லைஃப்ஸ்டைல்
பெண் விவசாயிகளுக்கு அங்கீகாரம் அளிக்க வேண்டும்

பெண் விவசாயிகளுக்கு அங்கீகாரம் அளிக்க வேண்டும்

Published On 2020-01-06 02:19 GMT   |   Update On 2020-01-06 02:19 GMT
தமிழகத்தில் தனியாக வாழும், வாழ்வாதாரம் தேவைப்படும் பெண்களின் எண்ணிக்கை அதிகம். அவர்கள் விவசாயம் செய்ய, முடிவுகளை எடுக்க, நிலம் தேவைப்படுகிறது.
விவசாயம் சம்பந்தப்பட்ட ஏறக்குறைய அனைத்து பணிகளையும் பெண் விவசாயிகள் முழுமையாக செய்து வரும் நிலையில்,

கிராமப்புற

பொருளாதாரத்தில்

அவர்களுக்கான இடம் குறைந்து வருகிறது.

விவசாயத்தை ‘ஆண்மையப்படுத்துதல்’ என்று செயல்பாட்டாளர்களினால் விவரிக்கப்படும் போக்குகளினால், நில உரிமையை அடிப்படையாக கொண்டுள்ள இந்த கிராமப் பொருளாதாரத்தில் இருந்து பெண்கள் வெளியேற்றப்படுவது அதிகரித்து வருகிறது.

இது பல முனைகளில் நடந்து வருகிறது; சுமார் 74 சதவீத கிராமப்புற பெண்கள் விவசாயத்தில் ஈடுபட்டிருந்தாலும், அவர்களில் 12 சதவீதத்தினரின் பெயர்களில் மட்டுமே நிலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழக பெண் விவசாயிகள் உரிமைகளுக்கான கூட்டமைப்பு நடத்திய ஆய்வு கூறுகிறது. தமிழ்நாட்டில் 3.15 லட்சம் பெண்கள் விவசாயத்தில் (விவசாய பணிகளையும் சேர்த்து) ஈடுபட்டுள்ளதாக விவசாய கணக்கெடுப்பு கூறுகிறது.

எந்த பயிர்களை, எந்த முறையில் பயிர் செய்ய வேண்டும் போன்ற விவகாரங்களில் பெரும்பாலும் ஆண்கள்தான் முடிவு செய்கின்றனர். சந்தையில் விதைகளை வாங்க செல்லும் ஆண்கள், விற்பனையாளர்கள் மற்றும் தொழில் துறை சார்ந்த முடிவுகளை எடுப்பதால், முடிவு எடுப்பதில் இருந்து பெண்கள் தற்செயலாக வெளியேற்றப்படுகின்றனர்.

மூன்றாவது வகையான மாற்றத்தையும் செயல்பாட்டாளர்கள் சுட்டுகின்றனர் - விவசாயிகள் உற்பத்தி நிறுவனங்கள் (எப்.பி.சி) புதிய திறன்கள் மற்றும் அறிவை, நிலம் வைத்திருக்கும் ஆண்களுக்கு மட்டும் அளிப்பதால், நில உரிமையாளர்களாக இல்லாமல், விவசாயிகளாக இருக்கும் பெரும்பாலான பெண்களுக்கு இவற்றை அளிக்கப்படாததால், ஆண்களுக்கும், பெண்களுக்கும் உள்ள இடைவெளியை அதிகரிக்க செய்கின்றன.

நிலம் இழப்பு பொதுவாக அதிகரித்து வருவதால், பண்ணைகளின் சராசரி அளவு குறைந்து, அதன் விளைவாக பெண்களுக்கான வேலை வாய்ப்புகள் குறைவதாக, நாட்டின் பல பகுதிகளில் செய்யப்பட்ட நுண் ஆய்வுகள் கூறுகின்றன.

“விவசாய பணிகள் எந்திரமயாக்கப்படுவதாலும் (விதைத்தல் போன்றவை), களைக்கொல்லி பயன்பாட்டினாலும் பெண்களுக்கான வேலை வாய்ப்புகள் குறைந்துள்ளது. நிலமற்ற ஏழை பெண்களுக்கு, கைகளினால் களையெடுத்தல் பணிகள்தான் வருவாய் அளிக்கும் முக்கிய பணியாக இருப்பதால், அவர்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்“ என்று மகிளா கிஸான் அதிகார் மஞ்ச் (எம்.ஏ.கே.ஏ.எம்) அமைப்பை சேர்ந்த கவிதா குருங்கன்டி கூறுகிறார்.

மொத்த தொழிலாளர்களின் எண்ணிக்கையில் பெண்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. விவசாயத்தில் ஈடுபட்டுள்ள பெண்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதே இதற்கு முக்கிய காரணம் என்கிறார். “விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க அரசு திட்டமிட்டிருப்பதால், பெண்களையும் விவசாயிகளாக கருத வேண்டும் என்று அரசாங்கத்திடம் சுட்டிக் காட்டியுள்ளோம். ஆண்களும், பெண்களும் சமமாக நடத்தப்படும் போது, உற்பத்தி திறன் 40 சதவீதம் வரை அதிகரிப்பதாகஆப்பிரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்வுகள் கூறுகின்றன.

நில உரிமை மூலம் பயிர் காப்பீடு, சந்தை கடன்கள் மற்றும் வங்கிச் சேவைகளை பெற முடிகிறது. பெரும்பாலான பெண்கள், குத்தகைக்கு எடுக்கப்பட்ட நிலங்களில் பணி புரிகின்றனர் என்பதால், அரசு சாரா துறையின் ஆதரவுடன் பிழைக்க வேண்டியுள்ளது என்று பெண்கள் உரிமைகளில் கவனம் செலுத்தும் ரூட்ஸ் என்ற நிறுவனத்தை சேர்ந்த கல்பனா சதீஷ் கூறுகிறார்.

அமைப்பு ரீதியான அதிகாரங்களை பெண்கள் அடைவதுதான் அதிக முக்கியமான விஷயம் என்று செயல்பாட்டாளர்கள் கூறுகின்றனர். உதாரணமாக, ஒரு பெண் விவசாயியிடம் சொந்தமாக நிலம் இருந்தாலும், முடிவுகளை அவரே எடுத்தாலும், விற்பனை சந்தையில் அவரால் தனியாக சமாளிக்க முடியாத நிலை உள்ளது. விற்பனை சந்தையில், தாமதம் ஆகும் போது, ஆண்களை போல் அவரால் காத்திருக்க முடியாத நிலை உள்ளது. கலாசார ரீதியான, சமூக ரீதியான தடைகள் பெண்களின் முயற்சிகளுக்கும், கடன் பெறத் தேவையான நம்பகத்தன்மையையும் பாதிக்கிறது என்கின்றனர்.

ஆண்கள் நகர்புறங்களுக்கு வேலை தேடி செல்வதால், விவசாயத்தில் ‘பெண்கள் பங்கு’ அதிகரித்துள்ளதாக, 2018-க்கான பொருளாதார ஆய்வறிக்கை கூறுகிறது. உத்தரகாண்ட் மற்றும் இமாசல பிரதேசத்தில் நடத்தப்பட்ட ஆய்வுகள், பெண்கள் நிலம் வைத்திருப்பது அதிகரித்துள்ளதாக தெரிவிக்கின்றன. தெலுங்கானாவில் பெண்களிடம் உள்ள பயிர் செய்யப்படும் நிலங்களின் அளவு சுமார் 30 சதவீதமாக இருப்பதாக விவசாய கணக்கெடுப்பு கூறுகிறது. அனந்தபூரில் 43 சதவீத நிலங்கள் பெண்கள் வசமுள்ளதாக கவிதா கூறுகிறார்.

தமிழகத்தில் எத்தனை சதவீத நிலங்கள் பெண்கள் வசமுள்ளன என்று அறிய, பாலின ரீதியாக வகைப்படுத்தப்பட்டுள்ள நில ஆவண தரவுகள் இல்லை.

பெண்கள் அனைத்து கட்ட விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தாலும், அவர்களுக்கு, விவசாயிகள் என்ற சட்டபூர்வமான அங்கீகாரம் கிடைப்பதில்லை என்று தமிழக பெண் விவசாயிகள் உரிமைகளுக்கான கூட்டமைப்பு நடத்திய ஆய்வு கூறுகிறது. கறவை மாடுகளை பராமரித்தல், சிறிய அசை போடும் இனங்கள் மற்றும் கோழிகளை பராமரித்தல் (இவை அனைத்தும் கூடுதல் வருவாய் அளிப்பவை) போன்ற பணிகளை செய்தாலும், இவற்றில் இறுதி முடிவெடுக்கும் அதிகாரம் அளிக்கப்படாதவர்கள்.



நிலம்தான், பெண் விவசாயிகள் இன்று எதிர்கொள்ளும் பெரும் சவால் என்று திருநெல்வேலியை சேர்ந்த விவசாயியான பொன்னுத்தாயி கூறுகிறார். “ஆரம்பத்தில் நாங்கள் நிலத்தை குத்தகைக்கு எடுத்து, பயிர் செய்கிறோம். இரண்டு ஆண்டுகளில் அதை சீர் செய்த பின், நில உரிமையாளர்கள் நாங்கள் ஏற்படுத்திய மாற்றங்களை கண்டு, நிலத்தை திரும்பி எடுத்துக் கொள்கின்றனர். இதன் விளைவாக, சில வருடங்கள் எங்களிடம் நிலம் இருக்கிறது. சில வருடங்களில் இருப்பதில்லை’’ என்கிறார்.

“காலியாக உள்ள நிலங்களின் உரிமையாளர்கள் மற்றும் வெளியூர்களில் வசிக்கும் நில உரிமையாளர்களை அணுகி, நிலங்களை பெண்களின் கூட்டமைப்பு களுக்காக, குத்தகைக்கு எடுக்க முயற்சி செய்கிறோம்'' என்று தமிழக பெண்களிடம் கூட்டுறவு விவசாயத்தை ஊக்கப்படுத்தும், தமிழக பெண்கள் கூட்டமைப்பு என்ற அரசு சாரா நிறுவனத்தை சேர்ந்த ஷீலு பிரான்சிஸ் கூறுகிறார். இந்த கூட்டமைப்புகள் நீண்ட கால குத்தகைக்கு நிலங்களை எடுக்க முயற்சிக்கின்றன. அதன் மூலம் நிலத்தை இழக்கும் அச்சமின்றி பணியாற்ற முடியும்.

“விவசாய பணிகளில் ஈடுபட்டுள்ள அனைத்து பெண்களும், பெண் விவசாயிகள் தாம். இதனால் தான் தொழிலாளர்களையும் நாங்கள் விவசாயிகளாக கருதுகிறோம். எங்களின் உறுப்பினர்களில், ஒரு சதவீதத்தினர் தான் நிலம் வைத்திருக்கின்றனர். நிலம் வைத்திருந்தால் மட்டுமே, விவசாயிகள் அட்டை, கிசான் கடன் அட்டைகள், விதைகள் மற்றும் உரங்களை பெற முடியும்'' என்கிறார் ஷீலு.

தமிழகத்தில் தனியாக வாழும், வாழ்வாதாரம் தேவைப்படும் பெண்களின் எண்ணிக்கை அதிகம். அவர்கள் விவசாயம் செய்ய, முடிவுகளை எடுக்க, நிலம் தேவைப்படுகிறது. அவர்கள் என்ன பயிரிட வேண்டும், என்ன அளவு பயிரிட வேண்டும் போன்ற முடிவுகளை எடுக்க, அவர்களின் கலாசார ரீதியான வளர்ப்பு தடுக்கிறது. குடும்பத்தில் இருக்கும் ஆண் உறுப்பினர் சொல்வதை அவர்கள் செய்கின்றனர். “ஆரோக்கியமான விவசாயம், ஆரோக்கியமான உணவுகள், இயற்கை உணவுகள் பற்றியும் அவற்றின் செய்முறை பற்றியும், விதைகள் பாதுகாக்கும் முறைகள் பற்றியும் அவர்களுக்கு நாங்கள் பயிற்சியளிக்கிறோம்’’ என்கிறார் ஷீலு.

கால நிலை மாற்றம், மழை பொழிவின் தன்மைகளை மாற்றியுள்ளது. மழையின் அளவு, விவசாயிகளின் பாரம்பரிய அறிவு ஆகியவற்றையும் பாதித்துள்ளது. இன்று ஆண் மற்றும் பெண் விவசாயிகள் சம நிலையில், புதிதாக கற்க வேண்டிய நிலையில் உள்ளனர்.

கூட்டமைப்பின் உறுப்பினர்கள் இறுதி முடிவுகளை எடுக்கவும், தம் குடும்பங்கள் எடுக்கும் முடிவுகளை பாதிக்கவும் செய்யத் தொடங்கியுள்ளதாக அவர் கூறுகிறார். பல இடங்களில், 25 முதல் 30 பயிர்கள் கொண்ட பல்வகை பயிர் விவசாயத்தை முன்னெடுக்க, தம் குடும்பங்களை ஏற்க செய்துள்ளனர். நில உரிமையாளர்களிடம் குத்தகை மற்றும் வருவாய் பகிர்வு ஒப்பந்தங்களை ஏற்படுத்த பேரம் பேசுவதையும் பெண்கள் முன்னெடுக்கின்றனர்.

சம வாய்ப்புகள் அளிக்க, நிலம் என்பதை சொத்தாக அல்லாமல், வாழ்வாதாரமாக வகை படுத்த வேண்டும் என்கிறார் கல்பனா சதீஷ். இது வெளியூர்களில் வசித்தபடி விவசாயம் செய்யும் முறையை குறைக்கும். தற்போது, பெரிய அளவில் நிலங்களை வைத்திருக்கும் குடும்பங்கள், அதில் விவசாயம் செய்யாமல், அதை சுற்றி கம்பி வேலி அமைத்து, அதை விவசாயமல்லாத இதர செயல்பாடுகளுக்காக அளிக்கின்றனர். இதன் விளைவாக உள்ளூர் தொழிலாளர்கள், வேலை இழப்பையும், விவசாய நிலங்களை குத்தகைக்கு எடுக்க முடியாத நிலையையும் எதிர்கொள்கின்றனர்.

அடுத்ததாக, பெண்களுக்கு நிலம் பகிர்ந்தளிக்கப்படுவதை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும். சுமார் 2.25 லட்சம் ஆண் விவசாயிகள் வேறு வேலைக்கு சென்று விட்டனர்.

தமிழ்நாடு சொத்துரிமை சட்டம், 1989, பெண்களுக்கு, தங்களின் தந்தையின் சொத்தில் பங்கு பெறும் உரிமையை அளித்துள்ளது. வேறு ஒரு கிராமத்தை சேர்ந்தவரை திருமணம் செய்தவுடன், தங்களின் உரிமையை அவர்கள் இழக்கின்றனர். புகுந்த வீட்டிலும், அவர்களுக்கு நிலம் கிடைக்கும் என்ற உத்தரவாதம் எதுவும் இல்லை.

“அதிக அளவில் உள்ள நிலங்களை, மக்கள் டெபாசிட் செய்ய, நில வங்கிகளை ஏற்படுத்தும்படி அரசாங்கத்தை நாங்கள் கேட்கிறோம். இதன் மூலம் இந்த நிலங்களை மற்றவர்கள் குத்தகைக்கு எடுத்து, விவசாயம் செய்ய முடியும்’’ என்கிறார் ஷீலு.

விமர்சனங்களை மின்னஞ்சலில் அனுப்ப:

NRD.thanthi@dt.co.in
Tags:    

Similar News