லைஃப்ஸ்டைல்
போலி தகவல்களும்... வலைத்தளங்களும்...

போலி தகவல்களும்... வலைத்தளங்களும்...

Published On 2020-01-09 03:05 GMT   |   Update On 2020-01-09 03:05 GMT
சமூகவலைத்தளங்களால் நல்ல தகவல்கள் கிடைத்தாலும், அதே அளவுக்கு தீமை தரும் தகவல்களும் வந்து சேர்கின்றன என்ற கூற்றை மறுப்பதற்கில்லை...!
சமூக வலைத்தள நிறுவனங்களின் கட்டுப்பாட்டுக்குள் உலகம் இழுக்கப்பட்டு வருவதன் வலுவான அறிகுறிகள் வெளிப்படும் தருணம் இது. இங்கிலாந்தைச் சேர்ந்த மாலி ரஸ்ஸலின் என்ற 14 வயது சிறுமி 2017-ல் தற்கொலை செய்துகொண்டார். இதை விசாரித்துவந்த காவல்துறை, சமூக வலைத்தளங்களின் கறுப்புப் பக்கத்தை உலகின் கவனத்துக்குக் கொண்டுவந்தது.

பல சமூக வலைத்தளங்களில் சிறுமி மாலி இயங்கியுள்ளார். விசாரணைக்காக அவருடைய சமூக வலைத்தளக் கணக்குகளைத் திறந்து பார்த்த காவல்துறை, மாலி மன அழுத்தம் தரக்கூடிய, தற்கொலைக்குத் தூண்டக்கூடிய பல தகவல்களை சமூக வலைத்தளங்கள் வழியாக நாள்தோறும் பெற்றிருக்கிறார் என்பது தெரியவந்தது. உலகம் முழுவதும் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தும் குழந்தைகளை பற்றியும், மிக மோசமான தகவல்களையும் சமூக வலைத்தளங்கள் எவ்வளவு எளிதாகக் கொண்டு வந்து சேர்க்கின்றன என்பதும் மிகப் பெரிய விவாதமானது.

சமூக வலைத்தளங்களில் பரவி வரும் ‘போலிச் செய்தி’களைப் பற்றி ஆய்வுசெய்து இங்கிலாந்து நாடாளுமன்ற சிறப்புக் குழு அறிக்கை தாக்கல்செய்தது.

சமூக வலைத்தளங்களை ‘டிஜிட்டல் கேங்க்ஸ்டர்’ என்று அந்த அறிக்கை மிகச் சுருக்கமாக விமர்சித்தது. உலகில் உலவும் 90 சதவீதப் போலி செய்திகளை உருவாக்குவதே இந்த சமூக வலைத்தளங்கள்தான் என்றும் அந்த அறிக்கை எச்சரிக்கிறது.

ஸ்மார்ட்போன், இணையம், சமூக வலைத்தளங்கள் ஆகியவற்றை சிறார், பதின் வயதினர் பயன்படுத்துவதை பற்றி பல புதிய ஆய்வுகள் வெளியாகி அதிர்ச்சி அளித்தன. உகாண்டாவில் சமூக வலைத்தளங்களை பயன்படுத்தும் மக்களுக்கு அரசு அதிரடியாக வரி விதித்தது. இதனால் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதை பலர் நிறுத்தினார்கள்.

நீல திமிங்கல விளையாட்டு, சிறுவர்களை தற்கொலைக்கு தூண்டுவதாக வந்த தகவல் பெற்றோர்களை கவலைகொள்ள வைத்தது. நியூசிலாந்தில் மசூதிக்குள் புகுந்த ஒரு பயங்கரவாதி, காண்போரை துப்பாக்கியால் சுடும் காட்சியை பேஸ்புக் நேரலையில் பதிவிட்டார். அந்த கொலை செயலின் அதிர்ச்சி அடங்கினாலும், பேஸ்புக் நிறுவனம் அந்தக் காணொலிகளை நீக்குவதில் காட்டிய மெத்தனம் அனைவரின் கண்டனங்களையும் ஒருங்கே பெற்றது. அந்தக் கோர வீடியோ வைரலாகி, பேஸ்புக்கில் இருந்து அதை மொத்தமாக நீக்குவதற்கு பல வாரங்கள் பிடித்தன.

எனவே சமூகவலைத்தளங்களால் நல்ல தகவல்கள் கிடைத்தாலும், அதே அளவுக்கு தீமை தரும் தகவல்களும் வந்து சேர்கின்றன என்ற கூற்றை மறுப்பதற்கில்லை...!

Tags:    

Similar News