லைஃப்ஸ்டைல்
நேர்காணலில் குழு விவாத தயக்கங்களை தவிர்ப்பது எப்படி?

பெண்கள் நேர்காணலில் குழு விவாத தயக்கங்களை தவிர்ப்பது எப்படி?

Published On 2020-03-09 03:03 GMT   |   Update On 2020-03-09 03:03 GMT
நேர்காணலில் குழு விவாதம் என்றால் பலர் முன்னிலையில் பதில் சொல்ல வேண்டியிருக்கிறது. இது வேலை வேண்டுவோருக்கு சவாலாக அமைகிறது. குழு விவாதத்தை தயக்கமின்றி எதிர்கொள்ள என்ன வழி?...
வேலை வேண்டி காத்திருப்பவர்களுக்கு சவாலாக இருப்பது போட்டித் தேர்வுகளும், இறுதிக் கட்டத்தில் நடைபெறும் நேர்காணலும்தான். போட்டித் தேர்விலாவது படித்த பாடங்களில் இருந்து கேள்விகள் இடம் பெறுவதும், அதைப் பற்றி விளக்க வேண்டியதில்லை என்பதாலும் பலரும் துணிச்சலுடன் எதிர்கொண்டு விடுகிறார்கள். ஆனால் நேர்காணலோ, நேரடியாக விடையளிக்க வேண்டியதாக இருக்கிறது. அதிலும் குழு விவாதம் என்றால் பலர் முன்னிலையில் பதில் சொல்ல வேண்டியிருக்கிறது. இது வேலை வேண்டுவோருக்கு சவாலாக அமைகிறது. குழு விவாதத்தை தயக்கமின்றி எதிர்கொள்ள என்ன வழி?...

பெரும்பாலான நிறுவனங்கள் குழு விவாதத்தை முதன்மை நேர்காணலாக நடத்துகின்றன. இன்றைய நேர்காணல் யுத்திகளில் குழு விவாதமே சிறந்த தேர்வு முறையாக கருதப்படுகிறது. பணிச்சூழல் என்பது குழுவாக இணைந்து செயல்படுவதே. எனவே குழு விவாதத்தில் ஈடு படுத்துவது பணிச்சூழலுக்கு ஏற்ற ஒருவரின் திறமையை கண்டுபிடிக்க சரியான வழி என்பது நேர்காணல் அதி காரிகளின் நம்பிக்கை.

ஆனால் வேலை தேடுபவர்களுக்கோ குழுவிவாதம் சவாலானது. திறமையை பேச்சின் வழியாக நிரூபித்தாக வேண்டும். கல்வியில் சிறந்த, சிந்தனைத் திறன் மிகுந்தவர்கள்கூட குழு விவாதத்தில் பின்னடைவை சந்திப்பது உண்டு. அவர்கள் கொஞ்சம் சாதுர்யமாகவும், கூச்சம் தவிர்த்தும் செயல்பட்டால் கலந்துரையாடல் தேர்வில் எளிதில் வெற்றி பெறலாம்.

குறிப்பிட்ட தலைப்பை வழங்கி பேசச் சொல்வது அல்லது குழுவில் ஒருவர் ஏதாவது ஒன்றைப் பற்றி பேசத் தொடங்கச் சொல்வது குழு விவாத நேர்காணலின் வழக்கம்.

தலைப்பு கொடுக்கப்பட்டால் முதலில் தலைப்பை சரியாக புரிந்து கொள்ள வேண்டும். அல்லது யாராவது எதைப்பற்றியாவது விவாதிக்க ஆரம்பித்தால், விவாதத்தின் போக்கை உற்றுக் கவனிக்க வேண்டும்.

தலைப்பையும், விவாதத்தையும் புரிந்து கொண்டால்தான் அதற்கேற்ற விளக்கங்கள், கேள்விகள், பதில்கள் அளிக்க முடியும். தலைப்புக்கு தொடர்பில்லாத விஷயங்களை பகிர்வது உங்களின் மதிப்பெண்களை குறைக்கும் என்பதால் சரியான தகவல்கள் தெரிந்தால் மட்டும் பேச ஆரம்பிக்க வேண்டும்.

முதலில் பேச ஆரம்பிப்பவர் சிறந்த திறன் கொண்டவர் என்ற பொதுவான கருத்து உள்ளது. சிறப்பான விளக்கம் அளிப்பவர் தெளிவானவர் என்ற எண்ணமும் முடிவும் உள்ளது. எனவே முதன்மையாக பேச ஆரம்பிப்பதும், சிறந்த விளக்கம் கொடுக்கும் திறனும் இருந்தால் நீங்கள் தலைமை தாங்க தகுதியானவர் என்று அதிகாரிகளால் அடையாளம் காணப்படுவீர்கள். எனவே துணிவுடன் பேச ஆரம்பியுங்கள்.

விளக்கம் அளித்துப் பேச வேண்டும் என்றால் தெளிவும், திறமையும் நிறைய வேண்டும் என்பதால் நன்கு பயிற்சி பெறுவது அவசியம். உரையாற்றத் தொடங்குவது மட்டுமல்ல, மற்றவர்களை நம் கருத்தை கவனிக்க வைப்பதே சிறந்த திறமையாகும். இடையில் எவரும் நுழையாத வகையில் தெளிவான, புதுமையான கருத்துகளை கொண்டிருக்கட்டும் உங்கள் வாதம்.

ஆனால் பேச்சில் ஆணவம், அதிகாரம் தெரியக்கூடாது. பதற்றமும் வெளிப்படக் கூடாது. குரலை தாழ்த்தி பேசுவதை தவிர்க்க வேண்டும். தனி நபர்கள், மதம், ஜாதி ஆகியவை பற்றி இழிவுபடுத்தி பேச வேண்டாம். அவசியமின்றி அரசியல் கலக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

மேதாவித் தன்மையை காட்டுவதாக நினைத்து, மற்றவர்களுக்கு புரியாத ஆங்கில வார்த்தைகளை பேசுவதையோ, நீண்ட நேர விளக்கம் அளிப்பதையோ தவிர்க்க வேண்டும். மற்றவர் இடைமறித்தால் அவர்களின் கருத்தை கேட்கவும் வாய்ப்பு அளிக்க வேண்டும்.

பேசும்போது உடல் மொழியும் முக்கியம். வினா தொடுத்தவர் அல்லது நேர்காணல் அதிகாரியை நேராக பார்த்து பேச வேண்டும். குறிப்பை பார்த்த படியோ, வெட்கப்பட்டு குனிந்தபடியோ பேசக்கூடாது. பேனா, பேப்பரை நோண்டிக் கொண்டிருப்பது, உடையை பிடித்துக் கொண்டிருப்பது போன்ற தேவையற்ற அசைவுகளை தவிர்க்க வேண்டும்.

எல்லோரும் பேசுகிறார்கள், நாமும் பேச வேண்டுமே என்ற கட்டாயத்தில் பேசக்கூடாது. நடுவர்கள் நம்மை கவனிக்கிறார்களா? என்று திரும்பிப் பார்ப்பதை தவிர்க்க வேண்டும். குழுவினரை பார்த்து பேச வேண்டும்.

விவாதத்தை ஆரம்பித்து வைப்பதுபோல, பேச்சை நிறைவு செய்து வைப்பதும் நீங்களாக இருந்தால் வெற்றி உங்களுடையதே. அனைத்து திறமைகளையும் கொண்டவராக கருதப்பட்டு உங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

குழு விவாதத்தில் இனி குழம்புவதற்கு ஒன்றுமில்லை. வெற்றி கனியட்டும்!
Tags:    

Similar News