லைஃப்ஸ்டைல்
வீட்டுமனை திட்டங்களுக்கு அங்கீகாரம் அளிக்கும் நடைமுறை

வீட்டுமனை திட்டங்களுக்கு அங்கீகாரம் அளிக்கும் நடைமுறை

Published On 2020-03-14 02:30 GMT   |   Update On 2020-03-14 02:30 GMT
நகர் ஊரமைப்பு துறைக்கு உட்பட்ட பகுதிகளில் (DT-CP) வீட்டு மனைப்பிரிவுகளுக்கு (layout) அங்கீகாரம் அளிப்பதற்கு கீழ்க்கண்ட வழிமுறைகள் பின்பற்றப்படுகின்றன.
நகர் ஊரமைப்பு துறைக்கு உட்பட்ட பகுதிகளில் (DT-CP) வீட்டு மனைப்பிரிவுகளுக்கு (layout) அங்கீகாரம் அளிப்பதற்கு கீழ்க்கண்ட வழிமுறைகள் பின்பற்றப்படுகின்றன.

1) வீட்டு மனைத்திட்டம் அமைய உள்ள இடத்திற்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து, சம்பந்தப்பட்ட நிலப்பகுதியில் அரசு புறம்போக்கு நிலங்கள், நில சீர்திருத்த சட்டம் மற்றும் நகர்ப்புற நில உச்ச வரம்பு சட்டம் ஆகியவையின் கீழ் கையகப்படுத்தும் நடவடிக்கைகள், மழை வெள்ள பாதிப்பு ஏற்படுவது ஆகிய நிலைகள் இல்லை என்ற சான்றிதழை மனை மேம்பாட்டாளர் பெற வேண்டும். வட்டாட்சியர் அலுவலக அதிகாரிகள் நேரில் வந்து ஆய்வு செய்த பின்னர் சான்று அளிக்கப்படும்.

2) அதன் பின்னர், ஊராட்சி, பேரூராட்சி போன்றவை மூலம் மனை மேம்பாட்டாளர் நகர் ஊரமைப்பு துறைக்கு விண்ணப்பிக்க வேண்டும். அதற்கு நிலத்தின் கிரயப் பத்திரம், மூலப்பத்திரம், பட்டா, சிட்டா, அடங்கல், வில்லங்க சான்று, வட்டாட்சியர் அலுவலக சான்றிதழ், உள்ளிட்ட அவசியமான ஆவணங்களுடன் உள்ளாட்சி அமைப்பின் வினா விடைப்படிவம் ஒன்றையும் பூர்த்தி செய்து அளிக்க வேண்டும். உள்ளாட்சி அமைப்பின் மூலம் நகர் ஊரமைப்புத்துறை மண்டல அலுவலகம் அல்லது உள்ளூர் திட்ட குழும அலுவலகத்துக்கு அது அனுப்பப்படும். பின்னர், அலுவலக அதிகாரி மூலம் மனை அமைந்துள்ள இடம் நேரில் ஆய்வு செய்யப்படும்.

மனைப்பிரிவுக்கு அருகில் நீர்நிலைகள், இடுகாடு, ரயில் தண்டவாளம் போன்றவை கூடாது என்ற அடிப்படையில் நிபந்தனைகளையும், மனுவுடன் இணைத்துள்ள ஆவணங்களும் பரிசீலனை செய்யப்படும். ஆவண சரிபார்ப்புக்கு பின்னர், வீட்டு மனை திட்டத்திற்கான ஒரு வரைபடத்தை அளித்து, தொழில் நுட்ப ஒப்புதல் மற்றும் அங்கீகார எண் தரப்படும். அந்த வரைபடத்தில் விதிகளுக்கு உட்பட்டு பொது ஒதுக்கீடு, சாலை, கடைகள், மனைகள் எண்ணிக்கை, அவற்றின் அளவுகள் அமைந்திருக்கும். பொது உபயோகம், சாலை, கடைகள் முதலிய அளவுகள் சதுர அடிகளில் இருக்கும்.

3) மனைப்பிரிவு அமைய உள்ள இடம் 5 ஏக்கருக்கும் குறைவாக இருக்கும் நிலையில் மண்டல அலுவலகம் அல்லது உள்ளூர் திட்ட குழுமத்தில் தொழில்நுட்ப ஒப்புதல் வழங்கப்பட்டு, இறுதி ஒப்புதலுக்கு உள்ளாட்சி அமைப்புக்கு அனுப்பி வைக்கப் படும்.

4) மனைப்பிரிவு அமைந்துள்ள இடம் 5 ஏக்கருக்கும் அதிகமாக இருப்பின், அதை நேரில் ஆய்வு செய்து அதற்கான அறிக்கை, மண்டல அலுவலகம் அல்லது உள்ளூர் திட்டக் குழுமம் மூலமாக, சென்னை நகர் ஊரமைப்பு இயக்குனர் அலுவலகத்துக்கு அனுப்பப்படும். அங்கு, தொழில் நுட்ப ஒப்புதல் வழங்கப்பட்டு, அது உள்ளாட்சி அமைப்பின் இறுதி ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும்.

5) தொழில் நுட்ப ஒப்புதல் அளிக்கப்பட்ட வீட்டு மனைத்திட்டம், சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்பின் இறுதி ஒப்புதலுக்கு, சில நிபந்தனைகளுடன் அனுப்பப்படும். உள்ளாட்சி அமைப்பு அந்த நிபந்தனைகளை மனுதாரருக்கு தெரிவித்து, அவை பூர்த்தி செய்யப்பட்ட நிலையில் இறுதி ஒப்புதல் வழங்கப் படும்.

6) மனைத் திட்டத்தில் குறிப்பிட்டுள்ள சாலை மற்றும் பொது ஒதுக்கீடு பகுதியை தானப்பத்திரத்தின் (Gift De-ed) மூலம் மனுதாரர் உள்ளாட்சி அமைப்பிடம் ஒப்படைக்க வேண்டும். தொழில் நுட்ப ஒப்புதல் அளிக்கப்பட்ட இடம், அன்றைய நாள் வரை அரசாங்கத்தால் நில ஆர்ஜித நடவடிக்கைக்கு உட்படுத்தப்படவில்லை என்று உள்ளாட்சி அமைப்பு உறுதி செய்து கொள்ளும். மேலும், சொல்லப்பட்ட நிபந்தனைகள் நிறைவேற்றப்பட்ட பின் உள்ளாட்சி அமைப்பு ஒரு தீர்மானம் நிறைவேற்றி வீட்டுமனை திட்டத்திற்கு இறுதி ஒப்புதல் அளிக்கும். அதன் பின்னரே, வீட்டு மனைத்திட்டத்தில் உள்ள பிளாட்டுகளை உரிமையாளர் விற்பனை செய்ய இயலும்.
Tags:    

Similar News