லைஃப்ஸ்டைல்
பெண்களே அலமாரிகளை சுத்தமாகவும், அழகாகவும் வைத்துக் கொள்வது எப்படி?

பெண்களே அலமாரிகளை சுத்தமாகவும், அழகாகவும் வைத்துக் கொள்வது எப்படி?

Published On 2019-10-19 03:57 GMT   |   Update On 2019-10-19 03:57 GMT
பெரும்பாலான வீடுகளில் துணிகள் வைக்கும் அலமாரிகளை ஒரு குடவுன் போல வைத்திருப்பார்கள். அலமாரிகளைச் சுத்தமாகவும், அழகாகவும் வைத்துக் கொள்வது அவ்வளவு கஷ்டமான வேலையா என்ன?
பெரும்பாலான வீடுகளில் துணிகள் வைக்கும் அலமாரிகளை ஒரு குடவுன் போல வைத்திருப்பார்கள். துணிகலை அடைத்து, அலமாரியின் கதவைத் திறந்த உடனேயே நம் தலையில் துணிகள் மற்றும் வைத்திருக்கும் பொருள்களானது விழுவதுபோல் இருக்கும்.

எப்படி அடுக்கி வைத்தாலும் இப்படி கசகசன்னு ஆகி விடுகிறது என்றும் எப்படித்தான் இப்படி மோசமாக ஆகிறதோ தெரியலை என்பது போன்ற வசனங்களை பெரும்பாலான வீடுகளில் கேட்க முடியும். அலமாரிகளைச் சுத்தமாகவும், அழகாகவும் வைத்துக் கொள்வது அவ்வளவு கஷ்டமான வேலையா என்ன?

துணி வைக்கும் அலமாரியில் நம்முடைய துணிகளை வகைப்படுத்தி அடுக்க வேண்டும். தினப்படி துணிகள் ஒரு ரேக்கிலும், அயர்ன் செய்த துணிகள் ஹேங்கரில் தொங்க விடுவது தனியாகவும், அடுக்கி வைப்பது தனியாகவும் வைத்து விட்டால் துணிகளை எங்கே வைத்தோம் என்று தேட வேண்டிய அவசியமே இருக்காது.

உள்ளாடைகள், கைக்குட்டைகள், சாக்ஸ்கள் போன்றவற்றிற்கும் தனியாக ஒரு ரேக்கை வைத்து விட வேண்டும்.

மாதம் ஒரு முறையாவது அலமாரியில் இருக்கும் மொத்தத் துணிகளையும் எடுத்து விட்டு, அலமாரியைச் சுத்தம் செய்து பின்னர் அடுக்குவது சிறந்தது.

மேல் அலமாரியில் துணியையோ, பொருள்களையோ தனித்தனியாக அடுக்கினால் அவற்றை எடுப்பது சிரமமாக இருக்கும். எனவே பேஸ்கட், அல்லது பெட்டியில் போட்டு அவற்றை மேல் அலமாரியில் வைத்து விட்டால் அவற்றை எடுப்பது எளிதாக இருக்கும்.

சில அலமாரிகளில் ரேக்குகளை அட்ஜஸ்ட் செய்து வைத்து கொள்வது போலும் வடிவமைக்கப்பட்டு வந்துள்ளது. இவை ஸ்லாட்டட் ஆங்கிள் போன்று இருக்கும். இதில் துணிகளைத் தொங்க விடுவதற்குத் தனியாகவும், ஷுக்கள், செப்பல்களை வைத்துக் கொள்ளத் தனியாகவும் ரேக்குகள் இருக்கும்.

ஹேங்கரில் துணிகளைத் தொங்க விடும்போது நீளமான துணிகளை இடது புறமும் குட்டையான துணிகளை வலது புறமும் தொங்க விட்டால் அவை பார்ப்பதற்கு துணிகள் சாய்ந்த கோடு போல் இருப்பதான தோற்றத்தைத் தரும்.

அனைத்து ஹேங்கர்களும் ஒரே டிசைன் மற்றும் அளவில் இருப்பது போல் உபயோகப் படுத்துவதும் தோற்றத்திற்கு அழகைத் தருவதாக இருக்கும்.

ஸ்வெட்டர்கள், ஜீன்ஸ்கள் போன்றவற்றை மடித்து வைத்து உபயோகிக்கும் பொழுது அவை சுருக்கம் ஏற்படாமலும் வடிவம் மாறாமலும் இருக்கும்.

மெல்லியதாகவும், நெகிழ்வாகவும் இருக்கக்கூடிய ஷர்ட்ஸ், லெக்கிங்ஸ் மற்றும் பாலியெஸ்டர் ஷர்ட்ஸ் போன்றவற்றை ரோல் அண்டு டக் நுட்பத்தை பயன்படுத்தி அழகாக ஸ்டோரேஜ் பெட்டியில் அடுக்கலாம். அவை குறைந்த இடத்தில் அதிகத் துணிகளை அடுக்குவதற்கு ஏற்ற அருமையான ஐடியா என்றே சொல்லலாம்.



மிகவும் வழுவழுப்பான துணிகளை ஒன்றன் மேல் ஒன்று அடுக்கும் பொழுது அவை சரிந்து விழுந்துவிடும். எனவே அது போன்ற துணிகளை பாதியாக மடித்துப் பின்பு குழல் போலச் சுருட்டி பிளாஸ்டிக் பின்களில் வைத்து அலமாரிகளில் வைத்துக் கொள்ளலாம்.

நாம் அடிக்கடி உபயோகிக்கும் துணிகளை நம் கண்களுக்குத் தெரியும் உயரத்தில் மற்றும் எடுக்க வசதியாக உள்ள அலமாரி ரேக்குகளில் வைத்தால் அவற்றைக் கண்களில் மூடிக் கொண்டே கூட எடுத்து உபயோகிக்கலாம்.

ஏறத்தாழ ஒரே வண்ணத்தில் இருக்கும் துணிகலை அடுத்தடுத்து தொங்க விட்டால் நம்மிடம் இருக்கும் துணிகளை எளிதாகத் தேர்வு செய்து அணிந்து கொள்ள முடியும்.

டிராயர்களில் தடுப்புகளை ஏற்படுத்தி அதில் உள்ளாடைகள், சாக்ஸ், டை மற்றும் கைக்குட்டைகளை அடுக்கிக் கொள்வதால் துணிக் குவியலிலிருந்து துணிகளைத் தேடி எடுக்க வேண்டிய பதற்றம் இருக்காது.

ஸ்கார்ஃப், ஸ்டோல் மற்றும் ஷால்களை அடுக்கடுக்கான ஹேங்கரில் தொங்க விட்டு அலமாரியை அழகுபடுத்தலாம்.

அலமரியில் உள்ள தேவையற்ற பொருட்கள் மற்றும் துணிமணிகளை அடிக்கடி அப்புறப்படுத்துவது அலமாரியைச் சுத்தமாக வைத்திருக்கும் முதல் டிப்ஸ்.

அலமாரியைச் சுத்தப்படுத்த நினைக்கும் பொழுது நமக்குத் தேவையான பிறருக்கு தானமாகக் கொடுக்கக்கூடியவை, விற்க வேண்டியவை என்று பிரித்து விட்டால் அலமாரி பளிச்சென்றாகி விடும்.

அலமாரி ரேக்குகளை ஈரத்துணியில் துடைத்துக் காற்றாடியபின் பூச்சிகள் அண்டாதவாறு இருக்கும் நாப்தலின் பால்ஸ் மற்றும் வாசனை ஸ்ப்ரேக்களை உபயோகிக்கலாம்.

வேக்யூம் க்ளனர்களைக் கொண்டும் அலமாரிகளைச் சுத்தப்படுத்தலாம். இதனால் இரண்டு இடுக்குகளில் படிந்திருக்கும் மிகவும் நுண்ணிய குப்பைகள் கூட சுத்தமாகி விடும்.

சுத்தமாகவும் ஒழுங்காக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் அலமாரியைத் திறந்து பார்க்கும் பொழுதே மனதிற்குள் மகிழ்ச்சி என்பது நம்மை அறியாமலேயே நம்மைத் தொற்றிக் கொள்ளும். மிகவும் அவசரமாகவும், பதற்றமாகவும் உள்ள நேரங்களில் அலமாரியைத் திறந்து அதில் நாம் தேடும் பொருள் கிடைக்கவில்லை என்றால் இன்னும் எரிச்சலும், கோபமும் வரும். எனவே, இதுபோன்ற பிரச்சினைகளைத் தவிர்க்க மட்டுமல்லாமல், சுத்தமாக வைத்துக் கொள்வது நம்முடைய கடமை என்பதைக் கருத்தில் கொண்டு அனைத்துப் பொருள்களையும் சுத்தமாகவும், அழகாகவும் வைத்துக் கொள்வோம்.
Tags:    

Similar News