலக் காட்சியமைப்பதை எந்தத் தணிக்கைக் குழுவும் கண்டுகொள்வதில்லை என்பதும் வேதனையான விசயம்.

இவை பண்பாடு, கலாச்சார சீரழிவிற்கு மிக முக்கியமான காரணிகளில் முதன்மையாக இருப்பதுடன் உளவியல் சார்ந்து பெண்களின் மனநிலையில் மோசமான மாற்றங்களை ஏற்படுத்தவல்லது.  2017ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இந்தியா முழுவதும் 32,254 பாலியல் வன்முறை குற்றங்கள் பதிவாகியுள்ளன. இதில் தமிழகத்தில் மட்டும் 1587 குற்றங்கள் நிகழ்ந்துள்ளன. 2017 முதல் 2019 வரை ரெயில்வே வளாகங்கள் மற்றும் ஓடும் ரெயில்களில் 160-க்கும் மேற்பட்டோர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளனர்.   கடந்த 3 வருடங்களில் கொலைகள் 4,465. கற்பழிப்பு உள்ளிட்ட பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 7,534. இவை தவிர பல்வேறு குற்றங்களின் மொத்த எண்ணிக்கை 5,44,636 என்று குறிப்பிடப்பட்டுள்ளது.பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளில் தமிழகத்துக்கு இரண்டாவது இடம் என்பதும் வேதனையான செய்தி.

ஒருவரின் உண்மையான வளர்ச்சியை நிர்ணயிக்கக் கூடியது பொருளாதார முன்னேற்றம் மட்டுமே. குறிப்பாக பெண்களுக்கு பொருளாதார சுதந்திரமும், முன்னேற்றமும் மிகவும் அவசியமானது.  இன்றைய உலகமயமாக்கல், பொருளாதார மறு சீரமைப்பு போன்றவைகளால் உலகம் முழுவதும் வேலை வாய்ப்புகள் பெருகி வருவது பெண்களுக்கும் சாதகமாகவே அமைந்துள்ளது. பலர் தொழில் துறைகளிலும், உற்பத்தித் துறைகளிலும் சாதனை புரிந்து வருகின்றனர். மற்றைய உலக நாடுகளைப் போலவே இந்தியாவிலும், சமுதாயத்தில் பெண்களின் நிலையில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. சுய தொழிலிலும் ஆர்வமுடன் ஈடுபட்டு வெற்றியும் கண்டு வருகின்றனர்.

இத்தனைச் சட்டங்களும், கல்வியறிவும் இருந்தாலும் பெண்களுக்குப் போதுமான அதிகாரங்களும் வாய்ப்புகளும் மிகக்குறைந்த அளவிலேயே இருப்பதும் உண்மை.அலுவலகங்களில் ஒரே விதமான பணிகளுக்கு ஆண்களுக்கு ஒரு விதமாகவும், பெண்களுக்கு குறைந்த அளவிலுமே சம்பளம் வழங்கப்படுகிறது. கூலித் தொழிலாளிகளுக்கும் இதே நிலையே உள்ளது.

பாரம்பரியமாக, குடும்பம் மற்றும் நாட்டின் வளர்ச்சியில் மிக முக்கிய பங்கை வகிக்கும் பெண்களும்கூட பொருளாதார நிலையில் ஆண்களைச் சார்ந்து இருக்க வேண்டிய நிலைதான்உள்ளது. தடைகளைத் தகர்த்தெறிந்து சுயமாக நின்று தொழில் புரிய முன்வரும் பெண்களும் தொழிலில் சந்திக்கும் சவாலை விட பன்மடங்கு சவால்களையும் பிரச்சினைகளையும் தங்கள் சமுதாயம், குடும்பம் போன்றவற்றில் அதிகமாகவே சந்திக்க வேண்டியுள்ளது. பெண்களும் பொறுப்பு தரப்பட வேண்டும் என்று எதிர்பார்ப்பதைவிட்டு தாமே முன்வந்து முக்கியமான பொறுப்புகளை ஏற்கத் துணியவேண்டும்.

தேவையான அளவிற்கு உழைப்பதற்கும், சவால்களைச் சமாளிப்பதற்குரிய பக்குவமும் பெற்றிருந்தாலும் பெண்கள் எதிலும் சுயமாக முடிவு எடுக்க முடியாத வகையில் பெற்றோர், கணவர், உறவினர்கள் என்று பலரின் தலையீடுகளை சமாளிக்க வேண்டியுள்ளது. தொழில் விசயங்களிலும் இந்த தலையீடு இருப்பதால் பல நேரங்களில் அது வெற்றி பெறுவதில் பாதிப்பை ஏற்படுத்திவிடுகிறது என்பதும் நிதர்சனம்.

வெற்றி பெற்ற பெரும்பாலான பெண் தொழிலதிபர்கள், ஆண்களை விட பன்மடங்கு அதிகமாக உழைத்தவர்களாகவோ அல்லது குடும்பத்தின் முழுமையான ஒத்துழைப்பு பெற்றவர்களாகவோ இருப்பவர்கள் என்பதும் கண்கூடு.பெண்களுக்கான சிறப்புத் திட்டங்களும், சலுகைகளும் நிறையவே இருக்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது. இவைகள் பற்றிய விழிப்புணர்வுடன் ஆண்களுக்கு நிகராக பெண்களும் தொழில் துவங்கி வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கையுடன் தொழில் தொடங்க முன் வரவேண்டும்.

இன்று உலகின் சில பகுதிகளில் ஆண் குழந்தை களைப் பெற்றுக்கொள்ளும் விருப்பம் அதிகமாக இருப்பதால், பெண் குழந்தைகள் கருக்கலைப்பு செய்யப்படுகிறார்கள் என்பதும் வேதனையான செய்தி. ஆண் மகவு பெற்றெடுக்க உறவினர்கள் மற்றும் சமூகத்தால் அழுத்தம் கொடுக்கப் படுவதால்இந்தியா போன்று சில நாடுகளில் பெரிதும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

இந்தியாவில் 1941-ம் ஆண்டில் 1000 ஆண்களுக்கு 1047 பெண்கள்என்ற விகிதம் இருந்தது.2019-ல் 100 பெண் களுக்கு, 107.48 ஆண்கள். அதாவது 1000 ஆண்களுக்கு 930 பெண்கள் உள்ளனர். மொத்த மக்கள் தொகையில்,48.20 சதவீதம் பெண்கள் என்றால் 51.80சதவீதம் ஆண்கள் உள்ளனர்.   கடந்த 30 ஆண்டுகளில் சுமார் 11/2 கோடி பெண் சிசுக்கள் கருவிலேயே கலைக்கப்பட்டிருக்கின்றன. தமிழ்நாட்டில் 15 மாவட்டங்களில் ஆண்,பெண் குழந்தைகள் விகிதம் கவலை தருவதாக உள்ளதென கருக்கலைப்புக்கு எதிரான அமைப்பு தெரிவிக்கிறது. தமிழ் நாட்டில் 1000 ஆண் குழந்தைகளுக்கு 952 பெண் குழந்தைகள் என்பதாக இருக்கிறது.

இன்று மகளிர் இல்லாத துறைகளே இல்லை எனலாம். ஆணுக்கு நிகராக ஆட்டோ முதல் விமானம் வரை  ஓட்டுவதிலும் அணு விஞ்ஞானியாகவும் மின்னிக் கொண்டிருக்கிறார்கள். சுய கட்டுப்பாடும், நம் பாரம்பரியக் கலாச்சாரமும், பண்பாடும் காக்கும் தீவிர எண்ணம் கொள்வதும் கருத்தில் கொள்ளத்தக்கது.
 பெண் குழந்தையைப் பொத்திப்பொத்தி வளர்க்க வேண்டுமா என்றால் அது இன்றைய காலகட்டத்தில் இயலாத காரியம். தாய்ப்பாலுடன் வீரம், துணிவு, கல்வி, தற்காப்பு, அறவொழுக்கம் போன்ற அனைத்தையும் சேர்த்தே ஊட்டி வளர்ப்பது அவசியம்.

வீரப்பெண்மணிகளின் சரித்திரம் எடுத்துரைத்து, அச்சமின்றி, சவால்களை எதிர்கொண்டு, சாதனைப் படைக்கும்  தலைசிறந்த ஒரு பெண் சமுதாயத்தை உருவாக்க உறுதி கொள்வோம். தேவையற்ற எதிர்பார்ப்புகளையும், அளவிற்கு அதிகமான பாராட்டுகளில் நாட்டம் கொள்வதையும்,பெண்ணே ஒரு பெண்ணின் முன்னேற்றத்திற்குத் தடை என்ற கருத்தை முறியடிக்கவும், சாதனைகள் சமமானது என்பதை நம் உழைப்பால் உறுதிசெய்வோம்!

Tags:    

Similar News