லைஃப்ஸ்டைல்
பெண்கள் வணிக போட்டியை சமாளிப்பது எப்படி?

பெண்கள் வணிக போட்டியை சமாளிப்பது எப்படி?

Published On 2020-02-19 02:50 GMT   |   Update On 2020-02-19 02:50 GMT
இன்றைய தினம் அதிவேகமாக மாறி வரும் தொழிற்சாலைகளும், நிறுவனங்களும் உலக தரத்திற்கு ஏற்றவாறு அவர்களது பணியாளர்களின் திறனை மேம்படுத்தாவிட்டால் வணிக போட்டியை சமாளிக்க முடியாமல் போய்விடும்.
இன்றைய தினம் அதிவேகமாக மாறி வரும் தொழிற்சாலைகளும், நிறுவனங்களும் உலக தரத்திற்கு ஏற்றவாறு அவர்களது பணியாளர்களின் திறனை மேம்படுத்தாவிட்டால் வணிக போட்டியை சமாளிக்க முடியாமல் போய்விடும். அதனால் அந்தந்த நிறுவனங்களின் சூழலுக்கேற்ப பணியாளர்களுக்கு பயிற்சி அளிப்பது அவசியமாகும்.

ஒரு தனி மனிதனிடம் என்னென்ன திறன்கள் உள்ளன என்பதை உளவியல் ரீதியாக ஆராய்ச்சி செய்ய வேண்டும். ஒரு நிறுவனத்திற்கு தேவையான பணியாட்களை தேர்ந்தெடுப்பதாக வைத்துக்கொள்வோம். பணியாளர்களை தேர்ந்தெடுக்கும் பொறுப்பை மனித உரிமைகள் பிரிவிடம் ஒப்படைப்பார்கள். அந்த குழு, பணியாளரிடம் உளவியல் ரீதியாக சில பரிசோதனைகளை செய்யும். எழுத்துதேர்வு, தனியாக கலந்துரையாடல், நேர்காணல் போன்றவை நடத்துவார்கள்.

தேர்வு எப்படிப்பட்டதாக இருக்கும் என்றால், ஒருவருடைய குணாதிசயங்களை சோதிப்பதாக இருக்கும். ஆற்றலை காணுவதாக இருக்கும். அதாவது எந்த மாதிரியான பணிக்கு அவரை தேர்ந்தெடுக்கிறோமோ அதற்கேற்ற குண நலன்கள் மற்றும் ஆற்றல் இருக்கிறதா என்பதை அறிந்து கொள்ளும் வகையில் கேள்விகள் கேட்கப்பட்டிருக்கும்.

சந்தைப்படுத்தும் பிரிவுக்கு ஆட்களை தேர்ந்தெடுப்பதாக வைத்துக்கொள்வோம். அழகாக பேசக்கூடியவராக இருக்க வேண்டும். கோபப்படாதவராக இருக்க வேண்டும். திரும்ப திரும்ப ஒருவரை சந்திப்பதற்கு சோர்வடையாதவராக இருக்க வேண்டும். ஆராய்ச்சி பிரிவுக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர் வெளியில் செல்லாதவராகவும், பொறுமையானவராகவும் இருக்க வேண்டும். இதையெல்லாம் மனதில் கொண்டு தான் கேள்விகள் அமைக்கப்பட்டிருக்கும்.

இதில் வெற்றி பெற்றால் மட்டுமே மற்ற சோதனைக்கு தகுதி பெறுவார்கள். அவர்களுக்கு அறிமுக பயிற்சி அளிக்கப்படும். அறிமுகப்பயிற்சி என்பது அந்த நிறுவனம் பற்றியும், அந்த நிறுவனத்தின் உற்பத்தி அல்லது சேவையை பற்றியும் விளக்கப்படும். ஒரு நிறுவனத்தின் பணித்திறனை மேம்படுத்தபின்வரும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

முதலில் ஆளுமையை வளர்த்துக்கொள்வது எப்படி? என்பதற்கான பயிற்சியை கொடுக்க வேண்டும். குழு மனப்பான்மையை உருவாக்க வேண்டும். அதனால் நிறுவனம் எந்த மாதிரியான பயனை அடையும் என்பதையும் தெரியப்படுத்த வேண்டும்.

அவர் அந்த பணிக்கு தகுதியானவர் தான் என்ற நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும். பணியை நிறைவேற்ற பணியாளர்களுக்கு முழுமையான சுதந்திரம் கொடுக்க வேண்டும். பணியாளர்கள் ஒன்று சேர்ந்து புதியதாக ஒரு உத்தியை கையாளுகிறார்கள் அல்லது கடைப்பிடிக்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். அது தோல்வியில் முடிந்து விட்டால் அதற்காக நிர்வாகம் வருத்தப்படவோ அல்லது எதிர் நடவடிக்கையோ எடுக்க கூடாது. மீண்டும் வாய்ப்பு கொடுக்க வேண்டும். புதியனவற்றை உள்வாங்கி பயிற்சி கொடுக்க வேண்டும்.

உதாரணமாக மனித ஆற்றலுக்கு பதிலாக எந்திர ஆற்றல் பயன்படுத்தினால் அதிகமாக உற்பத்தி செய்ய முடியும். அல்லது கூடுதல் பயன் கிடைக்கும் என்று தெரிந்தால், அந்த புதிய நுட்பத்தை உள்வாங்கிக்கொள்ள பணியாளர்களுக்கு பயிற்சி கொடுக்க வேண்டும். பணியாளர்களிடம் மாற்றத்தை ஏற்படுத்துவது அவ்வளவு எளிதானதல்ல. ஆனாலும் மாற்றத்தை வரவேற்க வைக்க வேண்டும்.

வங்கித்துறையில் கணிப்பொறி புகுத்துவதை முதலில் அங்குள்ள பணியாளர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. அவர்களுக்கு பயிற்சியின் மூலமாக புரிய வைக்கப்பட்டது. இப்போது அவர்களது பணி எவ்வளவு எளிதாகி உள்ளது என்பதை உணர்ந்துள்ளனர்.

நிர்வாகத்திற்கும், பணியாளருக்கும் தொடர்பியல் திறன் இருக்க வேண்டும். அதாவது ஒரு நிறுவனத்தில் ஆண்டுக்கு 400 பொருள் உற்பத்தி செய்யப்படுகிறது. அடுத்த ஆண்டு 410 பொருள்களை உற்பத்தி செய்ய வேண்டும் என்று நிர்வாகம் நினைக்கிறது. உடனே முதன்மை பணியாளர்களை அழைத்து ஆலோசிக்க வேண்டும். அப்போது தான், பணியாளர்கள் அதற்கு என்ன செய்ய வேண்டும் என்று சிந்திப்பார்கள். நிர்வாகம், பணியாளர்களுடன் ஆலோசனை மேற்கொள்ளவில்லை என்றால் உற்பத்தி திறன் தொடர்பாக எழும் சிக்கல்கள் புரியாமலேயே போய்விடும்.

பணியாளர்கள் சொல்வதை நிர்வாகம் அங்கீகரிக்க வேண்டும். பணியாளர் சொல்லும் கருத்தில் நிர்வாகத்திற்கு உடன்பாடு இல்லாமல் இருக்கலாம். உடனே மறுத்துவிடக்கூடாது. முதலில் அவருடைய கருத்துக்கு உரிய அங்கீகாரத்தை வழங்கிவிட வேண்டும். பின்னர் மென்மையாக மறுக்கலாம். இந்த உத்தியை பின்பற்றுவதனால் பணியாளர்களிடம் இருந்து நிறைய பயனுள்ள கருத்துக்கள் அல்லது உத்திகள் நிர்வாகத்திற்கு கிடைக்கும்.

சிறு மற்றும் குறுந்தொழில்கள், வணிகர்களுக்கு பணியாட்கள் கிடைப்பதில்லை. கிடைத்த ஆட்களை பயன்படுத்த வேண்டியுள்ளது. இதை சமாளிக்க வேண்டும் என்றால், கிடைக்கிற பணியாட்களுக்கு வேலையை கற்றுக்கொடுத்து, தேவையான பயிற்சி அளித்து தம்முடைய தேவையை பயன்படுத்திக்கொள்வது தான் நல்லது. இரண்டாவதாக அந்த பணியாளரை பல பணிகளை செய்யக்கூடிய பல்திறன் உள்ளவராக உருவாக்கி கொள்ளலாம். அடுத்ததாக கிடைக்கிற பணியாளரை அரவணைத்து வைத்துக்கொள்வது மேலாளர் கையில் உள்ளது. மேலாளருக்கு என்ற சில குணநலன்கள் உள்ளன. அவை இருந்தால் மட்டுமே நம்பகத்தன்மையான பணியாளர்களையும், நேரம் பார்க்காமல் வேலை பார்க்கக்கூடிய பணியாளர்களையும் பெற முடியும். இதன்மூலம் வணிக போட்டியை சமாளிக்கலாம்.
Tags:    

Similar News