லைஃப்ஸ்டைல்
பூர்வீக சொத்தில் பெண்களுக்கு பங்கு?

பூர்வீக சொத்தில் பெண்களுக்கு பங்கு?

Published On 2019-12-21 02:58 GMT   |   Update On 2019-12-21 02:58 GMT
சொத்துரிமைகள் பற்றி தெரிந்து கொள்ளும் முன்பு சொத்துகளின் வகைகளையும், அவற்றின் விளக்கங்களையும் ஓரளவு அறிந்து கொள்ளுதல் அவசியம்.
சொத்துரிமைகள் பற்றி தெரிந்து கொள்ளும் முன்பு சொத்துகளின் வகைகளையும், அவற்றின் விளக்கங்களையும் ஓரளவு அறிந்து கொள்ளுதல் அவசியம். பாட்டன், முப்பாட்டன் வழி வந்த சொத்துகளே பூர்வீக சொத்துகள்.

அதைத்தான் பூர்வீக சொத்துகள் என்று சட்டம் சொல்கிறது. ஆனால் ஒருவர் தன் சுய சம்பாத்தியத்தில் அவரது வாழ்நாளில் வாங்கிய சொத்துகளை தனிப்பட்ட சொத்தாக உரிமை கொண்டாடவும், அவர் விருப்பப்படி அனுபவிக்கவும், சுய விருப்பத்தின் பேரில் தன் சொந்தங்களுக்கு எழுதி வைக்கவும் முழு உரிமை உண்டு என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். அதையே தனிப்பட்ட சொத்தாக சட்டம் வரையறுக்கிறது.

பூர்வீக சொத்துகளை மட்டுமே பாகப்பிரிவினை செய்ய இயலும். ஒருவர் சுய சம்பாத்தியத்தில் வாங்கிய தனிப்பட்ட சொத்துகளின் பெயரில் எவரும் உரிமை கொண்டாட இயலாது. அவரின் தனிப்பட்ட விருப்பத்தையே சாரும். எவரும், எதற்காகவும் அதை கட்டுப்படுத்த இயலாது. அவரின் விருப்பப்படி விலைக்கு விற்கலாம். தானமாக தரலாம். எவருக்கும் உயில் எழுதலாம்.

ஒரு ஆண் மகனுக்கு எப்படியெல்லாம் பூர்வீக சொத்தில் உரிமை உள்ளதோ அதன் படியே பெண்ணுக்கும் உரிமை உண்டு. அவற்றில் 2 முக்கிய விதிமுறைகளையும் சட்டம் அருமையாக சொல்கிறது.

2005-ம் ஆண்டின் இந்து வாரிசு உரிமை சட்டம் அமலுக்கு வருவதற்கு முன்பு சொத்தை பாகப்பிரிவினை செய்திருக்கக் கூடாது. பெண்கள் உரிமை கொண்டாட நினைக்கும் சொத்தை அவரது தந்தை 2005-க்கு முன்பு வேறொருவருக்கு விற்பனை செய்திருந்தால் அதில் பெண்கள் பாகமோ, உரிமையோ கோர முடியாது. இந்து வாரிசு உரிமை சட்டத்தின்படி, இது இந்துக்களுக்கு மட்டுமே பொருந்தும். மற்ற மதத்தினருக்கு வித்தியாசப்படும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். திருமணமான ஆணின் சொத்துக்கு உரிமை மனைவி, மக்கள், தாய். திருமணமான பெண்ணின் சொத்துக்கு உரிமை கணவன், பிள்ளைகள்.

திருமணமாகாத ஆணின் சொத்துக்கு உரிமை பெற்றோர். திருமணமாகாத பெண்ணின் சொத்துக்கு உரிமை பெற்றோர். பெற்றோர்கள் இல்லையென்றால் இரு தரப்புக்குமே சகோதர சகோதரிகள் சொத்துக்கு உரிமை கொண்டாடலாம். திருமணம் ஆகிவிட்ட ஓர் ஆணின் மனைவி, மக்கள் இறந்து விட்டால், அவருடைய மகன் அல்லது மகள் வயிற்று வாரிசுகளுக்கு நேரடியாக சொத்துப் போக நேரிடும்.

கணவர் இறப்பிற்கு அவரது மனைவியே காரணம் என்று சட்டத்தின் மூலம் நிரூபிக்கப்பட்டாலோ அல்லது கணவரது மரண வழக்கில் மனைவி சம்பந்தப்பட்டு இருந்தாலோ மனைவி கணவரது சொத்தில் பங்கு கேட்க முடியாது.

தாத்தா மற்றும் தந்தை சொத்தில் ஆண் வாரிசுகளுக்கு இணையாக பெண்ணுக்கும் உரிமை இருக்கிறது. நிலம், வயல் மற்றும் அசையா சொத்துகளை பெண்களும் பிரித்து கொள்ளலாம். ஆனாலும் பாரம்பரியமாக இருக்கும் வீட்டை சகோதரன் விரும்பும் வரை அவரின் சம்மதமில்லாமல் அதை விற்கவோ, விற்பனை செய்து பணம் கொடுக்க வேண்டும் என்றோ அடம் பிடிக்க முடியாது.

இந்த உரிமைகள் எல்லாம் தனிப்பட்ட முறையில் யாருக்குமே உயிலோ அல்லது பாகப்பிரிவினை செய்து வைக்காமல் இருந்தால் மட்டுமே பொருந்தும். உயில் எழுதி வைத்து விட்டால் உயிலின் தன்மையை பொறுத்துதான் அந்த சொத்துக்களை பிரிக்க முடியும். முன்பே சொன்னது போல உயிலை எத்தனை முறையும் எழுதலாம். மாற்றி அமைக்கலாம். கடைசியாக எழுதிய உயிலே செல்லுபடியாகும். எனவே காலம் கடத்தாது உயில் எழுதுங்கள்.
Tags:    

Similar News