லைஃப்ஸ்டைல்
பிரச்சினைகளுக்கு தற்கொலை தீர்வாகுமா?

பிரச்சினைகளுக்கு தற்கொலை தீர்வாகுமா?

Published On 2020-02-26 02:50 GMT   |   Update On 2020-02-26 02:50 GMT
மனிதகுலம் தோன்றியதிலிருந்தே பிரச்சினைகளும் உற்பத்தியாகி, அவைகளை முறியடித்துத்தானே இன்றைய நாகரிக வாழ்வை எட்டியிருக்கிறோம் என்பதை புரிந்து கொண்டால் தற்கொலை எண்ணமே தோன்றாது.
பிரச்சினை யாருக்குத் தான் இல்லை? ஒவ்வொருவருக்கும் ஒரு மாதிரி; அதை முறியடித்து முன்னேறுவது தானே வாழ்க்கை? மனிதகுலம் தோன்றியதிலிருந்தே பிரச்சினைகளும் உற்பத்தியாகி, அவைகளை முறியடித்துத்தானே இன்றைய நாகரிக வாழ்வை எட்டியிருக்கிறோம் என்பதை புரிந்து கொண்டால் தற்கொலை எண்ணமே தோன்றாது. எல்லா உயிரினங்களுக்கும் இன விருத்தி செய்து உயிர்ப்பிக்கும் ஆற்றலை மட்டுமே இயற்கை நமக்கு வழங்கியுள்ளது. அவ்வாறு பெற்ற உயிரை பாதுகாக்கும் பொருட்டே மனிதனுக்கு மட்டிலும் ஆறாவது புலனுணர்வு அறிவு வழங்கப்பட்டுள்ளது.

விலங்கினங்கள் தற்கொலை செய்து கொள்வதைக் காண இயலவில்லை. மாறாக அரிய உயிரைக் காப்பாற்ற முடிந்தமட்டும் தன் வல்லமையைப் பயன்படுத்துகிறது. துரத்தும் சிங்கத்திடமிருந்து மானும், புலியிடமிருந்து எருதும் தன்னை விட வல்லமையுடைய விலங்கிடமிருந்து தப்பித்து, உயிரைக் காக்கவே நினைக்கின்றன. எப்போதும் தன் உயிரைத் தானே மாய்த்துக் கொள்வதில்லை.

மனிதர்கள் மட்டிலுமே அற்ப விஷயங்களுக்காக தங்கள் உயிரைத் தாங்களே மாய்த்துக் கொள்கிறார்கள். அதுவும் அறிவியல் முன்னேற்றம் வளர்ந்த காலத்தில்! காரணம் அவர்கள் கலாசாரத்தையும், நாகரிகத்தையும் போட்டுக் குழப்பிக் கொள்வதால் ஏற்படும் பிரச்சினையே தவிர வேறில்லை. நமது கலாசாரம் தொன்மையானது. அரிய நீதிநெறி இலக்கியங்களை புதையலாகக் கொண்டது. அதைப் புறந்தள்ளி மேலை நாட்டு நாகரிக மோகத்தால் ஒரு பொய்யான போலியான வாழ்க்கையை வாழ நினைக்கும் போது, அதில் பிரச்சினைகள் ஏற்பட்டால் தீர்வு தெரியாது, குழம்பும் போது தற்கொலை முடிவுக்கு தள்ளப்படுகிறார்கள்.

நமது நாளேடுகளைப் புரட்டினாலே புரியும்! கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை, திருமணமான மணப்பெண் தற்கொலை, கடன் தொல்லையால் குடும்பத்தோடு தற்கொலை போன்ற செய்திகள் வந்தவாறே உள்ளன. மேலெழுந்த வாரியாகப் பார்த்தால் ஒரு காரணம் மட்டுமே குறிப்பிட்டிருக்குமே தவிர அவர்களது வாழ்வினை ஆராய்ந்தால், அதில் பல காரணங்கள் அடுக்கடுக்காய் தோன்றும்!

இந்திய தண்டனை சட்டத்தின் பார்வையில் தற்கொலை தண்டனைக்குரிய குற்றமாக கருதப்படுகிறது. குற்றத்தின் தன்மையையும் அதன் சூழ்நிலையைக் கொண்டும் தண்டனைகளை வகுத்துள்ளது. (பிரிவு 305) தற்கொலைக்கு உடந்தையாக இருப்பவருக்கு தண்டனையும், (பிரிவு 306) தற்கொலைக்கு உடந்தையோ! தூண்டிவிட்டவருக்கு தண்டனையும், (பிரிவு 309) தற்கொலை முயற்சி செய்தவருக்கு தண்டனையும் வரையறுக்கப்பட்டுள்ளது. ஆனால் காலப்போக்கில் அது குற்றமாகாது; ஒரு வகையான மனநோய்க்கு ஆட்படுதல் என்ற கருத்து அண்மைக் காலமாக உளவியல் வல்லுனர்களால் சொல்லப்படுகிறது. அதனால் தற்கொலை ஒரு தனிப்பட்ட மனிதனின் குற்றமா? அல்லது அவனைச் சார்ந்த சமூகத்தின் குற்றமா? என்ற வினா எழுகிறது.

‘தற்கொலை பலவீனத்தின் அடையாளம்’ என சமூகம் கருதுகிறது. ஆனால் தற்கொலை பலவீனத்தின் அடையாளமல்ல, சமூக இயக்கத்தில் அது ஒரு மனநோய் என்கிறது உளவியல் ஆய்வு. தற்கொலை முடிவு பலநாள் யோசனைக்குப் பின் எடுக்கும் ஆழமான முடிவல்ல, பல ஏமாற்றங்கள், தோல்விகள், கூடிவாழும் சமூகத்தின் மதிப்பில் நாம் பின் தங்கிவிட்டோம் என்ற தாழ்வு மனப்பான்மை தனக்கு மட்டிலுமே நடக்கிறது என்ற எண்ணம், விரக்தி மனப்பான்மை, சுற்றுச் சூழல் எல்லாம் சேர்ந்து தரும் நெருக்கடியே அந்த முடிவெடுக்க காரணங்களாகின்றன.

நமது கலாசாரம் விவசாயம் சார்ந்த கூட்டுக் குடும்ப முறை வாழ்க்கையாகும். அதில் நல்லது கெட்டது எது நடந்தாலும் அதைப் பேசி நெறிப்படுத்த வயதில் மூத்த உறவு முறையில் ஒருவர் இருப்பார். மேலை நாட்டு நாகரிகத்தைப் போல தனிக் குடித்தனமாகவும், விவசாயம் குறைந்து வேலைக்காக வெளியூர் சென்று தனிக்குடும்பமாக வாழும் சூழலில், மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வதைப் போல், ஏமாற்றங்களைப் பகிர்ந்து கொள்வதை அவமானமாக கருதி, அவர்களுக்குள்ளே அடக்கி கொள்வதால் மனஅழுத்தம் எல்லை மீறிப்போய் தற்கொலையில் முடிகிறது. இதைத்தவிர தகாத உறவுகள், போதைப் பழக்கம், வேலையின்மை, காதல் தோல்வி, மீளாக்கடன் எனப் பல காரணங்கள் தக்க ஆலோசனையின்றி தற்கொலை முடிவெடுக்க தூண்டுகின்றன.

குழந்தை வளர்ப்பின்போது விரும்பியதையெல்லாம் வாங்கி கொடுத்து பழக்கி விட்டு வளர்ந்த பின், வாழ்க்கையில் ஏமாற்றம் வரும்போது எதிர்கொள்ளும் திராணியற்றுப் போகிறது. உடல் நலத்தைப் பேணுவது போல, மனவளத்தையும் பாதுகாக்க குழந்தைப் பருவத்திலிருந்தே பயிற்றுவிக்க பெற்றோர் முயல வேண்டும். படிப்புடன், நீச்சல், யோகா, தியானம், விளையாட்டு, உடற் பயிற்சி, நல்ல புத்தகங்களைப் படிப்பது, நல்ல நண்பர்களுடன் சேர்வது, குடும்பத்தினரிடையே மனம் விட்டு உரையாடுவது என இளமைப்பருவத்திலே பயிற்றுவித்தால் மனவளம் பெருகி தன்னம்பிக்கை மேம்படும்.

அதை விட்டு எதிர்கால தங்கள் பாதுகாப்பிற்காக குழந்தைகளை சிறைக் கைதிகள்போல் நடத்தினால், எதிர்மறை விளைவுகளே ஏற்படும். சிலர் தன்னுடைய வாழ்க்கையை பிறருக்கு இணையாக வாழ நினைத்து மேற்கொள்ளும் போலி வாழ்க்கையால் ஏற்படும் ஏமாற்றங்களை ஏற்கும் மனப்பக்குவம் இல்லாமல் தற்கொலை முடிவெடுக்கிறார்கள்.

நிறைய காரணங்கள் இருந்தாலும், எண்ணற்ற ஆலயங்கள் நிறைந்த நம் நாட்டில், தமக்கு ஏற்பட்ட குறைகள், இயலாமையை இறைவனிடம் முறையிட்டு மனதை ஆற்றுப்படுத்தி சமன் செய்து கொள்ளும் வழியை நம் முன்னோர்கள் கற்றுக் கொடுத்ததை பின்பற்றாது போனதும் ஒரு காரணமாக இருக்கலாம். மனவளம் காத்து மனிதநேயம் பெருக்கி வாழ்ந்தால் வாழ்வில் உயர்வும் தன்னம்பிக்கையும் தானே வளரும். ‘மனம் என்பது ஒரு மாயப் பிசாசு’ அதை அடக்கி நிர்வகிக்கும் வல்லமையை ஒருவர் அடையும் போது தற்கொலை எண்ணம் தானே மறையும்!

கே.சுப்ரமணியன், வக்கீல், ஐகோர்ட்டு, சென்னை.
Tags:    

Similar News