லைஃப்ஸ்டைல்
சாலை விதிகளை கடைபிடிப்போம்

சாலை விதிகளை கடைபிடிப்போம்

Published On 2020-01-20 02:57 GMT   |   Update On 2020-01-20 02:57 GMT
இந்தியாவில் அதிகமாக சாலை விபத்துகளும், உயிரிழப்புகளும் ஏற்படுவதற்கு காரணம், சாலை விதிகள் குறித்த அறியாமையும், விதிகளை மதிக்க தவறும் மனப்போக்குமே ஆகும்.
‘எட்டுத்திக்கும் சென்றிடுவீர், கலைச் செல்வங்கள் யாவையும் கொணர்ந்திங்கு சேர்த்திடுவீர்‘ என்று மகாகவி பாரதியார் தேடலை தொடங்கி வைத்தார். வாஸ்கோடாகாமா, இந்திய தீபகற்பத்தை கடற்பயணம் மூலம் கண்டறிந்த காலத்தில் இருந்தே பயணங்கள் தொடர்கின்றன. ஒருவர் குடும்ப நிமித்தம், பணி நிமித்தம் காரணமாக சென்னை சென்றால் அது பயணமாகிறது. அதுவே, வடபழனி முருகன் கோவிலுக்கோ, சாந்தோம் தேவாலயத்துக்கோ சென்றால் அது யாத்திரையாகிறது. அதுவே, மெரினா கடற்கரை, கோல்டன் பீச்சை பார்க்க சென்றால் உல்லாச பயணமாகிறது. இத்தகைய பலதரப்பட்ட பயணங்களில் உற்சாகம் கூடினாலும், செல்லும் வாகனங்களின் வேகம் கூடும் போதும் விபத்துகள் தவிர்க்க முடியாததாகிறது.

கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்னர் போக்குவரத்தும், சாலை வசதிகளும் குறைந்திருந்தன. இதனால் போக்குவரத்து நெரிசல் கிடையாது. விபத்துகளும் குறைந்திருந்தன. நாளடைவில் சாலை வசதிகளும், வாகனங்களும் பெருகின. 1951-ல் இந்தியாவில் 0.3 மில்லியனாக இருந்த வாகனங்கள் 2016-ம் ஆண்டு 230 மில்லியனாக உயர்ந்தது. 1951-ல் 3 லட்சம் கி.மீட்டராக இருந்த சாலைகளின் நீளம் 2016-ம் ஆண்டு 56 லட்சம் கி.மீட்டராக உயர்ந்துள்ளது. இத்தகைய வசதிகள் காரணமாக விபத்துகளும், உயிரிழப்புகளும் உயர்ந்து கொண்டே வருகின்றன. மேலை நாடுகளை ஒப்பிடும் போது இந்தியாவில் சாலை விபத்துகளில் உயிரிழப்பவர்கள் அதிகம் என்கிறது ஒரு புள்ளி விவரம்.

இந்தியாவில் அதிகமாக சாலை விபத்துகளும், உயிரிழப்புகளும் ஏற்படுவதற்கு காரணம், சாலை விதிகள் குறித்த அறியாமையும், விதிகளை மதிக்க தவறும் மனப்போக்குமே ஆகும். சாலைகளில் சிவப்பு விளக்குகளை மீறி வாகனம் ஓட்டுதல், சரக்கு வாகனங்களில் அதிக பாரம் ஏற்றுதல், சரக்கு வாகனங்களில் பயணிகளை ஏற்றுதல், அதிவேக பயணம், மது மற்றும் போதை பொருட்கள் உட்கொண்டு வாகனம் ஓட்டுதல், அலைபேசியில் பேசியபடி வாகனம் ஓட்டுதல் ஆகிய 6 வகையான சாலை விதி மீறல்கள் கண்டிக்கத்தக்க குற்றமெனவும், அதனை மீறும் ஓட்டுனர்களின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்திடல் வேண்டுமெனவும் உச்சநீதி மன்றம் கூறியுள்ளது.

இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் கட்டாயம் தலைக் கவசம், காரில் செல்பவர்கள் சீட் பெல்ட் அணிய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு சாலை விதிமுறைகளை வாகன ஓட்டுனர்கள் கடைபிடிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகின்றன. இருந்தாலும் விபத்துகள் அதிகரித்து கொண்டு தான் இருக்கின்றன. ஆகவே, விபத்துகளை தவிர்க்க சாலை விதிகளை அனைவரும் கடை பிடிப்போம். மாணவ சமுதாயத்தை சேர்ந்த நாமும் சாலை விதிமுறைகளை மற்றவர்களுக்கு எடுத்து கூறுவோம். இதுதொடர்பாக நடைபெறும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் தவறாமல் பங்கு பெறுவோம்.

மு.துர்க்காதேவி , பி.ஏ.ஆங்கிலம்( 2-ம் ஆண்டு),

அரசு கலைக்கல்லூரி, குளித்தலை, கரூர்.
Tags:    

Similar News