லைஃப்ஸ்டைல்
சொந்த வீடு கனவை நனவாக்குங்கள்

சொந்த வீடு கனவை நனவாக்குங்கள்...

Published On 2019-11-28 03:09 GMT   |   Update On 2019-11-28 03:09 GMT
கட்டுமானப்பொருட்களின் விலைச்சரிவு, வங்கிகளின் வீட்டுக்கடன் மீதான வட்டி குறைவதற்கான வாய்ப்புகள் இருப்பது மற்றும் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் பலன் ஆகியவற்றை பயன்படுத்தி தங்களின் சொந்த வீடு கனவை நிறைவேற்றிக்கொள்ளலாம்.
பொதுவாக, ஒரு துறையில் மூலப்பொருட்களின் விலைச்சரிவு, மற்றொரு துறையின் வளர்ச்சிக்குச் சாதகமாக இருக்கும். எடுத்துக்காட்டாக, சந்தையின் தேவை காரணமாக, ஸ்டீல் தயாரிக்கத் தேவையான மூலப்பொருளான இரும்புத்தாதுவின் விலை படிப்படியாக உயர்ந்து, நினைத்துப்பார்க்க முடியாத அளவுக்கு அதிகமாக இருந்தது. ஆனால், இன்றோ நிலைமை தலைகீழ். இரும்புத்தாதுவின் விலை வெகுவாக குறைந்திருக்கிறது.

சர்வதேச சந்தையில் இரும்பின் விலை குறைந்ததால், உள்நாட்டிலும் குறைக்க வேண்டிய கட்டாயம் இரும்பு தயாரிக்கும் நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் இப்போது வீடு கட்ட நினைப்பவர்களுக்கு நல்ல வாய்ப்பு அமைந்திருக்கிறது.

இந்தியாவின் மொத்த இரும்புத் தேவையில் 55 சதவீதம் என்ற அளவிற்குக் கட்டுமானத் துறையும், 10 சதவீதம் முதல் 15 சதவீதம் வரை வாகனத்துறையும் பூர்த்தி செய்து வருகிறது. அரசாங்கம் கட்டுமானத்துறையை ஊக்குவிக்கப் பல்வேறு திட்டங்களை அறிவித்ததாலும், தனியார் நிறுவனங்களின் பங்களிப்பு இல்லாத காரணத்தாலும், வாகனத்துறையில் ஏற்பட்டுள்ள சரிவு காரணமாகவும் இரும்பின் தேவை குறைந்துள்ளது. இந்த இரண்டு துறைகளுமே, உடனடியாக சகஜநிலைமை திரும்புவதற்கான வாய்ப்புகள் இல்லையென்பதால், இரும்புக்கான தேவை குறைய வாய்ப்பிருக்கிறது.

கட்டுமானத்துறை சார்ந்த பொருட்களின் விலைச்சரிவு நுகர்வோருக்கு அதாவது, சாமானிய மக்களுக்குச் சாதகமான செய்தியாக பார்க்கப் படுகிறது. வீடு கட்டலாம் என்று முடிவு எடுத்துள்ளவர்கள், தற்போதைய சூழ்நிலையை சாதகமாகப் பயன்படுத்தி அழகாக வீடு கட்டத் தொடங்கலாம். கட்டுமானப்பொருட்களின் தற்போதைய விலைக்கும், இந்த வருடத்தின் தொடக்கத்திலிருந்த விலையுடன் ஒப்பிடும்போது, எந்த அளவிற்கு சேமிப்புத் தரக்கூடியதாக இருக்கும் என்பதைப் பார்க்கலாம்.

1000 சதுர அடியில் ஒருவர் வீடு கட்ட முனைகிறார் எனில், மொத்த செலவில் எந்தெந்த துறைக்குத் தோராயமாக செலவுகள் செய்ய வேண்டியிருக்கும், அதில் எந்தத் துறையில் விலைச்சரிவு காணப்படுகிறது என்பதை பார்க்கலாம். ஸ்டீல் 20 சதவீதம், மணல் 20 சதவீதம், ஜல்லி, கிராவல் 8 சதவீதம், பெயின்ட், தரை ஓடுகள் மற்றும் செங்கல் 16 சதவீதம், ஜன்னல், கதவுகள், பிளம்பிங், எலெக்ட்ரிக்கல் 23 சதவீதம் மற்றும் சிமெண்டு ஆகியவை அடங்கும். இந்த செலவுகள், இடத்திற்கு இடம் மாறுபடும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.

கட்டுமானப்பொருட்களின் விலைச்சரிவு, வங்கிகளின் வீட்டுக்கடன் மீதான வட்டி குறைவதற்கான வாய்ப்புகள் இருப்பது மற்றும் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் பலன் ஆகியவற்றை பயன்படுத்தி தங்களின் சொந்த வீடு கனவை நிறைவேற்றிக்கொள்ளலாம்.
Tags:    

Similar News