லைஃப்ஸ்டைல்
அசையா சொத்துக்களுக்கான முத்திரைத்தாள் மற்றும் பதிவு கட்டணம்

அசையா சொத்துக்களுக்கான முத்திரைத்தாள் மற்றும் பதிவு கட்டணம்

Published On 2020-03-21 03:13 GMT   |   Update On 2020-03-21 03:13 GMT
அசையா சொத்துக்களுக்கான முத்திரைத்தாள் கட்டணமானது, சொத்தின் சந்தை மதிப்பு, சொத்து வகை மற்றும் மாடிகள் எண்ணிக்கை, குடியிருப்பு அல்லது வணிக கட்டிடம், சொத்து அமைவிடம், சொத்து உரிமையாளரின் வயது மற்றும் பாலினம் ஆகிய பல காரணிகளை கொண்டு மதிப்பிடப்படுகிறது.
வீடு, மனை போன்ற அசையா சொத்துக்களை வாங்குபவர்களிடம் அதற்குரிய உரிமை மாற்றம் செய்து, பராமரிக்கும் வகையில் சொத்தின் சந்தை மதிப்பில் குறிப்பிட்ட சதவிகிதம் முத்திரை தாள் கட்டணமும், சம்பந்தப்பட்டவர் பெயரில் உள்ள சொத்து பதிவுகளை சரி பார்த்து பதிவு செய்யும் வகையில் பதிவுக்கட்டணமும் அரசால் பெறப்படுகிறது. முத்திரை தாள் கட்டணம் என்பது பொதுவாக சொத்துக்கான தற்போதைய சந்தை மதிப்பில் 4 முதல் 7 சதவிகிதம் வரையிலும், பதிவு கட்டணம் என்பது சொத்துக்களின் சந்தை மதிப்பின் ஒன்று முதல் 4 சதவிகிதம் வரையிலும் கணக்கிடப்படும். இந்த சதவிகித கணக்கு ஒவ்வொரு மாநிலத்திலும் வெவ்வேறு அளவுகளில் நிர்ணயம் செய்யப்படுகிறது.

அசையா சொத்துக்களுக்கான முத்திரைத்தாள் கட்டணமானது, சொத்தின் சந்தை மதிப்பு, சொத்து வகை மற்றும் மாடிகள் எண்ணிக்கை, குடியிருப்பு அல்லது வணிக கட்டிடம், சொத்து அமைவிடம், சொத்து உரிமையாளரின் வயது மற்றும் பாலினம் ஆகிய பல காரணிகளை கொண்டு மதிப்பிடப்படுகிறது.

வங்கி கடன் மற்றும் வரி விலக்கு

வங்கிகள் மூலம் வீடு அல்லது வீட்டு மனைக்கடன் பெறும்போது முத்திரை தாள் மற்றும் பதிவு கட்டணங்கள் கடனுடன் சேர்க்கப்படுவதில்லை. சொத்து வாங்குபவர் அவற்றை தனிப்பட்ட முறையில் ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும். அந்த செலவுகளுக்காக வங்கிகள் மூலம் குறிப்பிட்ட கால அளவுக்குட்பட்டு திருப்பி செலுத்தும் கடன் வசதியையும் பெற்றுக்கொள்ளலாம். அசையா சொத்து வாங்கியவர்கள் வருமான வரி சட்டம் பிரிவு 80-சி கீழ் முத்திரை கட்டணங்களுக்காக அதிகபட்சமாக ரூ. ஒரு லட்சத்து 50 ஆயிரம் வரை வரி விலக்கு பெற முடியும்.

முத்திரை தாள் கட்டணத்தை கீழ்க்கண்ட மூன்று விதங்களில் செலுத்தலாம்.

தக்க மதிப்புள்ள முத்திரைத்தாள்

பெரும்பாலான மக்கள் இந்த முறையை கடைபிடிக்கிறார்கள். அங்கீகரிக்கப்பட்ட முத்திரை தாள் விற்பனையாளரிடமிருந்து வாங்கிய, ஸ்டாம்ப் பேப்பரில் பதிவு அல்லது ஒப்பந்த விவரங்கள் எழுதப்படும். கட்டணத்துக்கேற்ப உயர் மதிப்புள்ள பல முத்திரைத் தாள்கள் வாங்க வேண்டியதாக இருக்கும்.

முகவர் மூலம் முத்திரை

இந்த முறையானது ‘பிராங்கிங்’ (Franking) என்று சொல்லப்படும். குறிப்பிட்ட முகவர் மூலம் ஆவணங்களில் முத்திரை கட்டணம் செலுத்தியதை குறிக்கும் வகையில் முத்திரை இடப்படும். அந்த தொகை முத்திரை தாளுக்கான கட்டணத்திலிருந்து கழித்துக்கொள்ளப்படும். வீட்டுக்கடன் அளிக்கும் சில வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு ‘பிராங்கிங் முகவர்’ சேவையை அளிக்கின்றன.

மின்னணு முத்திரை

‘இ-ஸ்டாம்பிங்’ என்று இந்த முறையில் முத்திரை தாள் கட்டணத்தை SHCIL (Stock Holding Corporation of India Limited) இணையதளம் வழியாக செலுத்தலாம். அதன் இணைய தளத்தில் சொத்துக்கள் அமைந்துள்ள மாநிலத்தை தேர்வு செய்து, அதற்கான விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அளிக்க வேண்டும். பின்னர் சம்பந்தப்பட்ட அதன் மையத்தில் கட்டணத்தை செலுத்தி, தனிப்பட்ட அடையாள அடையாள எண் (UIN) கொண்ட மின்னணு முத்திரை சான்றிதழை பெற்றுக்கொள்ளலாம்.
Tags:    

Similar News