லைஃப்ஸ்டைல்
எல்லா பிரச்சினைகளுக்கும் சுலப தீர்வு

எல்லா பிரச்சினைகளுக்கும் சுலப தீர்வு

Published On 2020-03-19 05:01 GMT   |   Update On 2020-03-19 05:01 GMT
சமாளிக்கவே முடியாததாக தோன்றும் எத்தனையோ பிரச்சினைகளின் தீர்வு கொஞ்சம் கவனமாக யோசித்தால் மிக சாதாரணமானதாக இருக்கும்.
வாழ்க்கை என்றாலே ஏதேனும் ஒரு பிரச்சினை இருக்கத்தான் செய்யும். பிரச்சினை இல்லாத மனிதன் என்று யாரேனும் இருக்கிறார்களா.. ஒன்று மாற்றி ஒன்று என்று ஏதேனும் ஒரு பிரச்சினை வந்து உங்கள் நேரத்தை முழுமையாக இழுத்துக் கொள்வது இயல்புதான். என்றாலும் எந்த ஒரு பிரச்சினையையும் நீங்கள் எப்படி அனுகுகிறீர்கள் என்பதில்தான் மகிழ்ச்சியின் ரகசியம் இருக்கிறது.

பிரச்சினைகளை முதன்மையாக இருத்திக் கொண்டு அதை தீர்த்தால் தான் வாழ்கையின் அடுத்த கட்டத்திற்கே போக முடியும் என்று நினைத்தால், வாழ்க்கையே சூன்யமாகத்தான் தெரியும். ஒவ்வொன்றும் தீர்க்கவே முடியாத பெரும் விஷயமாக உங்கள் மனதை மிரட்டும். இந்த பிரச்சினைகளுக்கு ஏதேனும் தீர்வு இருக்கிறதா? அப்படி இருந்தால் எங்கிருந்து ஆரம்பிப்பது.. எதை நோக்கி செல்வது என எதுவும் புரியாத புதிராக மிரட்டும். எங்கே ஆரம்பித்தாலும் ஆரம்பித்த இடத்திலேயே வந்து நிற்பதாக மனம் பதறும். குழப்பம் மனமெங்கும் சூழ்ந்து கண்ணைக் கட்டிக் கொண்டுவர தீர்வுப் பாதைகள் குழப்ப முடிச்சுகளாக முன் நிற்கும்.

அதே நேரம் உண்மையில் எல்லாப் பிரச்சினைகளுக்கும் சுலபமான தீர்வு இருக்கிறது. அதை சுலபமாக்குவதும் கடினமாக்குவதும் உங்கள் கைகளில் தான் இருக்கிறது என்கிறது வாழ்வியல். நீங்கள் பார்த்திருப்பீர்கள், திடீரென்று தடைபட்டு நிற்கும் கணினியை, பல நேரங்களில் நாம் ஒரு முறைஆப் பண்ணி விட்டு ஆன் செய்தால் போதும் அது தானே சரியாகி எந்த பிரச்சினையும் இல்லாமல் வேலை செய்யும்.

அது போல சமாளிக்கவே முடியாததாக தோன்றும் எத்தனையோ பிரச்சினைகளின் தீர்வு கொஞ்சம் கவனமாக யோசித்தால் மிக சாதாரணமானதாக இருக்கும்.
பொதுவாக மனித மூளையின் லாஜிக்கல் பகுதி சுலபமான தீர்வை ஏற்றுக் கொள்வதில்லை. அதற்கு எந்த ஒரு சின்ன விசயத்தையும் அலசி ஆராய்ந்து விடை கண்டால்தான் அது சரியான தீர்வு என்று படுகிறது. அப்படி முடியாத நேரங்களில் தன் பிரச்சினைக்கு தீர்வே இல்லை என முடிவுக்கு வந்து மனம் சோர்ந்து விடுகிறது.

பிரச்சினைகளை முதலில் பிரித்துப் பார்க்க பழகுங்கள். சில பிரச்சினைகள் அன்றாட நிகழ்வு. அதை உற்று உற்றுப் பார்க்காமல் அப்படியே ஏற்றுக் கொள்ளுங்கள். உதாரணமாக காலை,மாலை நேரங்களில் நீங்கள் வெளியில் எங்கு செல்ல வேண்டும் என்றாலும் போக்குவரத்து நெரிசல் அதிகமாகத்தான் இருக்கும். இதை ஒரு பிரச்சினை என்று பார்த்தால் அதற்கு உங்களால் எந்த தீர்வும் காண முடியாது. அதை வாழ்வின் இயல்பு என்று ஏற்றுக் கொண்டால் அதற்குத் தகுந்தபடி உங்கள் நேரத்தை பயன்படுத்த பழகி விடுவீர்கள்.

உண்மையில் மனித மனம் ஆற்றல் வாய்ந்தது. அது தன் எந்த பிரச்சினைக்கும் தீர்வு காணக் கூடியது. இருந்தும் ஒருவன் சாதாரணமாக தன் மூளையின் 10சதவீதம் அளவையே பயன்படுத்துகிறான் என்கிறது மனஇயல்.  வாழ்வியல் பட்டறைகளில் எந்த பிரச்னை என்றாலும் தேங்கி விடாமல் அதன் தீர்வுகளை பல கோணங்களில் சிந்திக்க செய்வதற்காக பல்வேறு கேள்விகளை கேட்டு அதற்கு சாத்தியமான பதில்களை அலச செய்வார்கள். உதாரணமாக யானையை பிரிட்ஜிற்குள் வைக்கனும்னா என்ன பண்ண வேண்டும் என்ற கேள்விக்கு, யானையை எப்படி பிரிட்ஜிற்குள் வைக்க முடியும் என்று தான் பெரும்பாலும் எல்லோருக்கும் தோன்றும்.

‘யானை என்றால் அது ஏன் சிறிய யானை பொம்மையாக பிரிட்ஜிற்குள் வைக்கக் கூடியதாக இருக்கக் கூடாது அல்லது ஏன் பிரிட்ஜ் யானை உள்ளே நிற்குமளவு பிரமாண்டமானதாக இருக்கக் கூடாது’ என்று நிகழ்ச்சியாளர் கேட்கும் போது தான் ‘அட, ஆமா இல்ல’ என்று தோன்றும். ஆனால், பெரும்பாலும் எந்த பிரச்சினையையும் ஒன்று மிகப் பெரிதாக எடுத்துக் கொண்டு மனம் தடுமாறுகிறது அல்லது மிக சாதாரணமாக எடுத்துக் கொண்டு அதன் தீர்வை பற்றி யோசிக்கவே செய்யாமல் பிரச்சினைகளை பெரிதாக ஆக்கி பின்னால் மிகச் சிரமப்படுகிறது நம் மனம்.

பிரச்சினையாக நீங்கள் கருதக்கூடிய ஒன்றை முதலில் நிதானமாக அலச வேண்டும். பிரச்சினைக்கு நீங்கள் முழுப் பொறுப்பு எடுத்துக்கொண்டவராக பிரச்சினையை புரிந்து கொண்டு மாற்றிக் கொண்டால் பிரச்சினையும் மாறி விடும் என்ற நம்பிக்கை வரும். உதாரணமாக இப்போது ஒரு இளைஞனுக்கு நல்ல மதிப்பெண்கள் வாங்குவதில் பிரச்சினை இருக்கிறது என்றால் அதன் மூல காரணத்தை பிரித்துப் பார்க்கும் போது படிப்பதற்கு சரியான நேரம் ஒதுக்கப்படவில்லையா அல்லது சரியான முறையில் படிக்கப்படவில்லையா.. என்று மாற்றத்தை கொண்டு வருவதற்கு ஏதுவாக பார்க்கும் போது வேண்டிய மாற்றத்தை அவனால் ஏற்படுத்திக் கொள்ள முடியும். அதே நேரம் பாடம் கஷ்டமாக இருக்கிறது என்று தன்னை மாற்றிக் கொள்ள நினைக்காமல் பாடத்தின் மேல் தவறு இருப்பதாக நினைத்தால் அதற்கு தீர்வை மனம் தேடாது.

அடுத்து எதனால் நேரம் ஒதுக்க முடியவில்லை, அதற்கு உங்கள் மனம் முக்கியத்துவம் ஏன் கொடுக்கவில்லை என்ற ரீதியில் சிந்திக்க வேண்டும். நன்றாக படிப்பது எவ்வளவு முக்கியமானது என்பதை நீங்கள் உங்கள் மனதிற்கு புரிய வைக்கும் போது உங்கள் ஆழ்மனம் அதற்கான சாதனங்களைத் தானே தன்பால் ஈர்த்து விடும். உலகத்தையே வெற்றி கொள்ள நினைத்த பிரான்ஸ் மாவீரன் நெப்போலியன் தன் கடைசி காலத்தில் பிரிட்டனிடம் தோல்வியுற்ற போது, அவர் ஆப்பிரிக்காவில் தனிமைச் சிறையில் வைக்கப்பட்டார்.

சிறையில் மன உளைச்சலில் இருந்த அவரை பார்க்க வந்த அவரின் நண்பர் அவரிடம் ஒரு சதுரங்க அட்டையை “இது உங்களின் சிந்தனையை செயல்பட வைக்கும் தனிமையை போக்கும், இதை திறந்து விளையாடுங்கள்” என்று கூறி கொடுக்கிறார். ஆனால் சிறை படுத்தி விட்டார்களே என்ற மன உளைச்சலில் இருந்த மாவீரனுக்கு அதன் மீது கவனம் போக வில்லை. சிறையில் இருக்கும் தனக்கு நண்பர் அவசரமாக ஒரு சதுரங்க அட்டையை வந்து கொடுப்பதற்கு ஏதாவது பிரத்யேகமான காரணம் இருக்குமா என அவரால் சிந்திக்க முடியவில்லை. எதுவும் செய்யாமல் தன் பிரச்சினைக்கான தீர்வைப் பற்றியே யோசிக்காமல் தன் விதியை நொந்தபடி மனஉளைச்சலிலேயே இருந்து சிறிது காலத்தில் இறந்தும் போகிறார்.

பிற்காலத்தில் பிரான்ஸ் அருங்காட்சியகம் மாவீரன் நெப்போலியனிடம் இருந்த சதுரங்க அட்டையை ஏலம் விட அதை ஆய்வு செய்த போது அந்த அட்டையின் நடுப்பக்கத்தில் சிறிய அளவில் ஒரு குறிப்பு ஒன்று இருக் கிறது. அதில் அந்த சிறைச்சாலையில் இருந்து வெளி யேறுவதற்கான வழியை அந்த குறிப்பு சொல்லி இருந்தது. ஆனால் அவரின் மன உளைச்சலும், பதட்டமும் அவரின் சிந்தனையை செயல்படாமல் ஆக்கி வைத்து அவரின் தப்பிக்கும் வழியை மூடி விட்டது.

அவர் தன் பிரச்சினைக்கான தீர்வை வேறு வழியே இல்லை என முடிந்து போன ஒன்றாக நினைத்து செயலற்றுப் போகாமல், ஏதாவது வழி தென்படலாம் என அந்த சதுரங்கத்தில் தன் கவனத்தை செலுத்தி பிரச்சினையை விட்டும் தள்ளி நின்று சிந்தித்திருந்தால், அந்த அட்டையில் அவர் வெளியேறுவதற்கான குறிப்பு கொடுக்கப் படாமல் இருந்தால் கூட அவர் ஆழ்மனம் அவருக்கான தீர்வை அவருக்கு தோன்ற செய்திருக்கும்.

இதை புரிந்து கொண்டால் அந்த மாவீரனின் வெற்றிக் கதைகள் மட்டுமல்ல அவர் தோல்விக் கதையுமே நமக்கு ஒரு அனுபவ பாடமாக அமையும். எந்த சூழலிலும் நம் மனம் பிரச்சினைக்கான தீர்வை மனஅழுத்தம் இல்லாமல் நிதானமாக சிந்திக்க செய்யும்.

www.facebook.com/fajilaazad.dr
Email:fajila@hotmil.com

Tags:    

Similar News