லைஃப்ஸ்டைல்
உயர்ந்த எண்ணமே நல்வாழ்வை தரும்

உயர்ந்த எண்ணமே நல்வாழ்வை தரும்

Published On 2020-02-17 02:40 GMT   |   Update On 2020-02-17 02:40 GMT
சக மனிதனைக் கண்டு மகிழும் உள்ளமோ, இன்ப துன்பங்களைப் பகிர்ந்து கொள்ளுதலோ இல்லாமல் தனியொரு உலகில் சிந்தனைகளோடு பயணிக்கும் உலகமாக மாறி விட்டது.
உலகின் மிகச் சிறந்த வைரம் நம்மிடம் தோன்றும் எண்ணங்களே.. எங்கு பார்த்தாலும் மனித மனங்களில் ஏதேதோ எண்ணங்கள்.. பார்க்கும் மனித முகங்கள் எல்லாம் சிந்தனைவயப்பட்டதாகவே தோன்றுகிறது. இறுக்கமான மனிதர்களாகவும், எந்திர கதியான மனிதர்களாகவுமே தென்படுகின்றனர். எண்ணக் குவியல்களின் கலவைகளையும், சிந்தனை ரேகைகளையும் கொண்ட மக்கள் கூட்டத்தைக் காணும் திசையெல்லாம் பார்க்க முடிகிறது.

சக மனிதனைக் கண்டு மகிழும் உள்ளமோ, இன்ப துன்பங்களைப் பகிர்ந்து கொள்ளுதலோ இல்லாமல் தனியொரு உலகில் சிந்தனைகளோடு பயணிக்கும் உலகமாக மாறி விட்டது. இதற்கெல்லாம் அடிப்படை யாதென்று சிந்தித்தால் அவரவருக்கான தனிப்பட்ட எண்ணங்களே ஆகும்.எண்ண ஓட்டங்கள் தவறாக இருக்கும் போது அங்கே வாழ்வியல் நெறிகளில் மாற்றம் ஏற்படுகிறது. மனித நடத்தை மாறுபாடுகளை மாற்றி அமைக்கும் வல்லமை எண்ணங்களுக்கே உண்டு என்பதை மறுப்பதற்கில்லை.

பூமியில் இருப்பதும், வானத்தில் பறப்பதும் அவரவர் எண்ணங்களே. இருக்குமிடம் எதுவோ நினைக்குமிடம் பெரிதுபோய் வரும் உயரமும் புதுப்புது உலகமும் அவரவர்உள்ளங்களே... என்றார் கவிஞர் கண்ணதாசன். நமது எண்ணங்களே நம்மை உருவாக்குகின்றன. இந்த எண்ணங்கள் நமக்கானதாக மட்டுமே இல்லாமல் பிறரை சார்ந்தும் அமைகிறது. கிராமங்களில் ஒரு பழமொழி சொல்லப்படுவதுண்டு.‘வெட்கத்திற்கு அஞ்சி எருமை மாட்டை சாக கொடுத்தானாம்’ என்று.

பிறரின் எண்ணங்களுக்காகவே பயந்து வாழும் மனிதர்கள் ஒரு வகை. அடுத்தவர் முன் தான் மேதாவி தனத்தை காட்டும் மனிதர்கள் மற்றொரு வகை. ஆக இவை எல்லாவற்றிலும் அடங்கியிருப்பது எண்ணங்களே. எண்ணிய முடிதல் வேண்டுமென ஆசைப்பட்ட பாரதியே அடுத்த வரியாக நினைவு நல்லது வேண்டும் என்கிறான். எண்ணங்களே செயலை தீர்மானிக்கின்றன. எண்ணங்களுக்கு வலிமை உண்டு. அதனால் தான் எண்ணம் போல வாழ்வு என்றும், எதை நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய் என்றும் கூறப்பட்டு வருகிறது.

ஆனால் இந்த எண்ணங்களை நாம் எப்படி கையாளுகிறோம் என்பதிலேயே வாழ்வின் சூட்சுமம் அடங்கி உள்ளது. உள்ளத்தனையது உயர்வாக வேண்டுமெனில் உயர்ந்த எண்ணங்களை எண்ண வேண்டும். பூ கொடுக்க வரும் பெண்மணியிடம் ‘பூ வேண்டாம்’ என்று சொல்வதை விரும்பமாட்டார். ‘நாளை வாங்கி கொள்கிறேன்’ என்று சொல்ல வேண்டும். இதுவே நேர்மறை எண்ணம். என்னால் முடியாது என்று எண்ணும் எண்ணம் எதிர்மறையான எண்ணமாக உருமாற்றமடைகிறது. பெரும்பாலான மனிதர்களிடம் தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்துவதும் இத்தகைய எதிர்மறை எண்ணங்களே.

இத்தகைய எதிர்மறையாளர்களிடம் பழகும் போது, நமக்கும் அத்தகைய எண்ணங்கள் நம்மை அறியாமல் புகுந்து விடுகிறது. இதுதான் எண்ணங்களின் வலிமை. உன் நண்பன் யாரென்று சொல். நீ யாரென்று சொல்கிறேன் என்ற பழமொழியின் பின்புலம் இது தான். உனக்குள்ளே எல்லா ஆற்றல்களும் அடங்கியுள்ளது. நீ உன்னை வலிமை வாய்ந்தவன் என்று எண்ணினால் வலிமை படைத்தவனாகவே ஆகிறாய். இது வீரத்துறவியின் வார்த்தைகள். மனிதனின் எண்ணம் நம்பிக்கையாக வேர் விடும் போது அசாதரண சக்தி பெறுகிறது.

ஒவ்வொரு நாளும் வெற்றிக்கான நாளாகும் என்ற நல்ல சிந்தனையை மனதில் உருவேற்றிக் கொள்ள வேண்டும். நம்மை ஊக்கப்படுத்தி முன்னேற்றுபவை நம்மிடம் உள்ள எண்ணங்களே. ஆக்கப்பூர்வமான எண்ணங்களை அதிகப்படுத்துதலே வெற்றிக்கான வழியாகும். எதை நம் ஆழ் மனம் எண்ணுகிறதோ அதையே நம் செயல்களும் பிரதிபலிக்கின்றன. சபாஷ் நல்லா பண்ற, அசத்தல், பிரமாதம், ஆகா அருமை.. இது போன்ற வார்த்தைகள் எல்லாம் மற்றவர்களிடமிருந்து வர வேண்டும் என்று எதிர்பார்க்காமல் நம்மிடமிருந்து நமக்காக வர வேண்டும். அகத்தில் தேவையற்ற குப்பைகளை தவிர்த்தாலே முகத்தில் புன்னகை வந்து விடும். ஒவ்வொரு நாளும் நாம் என்ன நினைக்கிறோமோ அதுவாகத் தான் இருக்கிறோம்.

அப்படியானால் நம் எண்ணங்களும் அதை பற்றியதாகவே இருக்க வேண்டும். நம் இலக்குகளை பற்றிய எண்ணங்களை சுற்றி சுற்றி ஓட விடுங்கள். எண்ணங்களுக்கு ஆதரவாய் இருப்பது அடுத்தவர்கள் அல்ல.. ஆழ்மனம் தான். எத்தனை கோடி இன்பம்வைத்தாய் இறைவா... என்னும் பாரதியின் நேர்மறை சிந்தனையே எண்ணங்களை வலுவாக்கும். நடப்பதெல்லாம் நன்மைக்கே என்று நினைத்தலும், எதையும் இலகுவாக கடந்து விடும் பக்குவமும் வந்து விட்டாலே வாழ்க்கையை அழகாக வாழ்ந்திடலாம். எனவே நல்ல எண்ணங்களால் வாழ்வை வசந்தமாக்கலாம் என்பதை அனைவரும் உணர வேண்டும்.

சிவநேசன், 12-ம் வகுப்பு, அரசு மேல்நிலைப்பள்ளி, சிவகங்கை.
Tags:    

Similar News